சுதந்திரமனிதனின்இறுதிப்பயணம்!-
இனத்தின் விடுதலை வேட்கை அவருள் தீவிரமாக பதிந்திருக்கிறது. கருத்துக்களோடு உடன்படாத மனிதர்களுடனும், இன்முகத்துடன் உரையாடும் ஆளுமை கொண்ட மாமனிதனாக வாழ்ந்திருக்கிறார் எங்கள் வைத்தியக் கலாநிதி மூர்த்தி.
மருத்துவராகவும், நண்பராகவும், தோழராகவும், அயலவராகவும் போராளியாகவும் எமக்கு காட்சி தந்தாய்.
உங்களை இழந்தோம் என்பது கட்டற்ற பெருவெளியில் கரைந்து போகக்கூடிய சிறு துயரமல்ல.
ஒடுக்கப்படும் மக்களின் விடுதலைக்காய் போராடும் ஒவ்வொரு மனிதனும், தனது சுயத்தை திடமாக்கி முன்னோக்கி நகரும் காற்றுவெளித் தளமெங்கும் எங்கள் தோழனின் நினைவலைகள் நிறைந்திருக்கும்.
அவரோடு பழகிய நாட்கள் பல. விலகியிருந்த நாட்கள் அதைவிட அதிகம். ஆண்டு பல கடந்து சந்தித்தாலும், அந்த இடைப்பட்ட காலத்தைப் புள்ளியாக்கிவிடும் அவரது மாறாத நேசம்.
பூச்சுக்கள் இல்லாத இந்த ஆளுமைக்கும், பல சோதனைகள் ஏற்பட்டதுண்டு. இருப்பினும் அவருக்குள் இருந்த மண்ணின் போர்க்குணம் ஒடுங்கவேயில்லை. அவர் விரும்பியதோ, எதிர்காலம் மீதான கனவுகளுடன் உறுதியுடன் பயணிக்க வேண்டும் என்பதாக இருந்தது.
சிங்களத்தின் கொடுஞ்சிறையில் கழித்த காலங்களில் ஏற்பட்ட வலிகளைவிட முள்ளிவாய்க்கால் பெரும்துயரம் அவரின் ஆளுமையில் பெரும்வலியை ஏற்படுத்தியது.
எல்லோரையும் போன்று அவரும் அழுதார். சில நாட்கள் நிலைகுலைந்து போனார். ஆனாலும் அதிலிருந்து விரைவாக மீண்டெழுந்தார். தூர்ந்து போகாத ஆளுமைகள், மறுபடியும் தம்மை தூக்கி நிமிர்த்திக் கொள்ளும் என்பதை அவரிடம் கண்டேன்.
எம்மில் பலருக்குச் சித்திக்காத விடயங்கள் அவருக்குக் கிடைத்திருக்கின்றன.
இளமைக்காலத்தில் உறவாடிய -வாழ்வியல் தத்துவார்த்தங்கள் குறித்து உரையாடல் நிகழ்த்திய புதுவை பாலா அண்ணன்,போன்ற பலர் இப்போது எம்மருகில் இல்லை. புலம்பெயர் வாழ்வுச்சூழல், எம்மைத் தனித்து விடப்பட்ட மனிதர்களாக மாற்றியுள்ளது. இங்கு புதிய உறவுகளை உருவாக்கக் கற்றுக்கொண்டுள்ளோம்.
ஆனாலும் மூர்த்தியின் போராட்டப்பாதைக்கு ‘ஏடு’ தொடக்கி வைத்த தமிழ் மாணவர் பேரவையின் தலைவர் பொன்.சத்தியசீலன் அண்ணா, அவரின் வாழ்வுப் பயணத்தின் இறுதியிலும் இணைந்திருந்தார். ‘வெண்புறா’ நிறுவனத்தின் நிர்வாகியாக, தோழர் மூர்த்தியோடு பணியாற்றியிருந்தார் சத்தி அண்ணன்.
கொடுத்துவைத்தமனிதன்.
