Search

தமிழக மாணவர்களின் ஆதரவுக்கு நன்றி – தமிழீழ அனைத்துப் பல்கலைக்கழக மாணவ சமூகம்

அன்பின் தாய்த்தமிழக் கல்விச் சமூகத்தினர் மற்றும் இளையோரிற்கு,

அடக்குமுறையின் இடையில் இருந்து ஈழத்து அனைத்துப் பல்கலைக்கழக மாணவ சமூகத்தினர் வரையும் அன்பு மடல். உங்களை கட்டித்தழுவி வாழ்த்தத் துடிக்கும் எமக்கு அவ்வாறே செய்ய இயலாது, சிங்கள பேரினவாதத்தின் இரும்புக் கரங்களுக்குள் எங்கள் நாட்கள் கழிகின்றன.

நவீன அடிமை யுகம் ஒன்றை உருவாக்கும் சிங்கள பேரினவாதத்தின் சிந்தனைக்குள் இருந்து இதை கண்ணீரோடு வரைகின்றோம், ஒரு நாள் விடியும் அன்று உங்களை நேரில் வாழ்த்தி வணங்குவோம் என்னும் நம்பிக்கையுடன்!

ஈழ விடுதலைக்கும் ஈழத்து மக்களாகிய எங்களின் உரிமைக்குமாய் தமிழகம் மற்றும் பாரதத்தின் பல பிரதேசங்களிலும் பல்கிப் பெருகிவரும் வழிப்புணர்வும், ஆதரவும் எமக்கு பெரும் ஆறுதலைத் தந்துள்ளன. குறிப்பாக இளையோர் உங்கள் வாத்வீக வழியிலான கவன ஈர்ப்புக்களும், மற்றும் வழிப்புணர்வு நடவடிக்கைகளும் எங்களை அநாதைகள் இல்லை, குரல் கொடுக்க கோடிகளாய் நீங்கள் உள்ளீர்கள் எனச் சொல்ல வைத்துள்ளது.

காலணித்துவ விடுதலையின் பின்னர், முனைப்புடன் சிறீலங்கா அடிமையாக்கத் துடிக்கும் ஆக்கிரமிக்கத் துடிக்கும் ஈழத்தமிழர்கள் எங்கள் விடுதலைப் போராட்டங்கள் பங்கரவாதம் எனச் சாயம் பூசப்பட்டு பன்னாட்டு அரங்கில் பொய்ப் பரப்புரைக்குப் பலியாகிப் போனது தொடக்கம், தங்களால் பெருக்கப்பட்டுவரும் ஈழவிடுதலை முழக்கம் ஊரெல்லாம் ஒலிக்கச் செய்துகொண்டுள்ள உங்களுக்கு எமது ஈழ மண்ணின் ஒவ்வொரு குடிமகனும் கடமைப்பட்டுள்ளான்.

இனத்தை வேரோடு கறுவறுக்கக் கங்கணம் கட்டி, பன்னாட்டு உதவிகளோடு திட்டமிடும் சிறீலங்கா பேரினவாதம் எங்களை அழிக்க முன்னர் எங்களைக் காப்பாற்ற யார் வருவார் என ஏங்கித் தவித்திருக்கின்றோம். பாரத தேசம் எங்கள் தாய்த் தேசம், தந்தை தேசம் என்று எம் முன் நின்றோர் சொல்லியே சென்றுள்ளனர். ஏங்களை கைப்பிடித்து வழிகாட்டி வளர்த்துவிட்ட தேசம் எங்களை கைவிடாது என்று அவர்கள் உறுதிபட நம்பிச் சென்றுள்ளனர். தங்களின் எழுச்சி அவர்களின் கூற்றினை மெய்ப்பிக்கின்றது எங்களுக்குள் ஒரு உத் வேகத்தை உருவாக்குகின்றது.

ஆயுத வழியிலான ஈழ தேசிய விடுதலைப் போராட்டம் மௌனிக்கப்பட்டதில் இருந்து எம்மை அடிமை கொள்ள நினைக்கும் சிறீலங்காவின் செயற்பாடுகளுக்கு நீங்கள் தொடர்ந்து காட்டிவரும் எதிர்ப்பினால்தான் இன்னும் எம்மீதான முழு அளவு இனச்சுத்திகரிப்பை சிறீலங்கா மேற்கொள்ள முடியாது நிற்கின்றது.

தங்களது நியாயமான வேண்டுதல்களான இறையாண்மைமிக்க சுயாட்சி, மற்றும் ஏனைய அனைத்து விடயங்களுக்காக நாங்களும் ஏங்கி நிற்கின்றோம். எதிர்காலப் பாதை என்ன என்று இடை நடுவில் விடப்பட்ட ஏதிலிகளாய் எங்கள் வாழ்க்கை தொடருகின்றது. கசாப்புக்கடைக் கடாக்களாக சிங்கள பேரினவாதம் நினைக்கும்போது அறுக்கக்கூடிய, அழிக்கக்கூடிய ஏதிலிகளாக்கப்பட்டு திறந்தவெளிச் சிறைக்குள் நாட்கள் கழிகின்றன.

உரிமையைப் பேச முடியாது, எழுத முடியாது, ஒன்றகூடிக் கேட்க முடியாது, ஏன் கற்றுக்கொள்ளக்கூட முடியாது, தவறை தட்டிக்கேட்க முடியாது, சிங்களவன் முதல்குடி, தமிழன் கடைக்குடி என்னும் ஒரு நவீன அடக்குமுறைக்குள் நாம் இருக்கின்றோம்.

தங்களின் மேலான எழுச்சியும், விரைவான விழிப்பூட்டலும் ஈழத்தமிழர் பற்றியும், அவர்களின் விடுதலை பற்றியும் உலகெங்கும் உள்ள தவறான புரிந்துணர்வுகளைக் கழைந்து எங்களை இன அழிவில் இருந்து மீட்கும். எங்கள் இளையவர்கள் தமிழீழ தேசத்தில் மகிழ்வோடு சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க வழி சமைக்கும்.

இன்று இந்த மடலை கூடிவரையும் நாம் நாளை காணாமல் போகலாம், அல்லது கொல்லப்பட்டு வீதியில் வீசப்பட்டிருக்கலாம். சகோதரிகள் மானம் சூறையாடப்பட்டு அவர்கள் சிதைக்கப்படலாம். எம் பெற்றோர் பழிவாங்கப்பட்டு கொல்லப்படலாம். இதுவே தற்போது ஈழத்தின் நியதி.

மானத்தோடு வாழும் கனவோடு உள்ள நாம் தங்களின் வேகத்தோடு எம் விடுதலைக்கான போராட்டத்திற்கான ஆதரவோடும், எங்கள் எதிர்காலம் சிறப்பாக அமைக்கப்படும் என்னும் நம்பிக்கையோடும், இணையும் நாளொன்றுக்காய் காத்திருக்கின்றோம். அன்று நாம் உயிரோடு இல்லாது போனாலும், நீங்கள் இருந்து எங்கள் விடுதலையைக் காண பிரார்த்தித்து முடிக்கின்றோம்.

இணையும் இளைய கல்விக் கரங்களுடன், 
அனைத்துப் பல்கலைக்கழக மாணவ சமூகத்தினர்,
தமிழீழம்.
Leave a Reply

Your email address will not be published.