திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் திருவிழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு எவ்விதமான நோய்களும், தீவினைகளும் அணுகாது, சகல சௌபாக்கியங்களும் கிடைக்கவும், உலக நன்மைக்காகவும் மாரியம்மனே பக்தர்களுக்காக 28 நாள்கள் பச்சைப்பட்டினி விரதம் இருக்கும் (மாசி கடைசி ஞாயிறு முதல் பங்குனி கடைசி ஞாயிறு வரை) பூச்சொரிதல் திருவிழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
பூச்சொரிதலையொட்டி அதிகாலையில் கணபதி பூஜை, வாஸ்துசாந்தி, அங்குரார்ப்பணமும், தொடர்ந்து அம்பாளுக்கு காப்புக் கட்டுதலும் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, யானை மீது பூக்கூடைகளை வைத்தும்,திருக்கோயில் இணை ஆணையர் க. தென்னரசு தலைமையில் திருக்கோவில் பணியாளர்களும் பூத்தட்டுகள், பூக்கூடைகளை ஏந்தியும் தேரோடும் வீதி வழியாக மேளதாளங்களுடன் ஊர்வலமாக வந்து மாரியம்மனுக்கு பூக்களை சாத்தினர்.
திருக்கோயில் நிர்வாகம் சார்பில் பூக்கள் சாத்தப்பட்டதைத் தொடர்ந்து, சமயபுரத்தைச் சுற்றியுள்ள 8 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மாரியம்மனுக்கு கூடைகளிலும், தட்டுகளிலும் பூக்களைக் கொண்டுவந்து அம்மனுக்கு சாத்தினர்.
இதைத் தொடர்ந்து திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள், பெரம்பலூர், அரியலூர், கரூர், நாமக்கல் என பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் விடிய,விடிய பக்தர்கள் வந்து அம்மனுக்கு பூக்களை சாத்தினர்.