இலங்கை அதிபர் ராஜபக்சேவை கண்டித்து சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் 9 பேர் 2வது நாளாக இன்றும் உண்ணாவிரதம் இருக்கின்றனர். போலீஸ் கெடுபிடியை அடுத்து கோயம்பேட்டில் உண்ணாவிரதத்தை மாணவர்கள் இன்று தொடர்கின்றனர்.
இலங்கை இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணை மற்றும் தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி லயோலா கல்லூரி மாணவர்கள் மேற்கொண்டு வரும் சாகும் வரை உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியிருக்கிறார்.
கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தாய்த்தமிழகமே ஒன்றாகத் திரண்டுள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சியினரும் பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
அந்த வரிசையில் சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள், கறுப்புச்சட்டை அணிந்து 8.3.2013 காலை 10.30 மணி அளவில் கல்லூரி வளாகத்திற்குள்ளேயே ஒன்று திரண்டு கையில் ஈழத்தில் நடைபெற்ற படுகொலைகளைச் சித்தரிக்கும் படங்கள் மற்றும் வாசகங்கள் எழுதப்பட்ட அட்டைகளை கையிலே ஏந்தி, ஈழத் தமிழர்கள் படுகொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தி இருக்கிறார்கள்.
அவர்கள் அங்கே பேசும்போது, இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தமிழக மாணவர்கள் எந்த அளவிற்கு தீவிரம் காட்டினார்களோ, அதே தீவிரத்தை ஈழத் தமிழர் பிரச்சினையிலும் காட்டுவதாக இருக்கிறோம் என்றும், மத்திய அரசு கோரிக்கைக்கு இணங்கி வராவிட்டால், அடுத்த கட்டமாக தமிழகம் முழுவதும் உள்ள எல்லா கல்லூரி மாணவர்களையும் ஒருங்கிணைத்து மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம் என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.
லயோலா கல்லூரி மாணவர்களின் இந்த ஆர்ப்பாட்டத்தின் தொடர்ச்சியாக, லயோலா கல்லூரி மாணவர்கள் 8 பேர் ஈழத் தமிழர் பிரச்சினையை முன்வைத்து 7.3.2013 காலை 10 மணி முதல் உண்ணாவிரதம் மேற்கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தியும் வந்துள்ளது.
ஈழத் தமிழர்களைக் காக்க தாய்த்தமிழகத்திலே உள்ள ஒவ்வொரு இளைஞர்களுடைய உயிரும் முக்கியம் என்பதை உணர்ந்து சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் என்பதை மாற்றிக் கொண்டு வேறு வகை அறப்போராட்டங்களில் மாணவர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்வது பிரச்சினைக்கு மேலும் ஆக்கத்தைத் தரும்.
இதனால் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்கள் உடனடியாக அதனை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று மிக அன்புடன் கேட்டுக் கொள்கிறேன என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் ஆனால் இந்த கோரிக்கையை உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்கள் ஏற்க மறுத்துவிட்டனர். கருணாநிதியின் இந்தக் கோரிக்கை மாணவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாணவர்களின் உக்கிரப்போராட்டம்
இலங்கை அரசு மீது சர்வதேச விசாரணை, தமிழ் ஈழம் அமைக்க பொது வாக்கெடுப்பு கோரி சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம். இதே கோரிக்கையை முன்னிறுத்தி மாணவர்கள் பிரிட்டோ, சதீஷ், மணி, திலீப் உள்ளிட்ட 9 மாணவர்கள் கல்லூரி வளாகத்தின் உள்ளேயே தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி இருக்கிறார்கள்.
லயோலா கல்லூரிக்கு அருகே இலங்கை தூதரகம் இருப்பதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தமிழீத்திற்கான பொது வாக்கெடுப்பை நடத்தக் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுக்கும் இலயோலாக் கல்லூரி மாணவர்களின் அறிக்கை : கடந்த 2009ம் ஆண்டில் உலகமே நினைத்து பார்க்காத வகையில் தமிழீழத்தில் தமிழ் இனப்படுகொலை நடந்தேறியுள்ளது.
இந்த இனப்படுகொலையை தடுத்து நிறுத்த வேண்டிய சர்வதேச சமூகமும் ஐ.நா மன்றமும் தங்களது கடமையில் இருந்து தவறியுள்ளன. நான்கு வருடங்களுக்கு பிறகு இன்றும் ஐ.நா மன்றமும் சர்வதேச சமூகமும் இந்த இனப்படுகொலையை மூடி மறைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. நாங்கள் இந்தியாவில் பிறந்த இந்திய குடிமகன்களாக இருந்த பொழுதும் பேசும் மொழியால் தமிழர்களாய் எங்கள் சொந்த இனத்தின்மீது தமிழீழத்தில் நடந்த இனப்படுகொலைக்கு இந்திய மத்திய அரசாங்கம் துணை சென்றதை கண்டிக்கிறோம்.
