Search

அமரர் திரு. கண்ணாளன்(கயிலாயபிள்ளை.புவனேஸ்வரன் தமிழீழ காவல்துறையின் ஆரம்பகால உறுப்பினர்

தமிழீழ காவல்துறையின் ஆரம்பகால உறுப்பினராக இணைந்து ,அதன் வளர்ச்சிக்காக பல்வேறு தளங்களில் நின்று உழைத்த அமரர் திரு. கண்ணாளன்(கயிலாயபிள்ளை.புவனேஸ்வரன் / தம்பலகாமம், திருகோணமலை)அவர்கள் கடுமையான நோயின் தாக்கத்தினால் சாவடைந்த செய்தி எல்லோர் மனங்களையும் உலுப்பியெடுத்தது.

1991ம் ஆண்டு தமிழீழ காவல்துறைக்கான முதலாவது அணி பயிற்சி ஆரம்பிக்கப்பட்டபோது திருமலை மாவட்டத்திலிருந்து வந்த பயிற்சியாளர்களில் ஒருவராக, திரு.கண்ணாளன் இருந்தார். சிறந்த உடல்வலுவும் கற்றல் திறமையும் இவரை ஓர் அணியின் பொறுப்பாளர் நிலைக்குத் தரமுயர்த்தியது. யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் பயிற்சிகள் நடைபெற்றபோது பயிற்சியாளர்கள் பல அணிகளாகப்பிரிக்கப்பட்டனர்.அதில் “புலேந்திரன்” அணிக்கான பொறுப்பாளராக இவர் நியமிக்கப்பட்டார். பயிற்சிகளின் நிறைவில் தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களால் தமிழீழ காவல்துறையின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொள்ளப்பட்டு 18/11/1991 அன்று தமிழீழ காவல்துறை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன்பின் 01/01/1992அன்று சாவகச்சேரியில் ஆரம்பித்து வைக்கப்பட்ட காவல் பணிமனையின் முதலாவது பொறுப்பாளராக திரு கண்ணாளன் நியமிக்கப்பட்டிருந்தார். இதன் பின் யாழ் குடாநாட்டிலும் வன்னிப்பெருநிலப்பரப்பிலும் இயங்கிய பல்வேறு பணிமனைகளிலும் தனது பணிகளை மேற்கொண்டார்.
1997ம் ஆண்டு, தன்னை முழுநேர போராளியாக இணைத்துக்கொண்டார்.இதன் பின் தமிழீழ காவல்துறையின் பல நிர்வாக அலகுகளுக்கு பொறுப்பாளராகச் செயற்பட்டிருந்தார்.குறிப்பாக ஆளணிப்பிரிவு ,மாவீரர் பணிமனை ஆகியவற்றில் நீண்ட காலம் பணியாற்றியிருந்தார்.
2009 மே மாதம் வரை தன்னுடைய கடமையை சளைக்காமல் செய்து வந்தார். போரின் முடிவில் இவருக்கு ஏற்பட்ட கடுமையான நோய்த்தாக்கத்தினால் பாதிக்கப்பட்டு நீண்ட சிகிச்சைகள் பயனளிக்காத நிலையில் கடந்த 15/11/2017 அன்று சாவடைந்தார்.
தமிழீழ காவல்துறையின் மாவீரர் பணிமனைப் பொறுப்பாளராகவிருந்து , ஒவ்வொரு மாவீரனுக்கும் செய்ய வேண்டிய கடமைகளைத் திறம்பட செய்து வந்த திரு.கண்ணாளன் அவர்களும் மாவீரர் மாதத்திலேயே சாவடைந்தது இயற்கை அன்னை அவருக்கு கொடுத்த மரியாதை எனவே எண்ணத் தோன்றுகிறது.

தமிழீழ தாயகத்திற்காக தன்னுடைய வாழ்நாள் முழுவதும் உழைத்த கண்ணாளன் அவர்களும் தான் நேசித்த மாவீரர்களுடன் இணைந்து கொண்டார்.
இவருக்கு பதவிநிலையோ , துயிலுமில்ல நிலமோ, மரியாதை வேட்டுக்களோ வழங்க முடியாவிட்டாலும்,,,,, இவரது நினைவுகளை மீட்டு , சிந்தும் விழிநீர்த்துளிகளால் எமது வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்ளக் கடமைப்பட்டுள்ளோம்….
இ. ரஞ்சித்குமார்




Leave a Reply

Your email address will not be published.