எம் தேசத்தின் விடியலில்தான் இக் கொடுப்பனவுகள் எமக்குக் கிடைத்திடுமா?.
சக மனிதன் மீது கொண்ட நெருக்கமும் தலைவன் மேல் இருந்த அசாத்தியமான நம்பிக்கையும் தோழரின் பாதையில் சலனங்களை உருவாக்கவில்லை.
பிறர் கருத்தை மதிக்கும் பண்பும் இலக்கை நோக்கிய குறி தவறாத பார்வையும் செயற்பாட்டாளர்களை அரவணைத்துச் செல்லும் நேர்த்தியும் இவரின் ஆளுமைத்திறனின் உச்சம் எனலாம்.
மாணவர் பேரவை, தமிழரசுக் கட்சி என்று ஆரம்பிக்கிறது தோழர் மூர்த்தியின் அரசியல் பயணம். பள்ளிக் காலத்தில் சிறந்த பேச்சாளர். பேச்சுப் போட்டிகளில் வேறு ஒருவருக்கு முதல் பரிசு கிடைத்தால், அன்று சத்தியமூர்த்திக்கு சுகயீனம் என்று சொல்லிவிடலாம்.
சொந்த மண்ணில் அன்னியர் போல் வாழும் இழிநிலை கண்டு, பல இளையோர் 70 களின் ஆரம்பத்தில் தமிழ் தேசிய அரசியலில் தம்மை இணைத்துக் கொள்வதை திருக்கோணமலையில் காணலாம். அதில் பேச்சுத்திறன் கொண்ட மூர்த்தியை பலர் அணுகினர். முன்னிலை செயற்பாட்டளாராக உருவெடுத்தார்.
அரசியல் களத்தில், புதிய நண்பர்கள், புதிய திசைகளோடு வருகின்றனர். சிந்தனை தேடல் விரிவடைய, உபதிஸ்ஸ கமநாயக்க, லயனல் போப்பகே போன்றோரின் அறிமுகம் கிடைக்கிறது.
70 களின் இறுதிக் காலங்களில், ஒட்டுமொத்த இலங்கைப் புரட்சியில் நம்பிக்கை கொண்ட தென்னிலங்கைச் சக்திகளின் தொடர்பாடல்களை, தோழருக்கு ஏற்படுத்திக் கொடுக்கின்றார் நன்றாகத் தமிழ் பேசத் தெரிந்த பொன்சேக்கா என்கிற தோழர்.
இருப்பினும், பொதுவுடைமை, சமத்துவம், சமூக நீதி. என்கிற புரட்சிகர கருத்தியலை மீறி, தென்னிலங்கை சமூகத்தில் பௌத்த சிங்களப் பேரினவாதத்தின் அரசியல் கருத்தியல் அடி வேர் வரை ஆழமாக பாய்ந்திருந்தது.
77 இல் நிகழ்ந்த தமிழினத்தின் மீதான சிங்களத்தின் இன அழிப்புத் தாக்குதலும். பேரினவாதம் தன்னைப் பலப்படுத்திக் கொள்ளும்வகையில் உருவாகிய, நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதி முறைமையும் இன முரண்பாட்டை ஆழப்படுத்தியது.
80 களின் முற்பகுதியில் இலங்கையின் தேசிய இன முரண்பாடு இஅரசியல் மைய நீரோட்டத்தில் பிரதான பங்கினை வகிக்க தொடங்குகிறது. தோழர் மூர்த்தி போன்ற பல தமிழ் இடதுசாரிச் சிந்தனையுடையோரின் போக்கில் பாரிய மாற்றங்கள் உருவாகின.
மட்டக்களப்பு சிறை உடைப்பில் தப்பிச் சென்ற போராளிகளுக்கு மருத்துவ உதவி செய்வதில் இருந்து ஆரம்பமாகிறது. புரட்சிகர வன்முறை அரசியல் உடனான தோழரின் அறிமுகம்.
