500 ஆண்டுகளுக்கு முன்பு அடக்குமுறைக்கு பயந்து ஸ்பெயினில் இருந்து ஓடிய யூதர்களின் வாரிசுகளை திரும்பி வர அழைப்பு

500 ஆண்டுகளுக்கு முன்பு அடக்குமுறைக்கு பயந்து ஸ்பெயினில் இருந்து ஓடிய யூதர்களின் வாரிசுகளை திரும்பி வர அழைப்பு

ஐரோப்பிய கண்டத்தின் மத்தியத்தரைக் கடல் பகுதியில் அமைந்துள்ள ஸ்பெயின் நாட்டில், 15-ஆம் நூற்றாண்டில் 3 லட்சம் யூதர்கள் வாழ்ந்து வந்தனர். ரோமானியர்கள் ஆண்ட காலத்திலிருந்தே ஸ்பெயினில், யூதர்கள் வசித்து வந்தனர்.

உலகில் உள்ள யூதர்களிலேயே, மிகப்பெரிய சமூகமாக விளங்கிய அவர்கள் மீது, அப்போதைய ஸ்பெயின் ஆட்சியாளர்கள் அடக்குமுறையை ஏவியதால் அதற்கு பயந்து பல்லாயிரக் கணக்கானோர் நாட்டைவிட்டு வெளியேறினர். கத்தோலிக்க மதத்திற்கு மாறத் துவங்கிய இம்மக்கள் உலகெங்கிலும் வசித்து வருகின்றனர். தற்சமயம் ஸ்பெயின் நாட்டில் யூதர்கள், 40,000-50,000 எண்ணிக்கையில் மட்டுமே வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், 500 வருடங்களுக்கு முன்பு சென்ற அவர்களின் வாரிசுகளை வரவேற்க ஸ்பெயின் அரசு கடந்த நவம்பர் மாதம் ஒரு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.

இதுகுறித்து நீதித்துறை அமைச்சர் ஆல்பர்டோ ரூயிஸ் கல்லோர்டன் கூறியதாவது:-

ஸ்பெயினின் அசல் சமூகமாக வாழ்ந்த செபார்டிக் யூதர்கள் என்று அழைக்கப்படும் அவர்களின் வாரிசுகள், மீண்டும் திரும்பி வந்து ஸ்பெயினில் குடியேர தேவையான குடியுரிமை மற்றும் பாஸ்போர்டை விரைவில் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

யார் ஒருவர் தன்னை ஸ்பெயினின் யூத குடி வாரிசு என்று நிரூபிக்க முடியுமானல், அவர்கள் விரைவான முறையில் பாஸ்போர்ட் பெற்று ஸ்பெயின் நாட்டு குடிமகன் ஆக முடியும். எங்களின் நீண்ட பயணத்தில் ஸ்பெயின் நாடு தன்னுடைய ஒரு பகுதியை அறிந்துகொள்ள நேரிட்டது. அதற்கான சில சந்தர்ப்பங்கள் இப்போது வழங்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்த செய்தி, உலக முழுவதிலும் உள்ள செபார்டிக் யூதர்களிடையே காட்டுத் தீ போல் பரவியுள்ளது. ஸ்பெயினில் குடியேறுவது தொடர்பாக, முதல் மாதத்திலேயே பாஸ்போர்ட்டிற்கு வந்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை 6000-த்தை தாண்டியுள்ளது. இதில் பெயர் குறிப்பிடாத அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் அடங்குவர்.

Leave a Reply

Your email address will not be published.