அனைவராலும் N.S.மூர்த்தி என அழைக்கப்பட்ட டாக்டர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு இன்று நடைபெற்று வருகின்றது.
இலங்கைச் சிறையில் அடைக்கபட்டு கை, கால்கள் அடித்து முறிக்கப்பட்ட பின்னரும், பல இளைஞர்களின் உயிர்களைக் காக்கும் மருத்துவப் பணியையும், கால்களை இழந்தவர்களுக்கு செயற்கைக் கால் பொருத்துதல், பெற்றோரை இழந்த சிறார்களைப் பராமரித்தல் போன்ற பல தொண்டுகளைச் செய்த மாபெரும் மனிதர் ஆவார்.
இனவாத அரசின் நெருக்கடிகளால் அவரும் அவரது குடும்பத்தினரும் பல இன்னல்களுக்கு முகம்கொடுக்க நேர்ந்த போதிலும், தாயகத்திலும், இந்தியாவிலும், பின்னர் லண்டனிலும் தனது கொள்கையில் இறுதிவரை உறுதியாக நின்று தமிழ் மக்களின் விடிவுக்காக தன்னை அர்ப்பணித்த, போற்றுதற்குரிய மாமனிதர்.
1985ஆம் ஆண்டு இந்தியாவில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் முதலாவது தலைவராக இருந்து வழி நடத்தி, அந்த அமைப்பு தாயகத்தில் பல்வேறு தொண்டுப் பணிகளைச் செய்ய வித்திட்டவர். பின்னர் பிரித்தானியாவில் வெண்புறா தொண்டமைப்பை நிறுவி பல்வேறு பணிகளை முன்னெடுத்தவர்.
‘மாமனிதர்’ என்ற தமிழீழத்தின் அதியுயர் பட்டம் அளிக்கப்பட்டுள்ள இந்த அரும்பெரும் மனிதனின் இறுதி வணக்க நிகழ்வில் பல்லாயிரக் கணக்கான மக்கள் கலந்துகொண்டுள்ளனர்.
பிரித்தானியாவில் நடைபெறும் இன்றைய இறுதி வணக்க நிகழ்வில் வெளிநாடுகளில் இருந்தும் பலர் கலந்துகொள்ளுகின்றனர். இதேவேளை, இன்று இத்தாலியிலும் மாமனிதர் சத்தியமூர்த்தி அவர்களிற்கான வணக்க நிகழ்வு நடைபெறுகின்றது. யேர்மனி, பிரான்ஸ், நோர்வே, சுவிஸ் போன்ற நாடுகளில் ஏற்கனவே இவ்வாறான வணக்க நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.