இந்தியாவின் நலன் கருதி தமிழர் பிரச்னைக்கு இலங்கை தீர்வு காண வேண்டும் என்ற தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனன் தெரிவித்துள்ளார். சர்வதேச சட்டத்துக்கான இந்திய சங்கம் சார்பில் டில்லியில் நடைபெற்ற வி.கே. கிருஷ்ண மேனன் நினைவு 12ஆவது கருத்தரங்கில் சிவசங்கர் மேனன் பேசியதாவது: நட்பு நாடாக இலங்கை இருக்க வேண்டும் என்பதே இந்தியாவின் எதிர்பார்ப்பு. அந்த நாட்டில் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் வந்துவிடக் கூடாது என்பதும் எங்கள் விரும்பம்.
இலங்கையில் உள்ள அனைத்துப் பிரிவு மக்களும், குறிப்பாக இலங்கைத் தமிழர்கள் சுய நிர்ணய உரிமை, சுதந்திரமாக செயல்படும் உரிமை, நம்பிக்கையுடன், ஒருங்கிணைந்த இலங்கையில் வாழ்வதை உறுதி செய்ய வேண்டும்.
பாதுகாப்பு என்பதன் அர்த்தம் பரந்த எல்லையை உடையதாக மாறியிருக்கிறது. சட்டம் ஒழுங்கு, ராணுவம் என்ற நிலையில் இருந்து பொருளாதாரம், உணவு, எரிசக்தி, மக்களுக்கான பாதுகாப்பு என விரிவடைந்திருக்கிறது.
விண்வெளி, சைபர் (இணைய தள வழி குற்றங்கள்), தகவல் தொழில்நுட்பம் ஆகியவை, பாதுகாப்பு என்பதற்கான இலக்கணத்தை மாற்றியமைத்திருக்கின்றன.
1998ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவின் பாதுகாப்புத் துறை மிகவும் முன்னேற்றமடைந்திருக்கிறது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பலம்பெற்றவர்களாக உள்ளோம்.
அணு ஆயுத சக்தி படைத்த நாடாக உள்ளோம். வழக்கமான பிரச்னைகள், எல்லை தாண்டிய பயங்கரவாதம் ஆகியவற்றைச் சமாளிக்கும் திறன் பெற்றுள்ளோம் என்றார்.













Leave a Reply