
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்துள்ள பிரேரணை மீதான வாக்கெடுப்பு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையில் இன்று நடைபெறவுள்ள சூழ்நிலையில், இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு மனித உரிமைகள் சபையின் அனைத்து உறுப்பு நாடுகளும் ஆதரவளிக்கும் என மனித உரிமைகள் சபைக்கான அமெரிக்கத் தூதுவர் டொனஹே அம்மையார் நேற்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நேற்று உரையாற்றியபோதே, பிரேரணையை உறுப்பு நாடுகள் அனைத்தும் ஆதரிக்கும் என நம்புவதாக அவர் தெரிவித்தார்.
இலங்கை பல்வேறு விடயங்களில் பொறுப்புக் கூற வேண்டி யுள்ளதால் இந்தப் பிரேரணை நிறைவேற்றப்பட வேண்டிய அவசியம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, நேற்றைய கூட்டத்தில் உரையாற்றிய சீனத் தூதுவர், இலங்கை தனது உள்நாட்டு பொறிமுறை மூலம் பல்வேறு விடயங்களுக்கு தீர்வு காண முயல்வதாகவும் சர்வதேச சமூகம் அதற்காக இலங்கைக்கு ஆதரவு வழங்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.
இங்கு கருத்து வெளியிட்ட பிரிட்டனுக்கான தூதுவர், இலங்கையின் வடக்கில் தேர்தல் நடைபெறும்போது அது நீதியாக நடைபெறவேண்டுமென வலியுறுத்தினார்.
இலங்கையில் மனித உரிமை ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் நிலைமை தொடர்வதாக குற்றம்சாட்டிய அவர் இந்த நிலைமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.
இதேவேளை, கியூபாவின் பிரதிநிதி பேசும்போது, இலங்கை மீது விதிக்கப்படும் அழுத்தங்கள் நியாயமற்றவை என்றும், போருக்குப் பின்னர் இன நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப இலங்கை முயலும்போது அதற்கு ஒத்துழைப்பை வழங்காமல் கடும்போக்குடன் நடந்து கொள்வதை கியூபா எதிர்ப்பதாகவும் குறிப்பிட்டார்
வியட்நாம் தூதுவர் தனது உரையில், மோசமான போருக்குப் பின்னர் இலங்கையின் நிலைமைகள் படிப்படியாக முன்னேற்றம் கண்டு வருவதாகவும் அதற்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டியதுதான் இப்போதைய தேவை என்று கூறினார்.
இதேவேளை, பிரேரணை விடயத்தில் ஆதரவை மேலும் பலப்படுத்திக் கொள்ளும் வகையில் அமெரிக்காவும் இலங்கையும் நேற்றைய தினமும் பிற நாடுகளின் இராஜதந்திரிகளுடன் பேச்சுக்களை நடத்திக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.