நாம் தமிழர் கட்சி பொதுக் குழுக் கூட்டத் தீர்மானங்கள்
நாம் தமிழர் கட்சியின் இரண்டாவது பொதுக் குழுக் கூட்டம், சென்னையில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் இன்று நடந்தது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையில் நடந்த இப்பொதுக் குழுக் கூட்டத்தில் கட்சியின் பொதுக் குழு உறுப்பினர்கள் பேர் பங்கேற்றனர். பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள் வருமாறு:
தீர்மானம் 1
பன்னாட்டு விசாரணைத் தீர்மானத்தை இந்திய அரசு முன்மொழிய வேண்டும்.
ஜெனீவாவில் இந்த மாதம் இரண்டாவது வாரத்தில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமை மன்றத்தின் 22வது கூட்டத்தில், இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போரில் சிங்கள இனவெறி அரசு நடத்திய படுகொலைகள் பற்றிய உண்மைகளை முழுமையாக விசாரித்து, அக்குற்றங்களுக்கு சூத்ரதாரியாக இருந்து செயல்பட்டவர்களை அடையாளம் கண்டு தண்டிக்க வழிகோலும் தீர்மானத்தை இந்திய அரசின் பிரதிநிதி முன்மொழிய வேண்டும். இலங்கையில் வாழும் தமிழர்களின் வாழ்வில் முழுமையாக அக்கறைகொண்டுள்ளதாகவும், அவர்களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளதாக கூறிவரும் மத்திய காங்கிரஸ் அரசு, இலங்கையில் நடந்த போரில் நடந்த இனப் படுகொலை உள்ளிட்ட போர் குற்றங்கள் குறித்து சுதந்திரமான பன்னாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அத்தீர்மானத்தை முன்மொழிந்திட வேண்டும். அப்படிச் செய்யாமல், கடந்த ஆண்டு நடந்துகொண்டதுபோல், இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு வாக்களிப்பதுபோல், தீர்மானத்தின் தன்மையையே நீர்த்துப்போகச் செய்யும் நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது.
தீர்மானம் 2
தமிழினப் படுகொலை செய்த இலங்கைக்கு தமிழ்நாட்டில் தூதரக் எதற்கு?
தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் இளைய மகன் பாலசந்திரனை ஈவிரக்கமின்றி, மிருகத்தனமாக சுட்டுக்கொன்ற சிங்கள இனவெறி இராணுவம் மனிதாபிமானமற்ற ஒரு நாட்டின் வெறி்த்தனமான வெளிப்பாடாகும். பாலசந்திரனின் படுகொலை சிங்கள பெளத்த இனவாத வெறித்தனத்தின் அப்பட்டமான அத்தாட்சியாகும். இப்படி சிறுவன், சிறுமியர் என்றோ, வயதான பெரியவர்கள் என்றோ பாகுபாடுபாறாமல் தமிழர் அனைவரையும் படுகொலை செய்த சிங்கள பெளத்த இனவாத அரசிற்கு தாய் தமிழ் மண்ணான தமிழ்நாட்டில் தூதரகம் எதற்கு? சிங்கள விளையாட்டு வீரர்கள் பங்கேற்பார்கள் என்கிற ஒரே காரணத்திற்காக ஆசிய தடகளப் போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்த மறுத்த தமிழக முதல்வர் அவர்கள், தமிழ்நாட்டில் இலங்கை அரசின் தூதரகத்தை தமிழர்கள் இதற்கு மேலும் அனுமதிக்க மாட்டார்கள் என்பதை மத்திய அரசுக்கு தெரிவித்து, அதனை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களை வேவு பார்ப்பதைத் தவிர, வேறு எந்த வேலையும் அற்ற சிங்கள அரசுக்கு தமிழ்நாட்டில் துணைத் தூதரகம் செயல்படுவது தமிழினத்திற்கு அவமானமாகும். சென்னையிலிருந்து இலங்கை அரசின் துணைத் தூதரகத்தை அகற்றும் அமைதி வழி தொடர் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஈடுபடும்.
தீர்மானம் 3
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நாசமாக்கிடும் கெய்ல் எரிவாயுக் குழாய்கள் பதிப்பதை அனுமதியோம்.
கொச்சியில் இருந்து பெங்களூருவுக்கு இயற்கை எரிவாயு கொண்டு செல்லும் குழாய்களை மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான கெய்ல் மேற்கொண்டு வருவது, கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம, தர்ம்புரி, கிருஷ்ணகிரி ஆகிய தமிழ்நாட்டின் 7 மாவட்டங்களில் உள்ள 131 கிராமங்களில் விவசாய நிலங்களை திட்டமிட்ட நாசாமாக்கும் நடவடிக்கையாகும். பாசன கால்வாய்களை அமைப்பதற்கு என்று கூறி விவசாயிகளின் ஒப்புதலைப் பெற்று, இப்போது எரிவாயு கொண்டு செல்ல பெரும் குழாய்களை அமைக்க விளை நிலங்கை தோண்டி சிதைப்பது மக்கள் விரோத நடவடிக்கையாகும். நீதிமன்றத் தடையால் நிறுத்தப்பட்டுள்ள இத்திட்டத்தை, நிரந்தரமாக நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எமது மண்ணின் விவசாயிகளின் வாழ்வாதாரத்தையே பறிக்கும் இந்த அராஜக நடவடிக்கையை நாம் தமிழர் கட்சி அனுமதிக்காது. எமது உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் எம் மண்ணின் விவசாய பெருமக்களின் வாழ்வை சீர்குலைக்கும் எந்த வளர்ச்சித் திட்டத்தையும் ஏற்க முடியாது. எனவே, எரிவாயு குழாய் அமைக்கும் திட்டத்திற்கு மாற்றுப் பாதையை தேர்வு செய்து கெய்ல் நிறுவனம் நடைமுறைப்படுத்த வேண்டும். இல்லையேல், எமது மக்களின் வாழ்வாதாரத்தை காக்கும் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி வலிமையாக ஈடுபடும் என்று இந்தப் பொதுக் குழு எச்சரிக்கிறது.