காட்டிக்கொடுப்பாளர்களும் அடிபணிவு அரசியலாளர்களும் மலிந்து போன எம்மினத்தில், தோழர் கைது செய்யப்படாமல் இருந்தால் அது ஆச்சரியத்திற்குரியது. சிங்களப் புலனாய்வாளர்களால் கைது செய்யப்பட்டு வெலிக்கடைச் சிறையில் அடைக்கப்பட்டார் சத்தியமூர்த்தி.
சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் புதிய திசையில் பயணிக்க ஆரம்பிக்கிறார்.
தமிழீழ விடுதலைப்புலிகள் உடனான உறவு, அவர்களால் தமிழகத்தில் இயக்கப்பட்ட மருத்துவ முகாம்களில் முழுநேரப் பணி, என்று வேகமெடுக்கத் தொடங்கியது வைத்திய கலாநிதி மூர்த்தியின் புது வாழ்வு.
தமிழர் புனர்வாழ்வுக்கழகம் ஆரம்பித்தபோது அதன் முதலாவது பொறுப்பாளராக மூர்த்தி நியமிக்கப்பட்டார். மிகவும் நேர்த்தியான வகையில் அவ்வமைப்பினை வழிநடாத்திச் சென்றார். இந்நிலையில் 87இல் புலம் பெயர் வாழ்வுச் சூழலில் தன்னை இணைத்துக் கொள்கிறார்.
இந்த வாழ்வைக்கூட அவர் விரும்பி ஏற்றுக்கொள்ளவில்லை. ‘நானும் உங்களோடு வன வாழ்விற்குள் இணைந்து கொள்கிறேன்’ என்று தேசியத் தலைவரிடம் கேட்டபோது, அவ் வேண்டுகோளை பணிவாக நிராகரித்த தலைவர், ‘வெளிநாட்டில்தான் உங்கள் பணி இனி அதிகமாக இருக்கப்போகிறது ‘ என்று கூறினாராம். இந்த விடயத்தை தோழர் மூர்த்தியே ஒரு தடவை என்னிடம் கூறியிருந்தார்.
பின்னர் பிரித்தானியாவில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்கு பெரும் நெருக்கடி தோற்றுவிக்கப்பட்டதும், அதனை அடுத்து ‘ வெண்புறா’ நிறுவனம் மூர்த்தி தலைமையில் உருவாக்கப்பட்டதும் வரலாறாகிவிட்டது.
மருத்துவ உதவி புரிந்தமைக்காக சிங்களம் சிறையிலடைத்த மனிதனுக்கு. அதே பணிக்காக பிரித்தானியாவால் ‘சுதந்திர மனிதன்’ -FREE MAN என்கிற உயர் விருது வழங்கப்பட்டது.
இவைதவிர, புலம் பெயர் அமைப்புக்களுக்கும் தமிழக ஈழ ஆதரவாளர்களுக்குமிடையிலான உறவினை பலமுறச் செய்வதிலும் காத்திராமான பங்கினை தோழர் மூர்த்தி வழங்கியிருந்தாகக் கூறப்படுகிறது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தலில் அவர் போட்டியிட்ட விடயமே, அவரின் கடைசி நேரடி அரசியல் களச்செயற்பாடாக இருந்தது. இவரிடமிருந்து கற்றுக் கொள்ள ஏராளம் உண்டு.
விடுதலைக் காற்றை சுவாசிக்க விரும்பிய சுதந்திர மானுடனின் மூச்சும் நிறுத்தப்பட்டு விட்டது. ஆனால் உன் நினைவுகளை மட்டும் எவராலும் தடுத்திட முடியாது.
போய் வா.. தமிழீழத் தலைநகரின் மைந்தனே…..
முற்ற வெளியும்,
கோணமாமலையும்,
கன்னியா ஊற்றும்.
வெருகல் ஆறும்,
இயற்கைத் துறைமுகமும்,
குளக்கோட்டன் குளமும் என்றும் உன்னை மறக்காது தோழனே!………..
<இதயச்சந்திரன்