இராக்கில் சிகிச்சை பெறுவதற்காக சிரியா ராணுவத்தைச் சேர்ந்த 48 வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது அல்-காய்தா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் சிரியா வீரர்கள் 48 பேரும், அவர்களுக்கு பாதுகாப்பாகச் சென்ற இராக் வீரர்கள் 9 பேரும் உயிரிழந்தனர்.
சிரியாவில் அதிபர் பஷார் அல்-அஸôதை எதிர்த்து கிளர்ச்சியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அங்கு உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், காயமடைந்த வீரர்களுக்கு சிகிச்சை அளிக்க பக்கத்து நாடான இராக் உதவி வருகிறது.
சமீபத்தில் இராக்கின் மேற்கு எல்லைப்பகுதி வழியாக போரில் காயமடைந்த சிரியா ராணுவத்தைச் சேர்ந்த 48 வீரர்கள் வாகனத்தில் அழைத்து வரப்பட்டனர்.
அவர்களுக்கு பாதுகாப்பாக 9 இராக் ராணுவ வீரர்கள் சென்றனர். அன்பாரான் பகுதி வழியாக சென்றபோது, அந்த வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 57 பேரும் உயிரிழந்தனர்.
இத்தாக்குதலுக்கு காரணமானவர்கள் குறித்து இராக் போலீஸôர் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், சிரியா வீரர்கள் மீது நடத்திய தாக்குதலுக்கு அல்-காய்தா அமைப்பின் இராக் பிரிவு பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர்.
இது தொடர்பாக தற்போது இணையதளமொன்றில் தகவல் வெளியாகியுள்ளது.
சிரியாவில் நிகழ்ந்துவரும் உள்நாட்டுப் போரில் அதிபர் பஷார் அல்-அஸôதுக்கு ஆதரவாக ஈரான் செயல்பட்டு வருகிறது.
கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக அமெரிக்கா, சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் செயல்படுகின்றன. இந்த விவகாரத்தில் இராக் நடுநிலை வகிக்கிறது.
இருதரப்பும் பேச்சு நடத்தி சுமுகமாக தீர்வு காண வேண்டும் என இராக் வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், இராக்கின் எல்லைக்குள் நிகழ்த்தப்பட்ட தாக்குதலை அடுத்து, அதன் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.