தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பு கோரி காலவரையற்ற உண்ணாநிலை போராட்டம்
இடம் : தேசிய அய்க்கப் அரங்கம் லயோலா கல்லூரி அருகில் சென்னை. கடந்த 2009ம் ஆண்டில் உலகமே நினைத்து பார்க்காத வகையில் தமிழீழத்தில் தமிழ் இனப்படுகொலை நடந்தேறியுள்ளது. இந்த இனப்படுகொலையை தடுத்து நிறுத்த வேண்டிய சர்வதேச சமூகமும் ஐ.நா மன்றமும் தங்களது கடமையில் இருந்து தவறியுள்ளன. நான்கு வருடங்களுக்கு பிறகு இன்றும் ஐ.நா மன்றமும் சர்வதேச சமூகமும் இந்த இனப்படுகொலையை மூடி மறைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. நாங்கள் இந்தியாவில் பிறந்த இந்திய குடிமகன்களாக இருந்த பொழுதும் பேசும் மொழியால் தமிழர்களாய் எங்கள் சொந்த இனத்தின்மீது தமிழீழத்தில் நடந்த இனப்படுகொலைக்கு இந்திய மத்திய அரசாங்கம் துணை சென்றதை கண்டிக்கிறோம். தமிழீழ இனப்படுகொலைக்கு துணை சென்றது மட்டுமில்லாமல் தொடர்ந்து தமிழீழ தமிழர்களுக்கு கிடைக்க வேண்டிய நீதியை தடை செய்து வரும் இந்திய அரசை நாங்கள் கண்டிக்கின்றோம். இந்த நூற்றாண்டில் யாராலும் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு பெரும் இனப்படுகொலையை இலங்கை அரசாங்கம் செய்துள்ளது. 12 வயதே ஆன சிறுவன் பாலச்சந்திரனை சர்வதேச விதிகளை மீறி சுட்டுக் கொன்றுள்ளது இலங்கை ராணுவம். மேலும் ஒரு இனத்தையே ஒட்டுமொத்தமாக அழிக்கும் நோக்கத்துடன் இன்றும் செயல்பட்டு வருகிறது என்பதை யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்களை எந்தவித காரணமும் இல்லாமல் கைது செய்ததை வைத்து அறிந்து கொள்ளலாம். ஆனால் சர்வதேச சமூகமும் ஐ.நா மன்றமும் இன்று வரை வாய்மூடி மெளனமாகவே இருந்து வருகிறது. இவற்றையெல்லாம் கண்டிக்காமல் இந்திய அரசும் இலங்கையுடன் தொடர்ந்து நட்பு பாராட்டி வருகிறது. தமிழீழத்தில் மக்கள் வாழ்வது என்பது போருக்கு பின் இந்த மூன்று ஆண்டுகளில் மிகவும் சிரமமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்துக் கொண்டே உள்ளது இராணுவம் மக்கள் வாழும் பகுதியில் நிலைகொண்டு 5 பொதுமக்களுக்கு ஒரு இராணுவ வீரன் என்ற விகிதத்தில் நிறுத்திவைக்கப்பட்டு ஆயுதங்களுக்கு கீழ் வாழ்க்கையை நடத்தும் அவலத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இவைகள் அனைத்தையும் சர்வதேச சமூகமும் ஐ.நா மன்றமும் வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளது. இந்த நிலை தொடர்வது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் மக்களின் வாழ்க்கையை மேம்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். தமிழீழ மக்களை காப்பாற்ற வேண்டுமென்றால் இந்திய அரசு இலங்கை அரசுக்கு எதிராக தன் நிலைப்பாட்டை உறுதியாக அறிவிக்க வேண்டும் சர்வதேச சமூகமும் ஐ.நா மன்றமும் தலையிட வேண்டும். அப்பொழுது தான் இந்நிலை மாறும். கோரிக்கைகள் :
1. இலங்கையில் நடைபெற்றது வெறும்போர்குற்றமோ மனித உரிமைமீறலோமட்டுமல்ல அதுதிட்டமிடப்பட்ட இனப்படுகொலை.
2. சர்வதேசவிசாரணையும் பொதுவாக்கெடுப்புமே தமிழ்மக்களுக்கான ஒரேதீர்வு. சர்வதேசவிசாரணையும் தனித்தமிழ் ஈழ பொதுவாக்கெடுப்பும் நடத்துவதற்கான தீர்மானத்தை இந்திய அரசுமுன்மொழிந்து கொண்டுவரவேண்டும்
3. சிங்களஇனவெறிஅரசின்துணைத்தூதரகத்தை தமிழ் மண்ணில் இருந்து வெளியேற்ற தீா்மானம் கொண்டுவரவேண்டும். மேலும் இந்திய அரசு இலங்கை உடனான அனைத்து அரசாங்க உறவுகளையும் துண்டிக்கவேண்டும்.
4. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று இலங்கை அரசின் மீது இந்திய அரசு பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்
5. உலகத்தமிழா்களின்பாதுகாப்பை உறுதிச்செய்ய தமிழ்நாடு அரசு சார்பாக வெளியுறவுத் துறையை உருவாக்க வேண்டும்.
6. ஆசியநாடுகள் எதுவும் சா்வதேச விசாரணைக்குழுவில் இடம்பெறக்கூடாது.
7. தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.
8. ஈழத் தமிழா் பிரச்சனைக்கு இந்திய அரசு தீர்வு காணாவிட்டால் தமிழகத்திலிருந்து எந்த வரியையும் செலுத்தமாட்டோம்.இந்த பிரச்சாரத்தில் மாணவா்கள் நாங்கள் தீவிரமாக ஈடுபடுவோம்.