இலங்கை தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக இந்திய பாதுகாப்புச் சபையின் செயலாளர் அடுத்த வாரம் அமைச்சு மட்டத்திலான விசேடக் கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளார்.
இலங்கை பாதுகாப்பு தரப்பினருக்கும், சீனாவுக்கும் இடையில் காணப்படும் நெருங்கிய தொடர்புகள் குறித்து அதிக கவனம் செலுத்தியுள்ள இந்திய தேசிய பாதுகாப்புச் சபையின் செயலாளர், சீனா, இலங்கை இடையிலான நெருங்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் பிரிவுகள் குறித்து ஆராய்வதற்காக இந்த அமைச்சு மட்டத்திலான கூட்டத்தை கூட்டவுள்ளார். இலங்கையை இந்தியாவின் நிலைப்பாடுகளுக்கு அமைய செயற்பட வைப்பதற்காகவே இந்த முனைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்து பத்திரிகை தெரிவித்துள்ளது.
அண்மையில், சீனா, இலங்கையுடன் இணைந்து செயற்படுத்திய சுப்ரீம் செட் செய்மதி வேலைத்திட்டம், சீனாவின் உதவியுடன் 2015 ஆம் ஆண்டு இலங்கை செயற்படுத்த திட்டமிடப்பட்டுள்ள தொடர்பாடல் செய்மதி திட்டம் என்பன தொடர்பாக இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் விசேட கவனம் செலுத்தியுள்ளனர்.
இந்த திட்டத்திற்கு 320 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட உள்ளதுடன் சீனாவின் அரச நிறுவனமான சைனா-கிரேட்வோல் நிறுவனத்தின் ஊடாக தொடர்பாடல் செய்மதி விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இந்த நிறுவனம் விண்வெளி பயிற்சி நிலையம் ஒன்றை நிர்மாணிக்க உள்ளதுடன், கண்டியில் செய்மதி மத்திய நிலையம் ஒன்றையும் அமைக்க உள்ளது. இது தொடர்பான இலங்கை முதலீட்டுச் சபையுடன் உடன்படிக்கை ஒன்றையில் கையெழுத்திட சுப்ரீம் செட் நிறுவனம் இணங்கியுள்ளது.
இது குறித்து முக்கிய கவனம் செலுத்தியுள்ள இந்திய அதிகாரிகள், செய்மதி தொழிற்நுட்பத்தை வழங்குவது தொடர்பில் சீனாவுக்கு பதிலாக இலங்கை இந்தியாவுக்கு உதவ வேண்டும் என பரிந்துரை செய்துள்ளனர்.