போரின் இறுதிக்கட்டத்தில் சிறிலங்காப் படைகளால் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் குறித்து, விசாரணை நடத்த கொழும்புக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், ஜெனிவாவில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வருவதற்கு முன்னதாக, இந்தியாவுடன் சமரசம் செய்து கொள்ள சிறிலங்கா திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜெனிவா அழுத்தங்களில் இருந்து சிறிலங்காவைக் காப்பாற்றக் கூடிய நிலையில் இந்தியாவே இருப்பதால், அதனுடன் பேசி, ஒரு இணக்கத்தை ஏற்படுத்த சிறிலங்கா முயற்சிப்பதாக கொழும்புத் தகவல்கள் கூறுகின்றன.
சிறிலங்காவின் நிலைப்பாட்டை புதுடெல்லிக்கு விளங்கப்படுத்தி, அதன் ஆதரவைத் திரட்டுவதற்காக விரைவில், சிறிலங்கா அரசின் உயர்நிலைக் குழு அல்லது பிரதிநிதி இந்தியா செல்லலாம் என்றும் தெரியவந்துள்ளது.
அண்மையில் புதுடெல்லி சென்ற சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பீரிசினால், புதுடெல்லியை வளைத்துப் போடு முடியாததால், மீண்டும் அவர் அங்கு அனுப்பப்படுவதற்கு வாய்ப்புகள் இல்லை என்று தெரிகிறது.
சிறிலங்கா அதிபரின் செயலர் லலித் வீரதுங்கவோ, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவோ அல்லது இவர்களை உள்ளடக்கிய குழுவொன்றோ புதுடெல்லிக்கு அனுப்பப்படலாம் என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக, புதுடெல்லியின் சாதகமான சமிக்ஞைக்காக கொழும்பு காத்திருப்பதாகவும் இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதேவேளை, சிறிலங்காவின் இந்தத் திட்டத்தை உறுதிப்படுத்தும் வகையில், ஜெனிவாவில் அமெரிக்கத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்படுவதற்கு முன்னதாக, இந்தியாவுடன் பேச்சு நடத்தப்படும் என்று சிறிலங்கா நம்புவதாக, ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
“போருக்குப் பின்னர் எட்டப்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து இந்தியாவிடம் சிறிலங்கா எடுத்துக் கூறும்.
நாம் இந்தியாவிடம் முறையிடப் போவதில்லை.
ஆனால், புனர்வாழ்வு, மீள்குடியமர்வு, உட்கட்டுமான மீளமைப்புகளில் நாம் எட்டியுள்ள சாதனைகள் குறித்து அவர்களுக்கு எடுத்துக் கூறுவோம்.“ என்று அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.