தமிழீழ இனப்படுகொலைக்கு துணை சென்றது மட்டுமில்லாமல் தொடர்ந்து தமிழீழ தமிழர்களுக்கு கிடைக்க வேண்டிய நீதியை தடை செய்து வரும் இந்திய அரசை நாங்கள் கண்டிக்கின்றோம். இந்த நூற்றாண்டில் யாராலும் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு பெரும் இனப்படுகொலையை இலங்கை அரசாங்கம் செய்துள்ளது. 12 வயதே ஆன சிறுவன் பாலச்சந்திரனை சர்வதேச விதிகளை மீறி சுட்டுக் கொன்றுள்ளது இலங்கை ராணுவம்.
மேலும் ஒரு இனத்தையே ஒட்டுமொத்தமாக அழிக்கும் நோக்கத்துடன் இன்றும் செயல்பட்டு வருகிறது என்பதை யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்களை எந்தவித காரணமும் இல்லாமல் கைது செய்ததை வைத்து அறிந்து கொள்ளலாம். ஆனால் சர்வதேச சமூகமும் ஐ.நா மன்றமும் இன்று வரை வாய்மூடி மெளனமாகவே இருந்து வருகிறது. இவற்றையெல்லாம் கண்டிக்காமல் இந்திய அரசும் இலங்கையுடன் தொடர்ந்து நட்பு பாராட்டி வருகிறது.
தமிழீழத்தில் மக்கள் வாழ்வது என்பது போருக்கு பின் இந்த மூன்று ஆண்டுகளில் மிகவும் சிரமமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்துக் கொண்டே உள்ளது இராணுவம் மக்கள் வாழும் பகுதியில் நிலைகொண்டு 5 பொதுமக்களுக்கு ஒரு இராணுவ வீரன் என்ற விகிதத்தில் நிறுத்திவைக்கப்பட்டு ஆயுதங்களுக்கு கீழ் வாழ்க்கையை நடத்தும் அவலத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இவைகள் அனைத்தையும் சர்வதேச சமூகமும் ஐ.நா மன்றமும் வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளது. இந்த நிலை தொடர்வது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் மக்களின் வாழ்க்கையை மேம்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். தமிழீழ மக்களை காப்பாற்ற வேண்டுமென்றால் இந்திய அரசு இலங்கை அரசுக்கு எதிராக தன் நிலைப்பாட்டை உறுதியாக அறிவிக்க வேண்டும் சர்வதேச சமூகமும் ஐ.நா மன்றமும் தலையிட வேண்டும். அப்பொழுது தான் இந்நிலை மாறும்.
கோரிக்கைகள் :
1. இலங்கையில் நடைபெற்றது வெறும்போர்குற்றமோ மனித உரிமைமீறலோமட்டுமல்ல அதுதிட்டமிடப்பட்ட இனப்படுகொலை.
2. சர்வதேசவிசாரணையும் பொதுவாக்கெடுப்புமே தமிழ்மக்களுக்கான ஒரேதீர்வு. சர்வதேசவிசாரணையும் தனித்தமிழ் ஈழ பொதுவாக்கெடுப்பும் நடத்துவதற்கான தீர்மானத்தை இந்திய அரசுமுன்மொழிந்து கொண்டுவரவேண்டும்
3. சிங்களஇனவெறிஅரசின்துணைத்தூதரகத ்தை தமிழ் மண்ணில் இருந்து வெளியேற்ற தீா்மானம் கொண்டுவரவேண்டும். மேலும் இந்திய அரசு இலங்கை உடனான அனைத்து அரசாங்க உறவுகளையும் துண்டிக்கவேண்டும்.
4. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று இலங்கை அரசின் மீது இந்திய அரசு பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் 5. உலகத்தமிழா்களின்பாதுகாப்பைஉறு திச்செய்ய தமிழ்நாடு அரசு சார்பாக வெளியுறவுத் துறையை உருவாக்க வேண்டும்.
6. ஆசியநாடுகள் எதுவும் சா்வதேச விசாரணைக்குழுவில் இடம்பெறக்கூடாது.
7. தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.
8. ஈழத் தமிழா் பிரச்சனைக்கு இந்திய அரசு தீர்வு காணாவிட்டால் தமிழகத்திலிருந்து எந்த வரியையும் செலுத்தமாட்டோம்.
இந்த பிரச்சாரத்தில் மாணவா்கள் நாங்கள் தீவிரமாக ஈடுபடுவோம்.