இலங்கை விவகாரத்தில் எப்போதுமே அடக்கி வாசித்துக் கொண்டிருக்கும் தமிழக காங்கிரஸ் கட்சியினர், திடீரென திருச்சியில் பொங்கி எழுந்துள்ளனர். ஈழத் தமிழருக்கு எதிராக செயல்படுகிறார் என்ற கோஷத்தோடு, சுப்பிரமணியம் சுவாமிக்கு எதிராக தமிழக காங்கிரஸ் கட்சியினர் திருச்சியில் போராட்டம் நடத்தினர்.
திருச்சி ரயில் நிலையம் அருகே இன்று ஒன்று திரண்ட காங்கிரஸ் கட்சியினர், ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
“தமிழருக்குத் துரோகம் செய்யும் சுப்பிரமணியம் சுவாமியை தமிழ்நாட்டுக்குள் விடக் கூடாது” என்றும், “இந்தியாவில் ஈழத் தமிழருக்கு ஆதரவாக குரல்கள் எழும் நேரத்தில் துரோகம் செய்கிறார் சுப்பிரமணியம் சுவாமி” என்றும் முழக்கமிட்டனர்.
பின்னர் சுப்பிரமணியம் சுவாமியின் உருவப் படத்தை ‘துரோகி ஒழிக’ என்ற முழக்கங்களுடன் எரித்த காங்கிரஸ் கட்சியினர், “சுப்ரமணியம் சுவாமியை நாடுகடத்த (!) வேண்டும்” எனவும் கோஷம் எழுப்பினர்.
திருச்சியில் இன்று நடைபெற்ற இந்த சம்பவம், இரு ஆச்சரியங்களை ஏற்படுத்தியுள்ளது.
1) சர்வதேச அரசியலில் என்ன நடக்கிறது என்ற விழிப்புணர்ச்சி ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் சுவாமி மேற்கொண்ட சந்திப்பு, திருச்சி வரை புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.
2) தமிழக காங்கிரஸ் கட்சியினரும் ஈழத் தமிழருக்கு ஆதரவாக களம் இறங்கியது!







