செய்திகள்

தமிழக மாணவர் போராட்டத்துக்கு தோள்கொடுப்போம்!

பல இன்னல்கள் அழுத்தங்களுக்கு மத்தியிலும் எம் தமிழக உறவுகளான மாணவர்கள் தமிழீழத்தில் வாழும் தம் தொப்புள்கொடி உறவுகளுக்காக தமிழகமெங்கும் பரவலாக முன்னெடுத்து வரும் உண்ணாநிலைப் போராட்டங்கள் புலம்பெயர்ந்து வாழும் மாணவர்களாகிய எம் அனைவரையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளன.

நாம் அனைவரும் தமிழர் என்ற உணர்வால் ஒற்றைப் புள்ளியில் இணைந்துள்ளோம் என்ற உணர்வை மீண்டுமொரு முறை ஊட்டியுள்ளது. பல்லாண்டு கால எமது விடுதலைக்கான போராட்டத்தில் மிக முக்கியமானதொரு படிக்கல்லாகவே உங்களது இப்போராட்டத்தினை புலம்பெயர்ந்து வாழும் மாணவர் சமூகத்தினராகிய நாம் கருதுகின்றோம்.

வரலாற்றுக்கு முந்திய காலந்தொட்டு ஈழத் தீவின் பல பாகங்களிலும் வாழ்ந்து வந்த தமிழினம் படிப்படியாக சிங்கள இனத்தால் ஒதுக்கப்பட்டு வந்துள்ளது. ஐரோப்பிய காலணித்து நாடுகளின் ஆட்சியின் போது தமிழ் பேசும் மக்களின் தனிப் பகுதியாக வரையறுக்கப்பட்டிருந்த வடக்கு-கிழக்கு பகுதி 1948இல் பிரித்தானிய அரசிடமிருந்து சிங்கள இனத்திடம் ஆட்சிப் பொறுப்பு கைமாறிச் சென்ற பின்னர் அரசின் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களின் மூலம் சிதைக்கப்பட்டு தமிழ் இன அழிப்பு கூர்மைப்படுத்தப்பட்ட நிலையிலேயே அரசியல் போராட்டங்களும் மாணவர் போராட்டங்களும் முனைப்புப் பெற்றன.

இணைந்து வாழ முடியாதென்றான பின்னர் 1976இல் தமிழீழத் தனிநாட்டுக்கான அரசியல் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு 1977இல் நடைபெற்ற தேர்தலில் அத்தீர்மானம் மீதான தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவு சிங்கள அரசினால் ஆயுதமுனையில் அடக்கப்பட்ட போதே தமிழீழத்துக்கான ஆயுதப் போராட்டம் வலுப்பெற்றது.

அந்த வகையில் இன்று தமிழீழத்தில் தமிழினம் சிங்கள அரசினால் இன அழிப்புக்குள்ளாகி இலட்சக்கணக்கில் கொன்றுகுவிக்கப்பட்டுஇ எஞ்சியுள்ளோர் குரல்கள் நசுக்கப்பட்டு தமிழர் தாயகம் துரித கதியில் சிங்கள மயப்படுத்தப்பட்டு வரும் நிலையில் ஈழத் தமிழர்களின் குரலாக நீங்கள் கிளர்ந்தெழுந்திருப்பது எமக்குப் புத்துணர்ச்சி ஊட்டுகின்றது.

எமக்கு என்றும் பக்கத்துணையாக தமிழக எம் உடன்பிறப்புகள் இருப்பார்கள் என்ற தெம்பை மீண்டும் எமக்கு ஊட்டியுள்ளது. எமது போராட்டத்தின் அனைத்துக் காலகட்டங்களிலும் எமக்கு உறுதுணையாக நின்ற எம் தாய்த் தமிழக உறவுகள் மீண்டுமொரு முறை வெளிப்படுத்தியுள்ள தம் உணர்வுகளின் வெளிப்பாடே மாணவர்களாகிய உங்கள் இப்போராட்டம் என்பதே உண்மை.

ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மாநாட்டில் இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பாக அமெரிக்கா தீர்மானம் கொண்டுவரவுள்ள நிலையில் இலங்கையில் நடைபெற்றவை போர்க்குற்றமோ அல்லது மனித உரிமை மீறல்களோ அல்ல அது இன அழிப்பு என்ற உங்கள் தெளிவான நிலைப்பாட்டை நாம் வரவேற்கின்றோம். அத்துடன் மாணவர்களாகிய நீங்கள் முன்வைத்திருக்கும் இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் மற்றும் ஈழத் தமிழர்கள் மத்தியில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளையும் காலத்தின் தேவையறிந்து நீங்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளாகவே நாம் நோக்குகின்றோம். இவையே புலம்பெயர்ந்து வாழும் மாணவர்களாகிய எங்களதும் கோரிக்கைகளாகும்.

மாணவர் சக்கி மகத்தானது. அது என்றும் தோற்றதில்லை. உலக வரலாற்றில் பல மாற்றங்களுக்கு மாணவர் போராட்டங்கள் வித்திட்டுள்ளன. அவ்வகையில் மாணவர்களாகிய நீங்கள் இன்று விதைத்துள்ள இவ்விதையானது பெரு விருட்சமாககி ஈழத்தமிழர்களுக்கு ஒரு விடியலைப் பெற்றுத் தரும் என்பது எம் அசைக்க முடியாத நம்பிக்கை.

எனவேஇ கனடா தமிழ் இளையோர் அமைப்பினராகிய நாம் எம் தமிழக உறவுகளாகிய உங்களது போராட்டம் வெற்றி பெற வாழ்துகளைத் தெரிவித்துக் கொள்வதுடன் என்றென்றும் உங்களுடன் தோள்நிற்போம் என உறுதியளித்துக் கொள்கின்றோம்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

தமிழ் இளையோர் அமைப்பு – கனடா

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *