20 ஆம் தேதி நடைபெறும் ஒரு கோடி மாணவர் தொடர் முழக்க போராட்டம்! வெற்றி பெறச் செய்வோம்: வேல்முருகன்
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் பண்ருட்டி வேல்முருகன் வெளியிட்ட அறிக்கை:
தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமான இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் மற்றும் தமிழீழத் தனியரசுக்கான பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக மாணவர்கள் கடந்த ஒரு வார காலமாக தொடர்ச்சியாக நடத்திவரும் போராட்டம் உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது!
ஆனால் இந்திய மத்திய அரசுதான் இன்னமும் மவுனித்துக் கொண்டிருக்கிறது! இன்று தமிழகத்தில் வீதிக்கு வந்து ஈழத் தமிழருக்கு ஆதரவாக போராடாத எந்த ஒரு கல்லூரியுமே இல்லை என்ற நிலைமை உருவாகி இருக்கிறது! குக்கிராமங்களில் பள்ளிக்கூடத்து மாணவர்களும் கூட வீதியில் இறங்கி போராடி சிறையேகி வருகின்றனர்! பல நூறு மாணவர்கள் கடந்த ஒரு வார காலமாக தியாக தீபமாம் மாவீரன் திலீபன் வழியில் உண்ணாநிலைப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்!
விழ விழ எழுவோம்! ஒன்று விழ ஒன்பதாய் ஏழுவோம்!! என்ற உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தனின் கவிதை வரிகள் தமிழக வரலாற்றில் மெய்ப்பிக்கப்பட்டு வருகிறது. சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் 8 பேர் தன்னெழுச்சியாக தொடங்கி வைத்த .. மூட்டிய ஈழத் தீ ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலும் பற்றி பரவியிருக்கிறது. இந்தத் தன்னெழுச்சியான தீ இப்போது தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பாக பரிணமித்திருக்கிறது. தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் சார்பில் வரும் 20-ந் தேதியன்று தமிழ்நாட்டின் 32 மாவட்டங்களிலும் சுமார் 1 கோடிக்கும் மேலான மாணவர்கள் ஒருங்கிணைந்து காலை முதல் மாலை வரை தொடர் முழக்கப் போராட்டங்களை நடத்த அறைகூவல் விடுத்திருக்கின்றனர்.
தமிழினத்தின் வரலாற்றில் இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டத்துக்குப் பின்னர் தற்போதுதான் நமது பிள்ளைகளான மாணவர் சமூகம் இத்தனை பேரெழுச்சியோடு களமாடுகிறது. தமிழக மாணவர்கள் விடுத்திருக்கும் 20-ந் தேதி தொடர் முழக்கப் போராட்டத்தை தமிழக வாழ்வுரிமைக் கட்சி முழுமையாக வரவேற்று ஆதரிக்கிறது. தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்புடன் இணைந்து அவர்களது போராட்டத்துக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்!
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிர்வாகிகளும் உறுப்பினர்களும் தங்களது வீட்டுக் குழந்தைகளை களமாடும் மாணவர்களுடன் கரம்கோர்க்க அனுப்பி வையுங்கள்! 20-ந் தேதியன்று நடைபெறுகிற போராட்டம் தமிழீழத் தமிழரது அடிமை விலங்குகளை உடைத்து நொறுக்கும் நாளாக மாவீரச் செல்வங்களின் கனவாம் தமிழீழத் தனியரசு அமைவதற்கான வழியை உறுதிப்படுத்தும் நாளாக அமைந்திட சாதி, மத, கட்சி, இயக்க எல்லைகளைக் கடந்து களமாடும் மாணவர்களுடன் கரம் கோர்ப்போம் என அனைவரையும் அழைக்கிறேன்!!