பெரும்பாலும் 5 வயது வரை உள்ள குழந்தைகள் இரவு தூங்கும் போது படுக்கையில் சிறுநீர் கழிப்பது என்பது இயல்பானதாகும். ஆனால் சிலர் 15 வயதாகியும் கட்டுப்பாடு இன்றி படுக்கையை நனைப்பது என்பது பெற்றோர்களுக்கு வேதனையான விஷயமாகும்.
இக்காலத்தில் பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு செல்பவராக இருக்கின்றனர். இந்நிலையில் 15 வயதாகியும், படுக்கையில் சிறுநீர் கழிப்பதால் தினமும் துவைத்தல், காய வைத்தல் என்பது கடினமானதாகும். இந்த குழந்தைகளை உறவினர் வீட்டிற்கோ, திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு அழைத்து செல்லவது கடினமான பணியாகிறது.
காலையில் சிறுநீர் வந்தால் உணரக்கூடிய குழந்தைகள், இரவில் தன்னிச்சையாக படுக்கையை நனைக்கின்றனர். இந்த வகையான குழந்தைகளுக்கு என்ன பிரச்னை என்று முதலில் ஆராய வேண்டும். சில குழந்தைகளுக்கு “பிளேடர்” (Bladder) பகுதி பலவீனமாக இருக்கலாம். இப்பகுதி வழியாக சிறுநீர் நிறைந்து, மூளைக்கு உணர்வு ஏற்பட்டு, உடனே குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல வேண்டும் என்று எண்ணம் தோன்றும். ஆனால் இந்த பகுதி முதிர்ச்சியடையாததால் இரவில் உணர்வை இழக்கின்றனர்.
நீரிழிவு நோய் இருந்தாலும் இவ்வாறு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. ஐந்து வயதுக்கு மேல் இந்த பிரச்னை உள்ள குழந்தைகளை, மருத்துவரிடம் அணுகி ஆலோசனை பெறலாம். நரம்பு கோளாறு இருந்தாலும், சிறுநீர் கோளாறு ஏற்பட வாய்ப்புள்ளது. குழந்தைக்கு பிரச்னை என்ன என்பதை அறிந்து, அதற்கேற்ப சிகிச்சை முறையை பின்பற்றலாம். பெற்றோர்கள் 15 வயது வரை, காத்திருக்காமல் உடனே மருத்துவரை அணுகி, சிகிச்சை பெறுவதன் மூலம் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பிரச்னையை சரிசெய்யலாம்.