ஜெனிவா மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டு வரப்படவுள்ள பிரேரணை தொடர்பாக அமெரிக்காவுடன் பேசமாட்டோம். அதற்கான அதிகாரமும் இல்லையென சவால் விடும் வகையில் தெரிவித்துள்ளார் அமைச்சரவைப் பேச்சாளரான ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல.நேற்று ஊடகத்துறை அமைச்சில் நடைபெற்ற வாராந்த செய்தியாளர் மாநாட்டில் ஜெனிவா விவகாரம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதில் அளிக்கும்போதே அமைச்சர் இப்படிக் கூறினார்.
இலங்கை விவகாரம் தொடர்பாக இந்தியாவில் பெரும் கொந்தளிப்பு ஏற்ப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்திலும் தமிழ் நாட்டிலும் தொடர்ச்சியாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் இவ்விடயம் தொடர்பாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அமெரிக்காவுடன் நேரடியாகப் பேசி ஒரு இணக்கப்பாட்டை ஏற்படுத்த வேண்டும் என ஆலோசனை கூறியுள்ளார்.
இது தொடர்பாக அரசின் நிலைப்பாடு என்ன? என்று அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதற்குப் பதிலளித்த அமைச்சர்,
எல்லா விடயங்களுக்கும் ஒரு தனிப்பட்ட அமெரிக்காவை நாட வேண்டிய அவசியமில்லை. அமெரிக்காவுக்கு மட்டுமல்ல ஜெனிவா மனித உரிமைகள் சபையில் அங்கம் வகிக்கும் சர்வதேச நாடுகள் அனைத்துக்குமே தெளிவுபடுத்தியுள்ளோம்.
மனித உரிமை விவகாரங்களுக்கு பொறுப்பானவரும் இலங்கைக் குழுவுக்குத் தலைமைதாங்கிச் செல்பவருமான பெருந்தோட்டக் கைத்தொழில் துறைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க அரசு மேற்கொண்டுவரும் அனைத்து நடவடிக்கைகள் தொடர்பாக நீண்ட அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.
அதனை உலக நாடுகள் பரிசீலனை செய்ய வேண்டும். அமெரிக்காவுடன் மட்டும் தனிப்பட்ட முறையில் பேசவேண்டிய அவசியம் இப்போது இல்லை என்றார். மற்றும் ஒரு கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர்,
எதிர்க்கட்சிகள் கூறுவது போல் நாம் இவ்விவகாரத்தை அசட்டை செய்ய வில்லை. மிகவும் அவதானத்துடன் இராஜதந்திர காய்நகர்த்தல்களை மேற்கொண்டு வருகின்றோம். தேவையான சகல ஆயத்தங்களை செய்து வருகின்றோம்.
அண்டை நாடான இந்தியாவுடன் தொடர்ந்து பேசி வருகின்றோம்.ஜெனிவா மாநாட்டில் ஏற்படும் சவால்களை எதிர் கொள்ளும் சக்தி எமக்குண்டு என்றார்.
அமெரிக்காவினால் கொண்டுவரப்படவுள்ள பிரேரணை மீது வாக்கெடுப்பு நடத்தும் படி கேட்கப்படமாட்டாது என்று செய்திகள் வெளியாகி உள்ளன. இது உண்மையா? என அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இங்கே ஒரு விடையத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது அமெரிக்கா இலங்கைக்கு எதிராக கொண்டுவரவுள்ள குற்றச்சாட்டுகள் என்ன என்பது எவருக்குமே தெரியாது. இன்னும் பிரேரணை முன்மொழியப் படவுமில்லை.
இப்படி இல்லாத, தெரியாத விடயம் பற்றி எப்படி அபிப்பிராயம் கூறுவது.பிரேரணை வந்தபின் பார்ப்போம். இந்தியாவும் இதே நிலைப்பாட்டில்தான் இருக்கிறது. நாம் விழிப்புடன்தான் இருக்கிறோம் என்று பதிலளித்தார்.