பிரேரணை குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை கிடையாது – இலங்கை

பிரேரணை குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை கிடையாது – இலங்கை

இலங்கைக்கு எதிரான ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்படவுள்ள பிரேரணை தொடர்பில் இலங்கை அரசாங்கம் அமெரிக்காவுடன் எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் ஈடுபட போவதில்லையென ஜெனீவாவுக்கான இலங்கைத் தூதுவர் ரவிநாத் ஆரியசிங்க மனித உரிமைகளுக்கான அமெரிக்க தூதுவர் எலின் டொனோவிடம் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

பிரேரணையில் குறிப்பிடப்பட்டிருக்கும் அம்சங்களை இலங்கை அரசாங்கம் முற்றாக நிராகரிப்பதாக டொனோவிடம் சுட்டிக்காட்டிய ஆரியசிங்க, இது தொடர்பில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கான எந்தவொரு உள்நோக்கமும் இலங்கைக்கு இல்லையெனவும் வலியுறுத்தியுள்ளார்.

“நல்லிணக்கத்தை ஊக்குவித்தல் மற்றும் இலங்கையின் பொறுப்பு கூறல்” தொடர்பில் அமெரிக்காவினால் முன்வைக்கப்படவுள்ள பிரேரணை தொடர்பான கலந்துரையாடலில் கலந்து கொள்ளுமாறு ரவிநாத் ஆரியசிங்கவுக்கு விடுக்கப்பட்டிருந்த அழைப்பினை ஏற்று அவர் அதில் பங்குபற்றிய போதே இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை மேற்கண்டவாறு பகிரங்கமாக அறிவித்தார்.

இலங்கைக்கெதிராக அமெரிக்கா கொண்டுவரவுள்ள பிரேரணையின் பிரதிகளை அதன் உறுப்புரிமை நாடுகளுக்கு வழங்கியுள்ளது. இந்நிலையில் எதிர்வரும் 14ம் ஆம் திகதி இப்பிரேரணை ஜெனீவா விலுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படும்.

இதற்கிடையில் ஜெனீவாவில் மனித உரிமைகளுக்கான அமெரிக்கத் தூதுவர் டொனோ தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ரவிநாத் ஆரியசிங்க பிரேரணையின் உள்ளடக்கம் தொடர்பில் இலங்கையின் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இந்தக் கலந்துரையாடலில் பல அரச சார்பற்ற நிறுவனங்களும் கலந்து கொண்டிருந்தன.

இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள பிரேரணை முற்றிலும் நியாயமற்றது. பக்கச்சார்பானது அரசியல் மயப்படுத்தப்பட்டதெனவும் ஆரியசிங்க இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார். இந்த பிரேரணையின் உள்ளடக்கங்கள் மனித உரிமைகள் பேரவையின் அடிப்படைக் கொள்கைகளுக்கு முரணானதாக அமைந்துள்ளது என்பதனையும் அவர் இதன் போது விளக்கி கூறினார்.

மேலும் இவ்வாறான செயற்பாடுகள் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் குறுகியகால மற்றும் நீண்டகால அபிவிருத்தி திட்டங்களில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துமெனவும் அவர் இக்காலத்துரையாடலில் பங்குபற்றிய ஏனைய உறுப்புரிமை நாடுகளின் பிரதிநிதிகளுக்கு எச்சரிக்கை செய்தார்.

இதேவேளை அமெரிக்க அரசாங்கம் மற்றும் பிரேரணைக்கான அனுசரணை யாளர்கள் இலங்கையில் அர்ப்பணிப்புடன் முன்னெடுக்கப்பட்டு வரும் நல்லிணக்கச் செயற்பாடுகள் ஐக்கிய நாடுகள் சபை, மனித உரிமைகள் பேரவை அதன் உயர் ஸ்தானிகர், உயர்ஸ்தானிகர் அலுவலகம் ஆகியவற்றுடன் இலங்கை வைத்திருக்கும் நல்லுறவு மற்றும் அதன் இருதரப்பு செயற்பாடுகளுக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளமாட்டார்களென தான் நம்புவதாகவும் ஆரியசிங்க தெரிவித்தார்.

மனித உரிமைகள் பேரவையின் ஏனைய உறுப்புரிமை நாடுகள் இலங்கை தொடர்பில் காட்டும் அக்கறை மற்றும் ஆர்வத்துக்கு மதிப்பு அளிக்கும் வகை யிலேயே தான் இந்தக் கலந்துரையாடலில் பங்குபற்றியதாக சுட்டிக்காட்டிய ஆரியசிங்க, ஆனால் இங்கு நாடுகளுக்குடையிலான ஒருமைப்பாட்டு கொள்கைகளுக்கு முரணாகவே அனைத்தும் இடம்பெற்று வருவதாகவும் கூறியுள்ளார்.

கடந்த வருடம் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணையினை நினைவு கூர்ந்த இவர், அதன் போது உயர்ஸ்தானிகர் அடிப்படைக் கொள்கைகளையும் மீறி எதேச்சதிகாரமாக செயற்பட்டாரெனவும் தெரிவித்தார்.

இதற்கு எடுத்துக்காட்டாக, நாட்டில் 30 வருட காலமாக நிலவி வந்த பயங்கரவாதச் செயற்பாடுகளுக்குப் பின்னர் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளுக்கமைய முன்னெடுக்கப்பட்டு வரும் நல்லிணக்கச் செயற்பாடுகளுக்கு அவர் எந்தவொரு அடையாளமும் வழங்கவில்லையெனவும் ஆரியசிங்க குறிப்பிட்டார்.

அத்துடன் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையின் உள்ளடக்கங்களை கவனத்திற் கொள்கையில், இது பிரேரணைக்குரிய ஒழுங்கமைப்பிலிருந்து வெகு தொலைவில் அமைந்துள்ளதுடன் கடந்த வருடம் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கும் இதற்குமிடையில் எவ்வித தொடர்பும் இல்லையென தெரிவித்தார்.

இலங்கைக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதன் மூலம் ஏனைய நாடுகளிலிருந்து எமது நாட்டை தனிமைப்படுத்துவதை உள்நோக்கமாகக் கொண்டே அமெரிக்கா செயற்பட்டு வருகிறது எனவும் அவர் இதன் போது கூறினார்.

பிரேரணை தொடர்பிலான இலங்கை அரசாங்கத்தின் முழுமையான அதிருப்தியை அமெரிக்கத் தூதுவர் டொனோவிடம் வெளியிட்ட ஆரியசிங்க, இலங்கையில் தொடர்ந்தும் நல்லிணக்கச் செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பில் செயற்பாட்டு திறன் மிக்க பேச்சுவார்த்தையில் ஈடுபட விரும்பும் அனைத்து தரப்பினருடனும் இணைந்து செயற்பட இலங்கை அரசாங்கம் தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இச்செயற்பாடுகள் தொடரும் அதேவேளை, மனித உரிமைகள் பேரவையின் உறுப்புரிமை மற்றும் பார்வையாளர் நாடுகள் இலங்கையின் அபிவிருத்திச் செயற்பாடுகளை வெளிப்படையாக திறந்த மனதுடன் கண்டு கொள்வரென எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜனீவாவிலுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவின் பிரேரணை எதிர்வரும் 21 ஆம் திகதி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.