தென்கொரியாவுடன் இணைந்து போர் பயிற்சி நடத்தக் கூடாது என அமெரிக்காவுக்கு வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக, தென்கொரியாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளபதி ஜேம்ஸ் துர்மனுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளதாக வடகொரிய அரசின் அதிகாரப்பூர்வ ஊடகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவும் தென்கொரியாவும் கூட்டாக இணைந்து அடுத்த மாதம் வருடாந்திர போர் பயிற்சியை (ஃபோல் ஈகிள்) நடத்தப் போவதாக அறிவித்துள்ளன. தங்கள் நாட்டின் மீதான விரோத மனப்பான்மை காரணமாகவே இந்தப் பயிற்சி நடத்தப்படுவதாக வடகொரியா குற்றம் சாட்டி உள்ளது. இதுபோன்ற அச்சுறுத்தல் காரணமாகவே, கடந்த 12ஆம் தேதி அணு ஆயுத சோதனை நடத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதாகவும் அந்த நாடு கூறியுள்ளது.
கடந்த 2006ஆம் ஆண்டுக்குப் பிறகு வடகொரியா 3 முறை அணு ஆயுத சோதனை நடத்தி உள்ளது. 1950-53இல் கொரிய போர் நடைபெற்றதையொட்டி, அப்பகுதியில் 28,000 ராணுவ வீரர்களை அமெரிக்கா நிறுத்தி உள்ளது. தென்கொரியாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது.