‘மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள்’ [‘crimes against humanity’] மற்றும் ‘இனப்படுகொலை’ [‘genocide’] போன்றவற்றுக்கு இடையிலான வேறுபாடுகள் என்ன? இவ்விரு பதங்களும் மனித உயிரினங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட குற்றங்களுக்கு தண்டனை வழங்குதலை குறிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறதா?
இந்த விடயம் தொடர்பாக ஆராய்கின்ற புத்தகம் ஒன்றை வெளியிடவுள்ள பிரித்தானிய சட்டவாளரான பிலிப் சாண்ட்ஸ் [Phillipe Sands] அவர்களுடன் RFE/RL [Radio Free Europe/Radio Liberty] ஊடகம் மேற்கொண்ட நேர்காணலின் விபரம் இங்கு தரப்பட்டுள்ளது. இதனை மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.
அனைத்துலக நீதிமன்றில் பல்வேறு வழக்குகள் தொடர்பில் வாதங்களை மேற்கொள்ளும் சாண்ட்ஸ் என்கின்ற இந்தச் சட்டவாளர் இலண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் [University College] அனைத்துலக சட்டத்துறைப் பேராசிரியராகக் கடமையாற்றுகிறார்.
2003ல் இடம்பெற்ற அமெரிக்கவின் ஈராக் படையெடுப்பானது அனைத்துலகச் சட்டத்தை மீறி மேற்கொள்ளப்பட்டது என்பதை விவாதிக்கின்ற Lawless World என்கின்ற நூலின் ஆசிரியர் சாண்ட்ஸ் ஆவார். இவர் தற்போது ‘மசிடோனியா’ [Macedonia] என்கின்ற பெயரை உபயோகப்படுத்துவது தொடர்பில் நீதிக்கான அனைத்துலக நீதிமன்றில் [International Court of Justice] கிறீசுக்கு எதிராக மசிடோனியா சார்பாக வாதிட்டு வருகிறார்.
கேள்வி [RFE/RL]: ‘மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள்’ மற்றும் ‘இனப்படுகொலை’ போன்ற சட்டச் சொற்கள் தொடர்பாக விபரிக்க முடியுமா?
பதில் [பிலிப் சாண்ட்ஸ்]: மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை ஆகிய இரண்டும் வேறுபட்ட இரு வேறு எண்ணக்கருக்களாகும். இவை இரண்டும் 1940களின் நடுப்பகுதியில் அனைத்துலக சட்டத்தின் பகுதியாக கொண்டுவரப்பட்டன. அதாவது இரண்டாம் உலக மகாயுத்தம் முடிவடைந்த பின்னர் இவ்விரு எண்ணக்கருக்களும் அனைத்துலகச் சட்டத்தில் இணைக்கப்பட்டன. இவை இணைக்கப்பட்ட அந்த நேரத்தில் நூரம்பேர்க் Nuremburg விசாரணைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்தன. அந்த நேரத்தில் இவை இரண்டும் புதிய எண்ணக்கருக்களாக காணப்பட்டன. இந்த இரு எண்ணக்கருக்களின் தோற்றுவாய்கள் தொடர்பாக ஆராய்கின்ற விதமாக நான் தற்போது புதிய நூல் ஒன்றை எழுதிவருகிறேன்.
மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்களுக்கும் இனப்படுகொலைக்கும் இடையில் அடிப்படையில் காணப்படும் வேறுபாடு பின்வருமாறு: மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள் என்பது பெரும் எண்ணிக்கையில் பொதுமக்களைக் கொல்வதாகும். திட்டமிட்ட ரீதியில் மிகப் பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்களைக் கொல்கின்ற செயலானது மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள் என வரையறுக்கப்பட்டுள்ளது. இனப்படுகொலை என்பது வேறுபட்ட நோக்கத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது. இனப்படுகொலை என்பது தனிப்பட்ட மக்களைக் கொல்வதோடு மட்டுமல்லாது, ஒரு சமுதாயத்தை அழிப்பதை நோக்காகக் கொண்டு மேற்கொள்ளப்படுவதாகும்.
வேறுவகையில் கூறினால், தனியொரு குழுவைச் சேர்ந்த மக்கள் பெருமளவில் கொல்லப்படுவதையே இது குறிக்கின்றது. இந்த ரீதியில் இவ்விரு எண்ணக்கருக்களுக்கும் இடையில் வேறுபாடு காணப்படுகிறது. இந்த இரு எண்ணக்கருக்களில் ஒன்று தனியொருவரைக் காப்பாற்றுவதை அடிப்படையாகக் கொண்டு சட்டத்தில் இணைக்கப்பட்டது. மற்றையது ஒரு குழுவைக் காப்பாற்றுவதைக் கருத்திற் கொண்டு சட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
கேள்வி: Lviv என்கின்ற உக்ரேனிய நகரத்துடன் இவ்விரு எண்ணக்கருக்களையும் தொடர்புபடுத்தி நீங்கள் ஆராய்ச்சியை மேற்கொண்டு வருவதாக கூறப்படுவது உண்மையா?
பதில்: 1945 மற்றும் 1946 களில் கூட்டணி நாடுகள் நூரம்பேர்க் Nuremburg விசாரணைகள் தொடர்பாக தம்மை தயார்ப்படுத்திக் கொண்டிருந்த வேளையில் மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை ஆகிய இரு வேறு எண்ணக்கருக்களும் புதிதாக அனைத்துலக சட்டத்தில் இணைக்கப்பட்டன. இதனால் இவை இரண்டும் மிகப் பிரபலமாகப் பேசப்பட்டன. இந்த விசாரணையில் தமக்கெதிரான நாசி ஆதரவு நாடுகளை எவ்வாறு குற்றம் சுமத்தமுடியும் என்பது தொடர்பாக கூட்டணி நாடுகள் ஆராய்ந்து தீர்மானம் எடுத்தன. அந்தவேளையில், மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை விவகாரத்தைக் கையாள முடியுமா அல்லது இல்லையா என்பது தொடர்பாக மிகப் பெரிய விவாதம் ஒன்று எழுப்பப்பட்டது. இந்த அடிப்படையில், கூட்டணி நாடுகள் மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள் என்ற எண்ணக்கருவை தமது விவாதத்தில் பயன்படுத்தின.
இவ்விரு எண்ணக்கருக்களின் தோற்றுவாய்கள் தொடர்பாக நான் எனது புதிய நூலில் ஆராய்ந்து வருகிறேன். லெம்பேர்க் மற்றும் ல்வெளவ் [Lemberg and Lwow] ஆகிய இரு உக்ரேனிய நகரங்களைச் சேர்ந்த இருவர் இந்த எண்ணக்கருக்கள் தோற்றம் பெறுவதற்கு பொறுப்பாளிகளாவர். இவ்விரு நகரங்களும் தற்போது Lviv என அழைக்கப்படுகிறது.
Lviv என்கின்ற இந்த நகரானது மேற்கு உக்ரேனிய புறநகர்ப் பகுதியில் போலந்து நாட்டின் எல்லைக்கருகில் [Polish border] அமைந்துள்ளது. இது குறிப்பிடத்தக்க சாதனைகளைக் கொண்ட நகரமாகும். இங்கு பிரசித்தி பெற்ற பல்கலைக்கழகம் ஒன்று உள்ளது. இது அமெரிக்காவின் ஹவார்ட் பல்கலைக்கழகத்தை விட பழமையான பல்கலைக்கழகமாகும். இப்பல்கலைக்கழகம் கணிதத்துறையில் பெயர் போன ஒன்றாகும்.
அத்துடன் இது சட்டத்துறைக்கும் பிரசித்தி பெற்றதாகும். இந்த சட்டப் பாடசாலையில் 1915 தொடக்கம் 1925 வரையான காலப்பகுதியில் இரு மனிதர்கள் கல்வி கற்றனர். இவர்களில் ஒருவர் Hersch Lauterpacht ஆவார். இவர் தனது சட்டக் கல்வியை முடித்த பின்னர் இங்கிலாந்தில் உள்ள கேம்ப்றிட்ஸ் பல்கலைக்கழகத்தில் [Cambridge University] அனைத்துலக சட்டத்துறைப் பேராசிரியராகக் கடமையாற்றினார். இப்பேராசிரியரே நூரம்பேர்க் விசாரணை தொடர்பான பட்டயத்தில் [Nuremberg Charter] மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள் என்ற எண்ணக்கருவை உட்புகுத்தியதற்கு பொறுப்பாளியாவார். இவர் இந்த எண்ணக்கருவை உட்புகுத்தி சில ஆண்டுகளின் பின்னர் Raphael Lemkin என்கின்ற பிறிதொருவர் 1943ல் இனப்படுகொலை என்ற பதத்தை அறிமுகப்படுத்தினார். இவ்விரு சட்டத்துறை வல்லுனர்களும் உக்ரேனிலுள்ள ஒரே சட்டக் கல்லூரியிலேயே கற்றனர் என்பது என்னை ஆச்சரியப்படுத்தியது.
கேள்வி: இனப்படுகொலை என்கின்ற சட்ட எண்ணக்கரு தொடர்பாக நீங்கள் விமர்சனம் செய்வது சரியானதாக இருக்குமா?
பதில்: இந்த எண்ணக்கருக்கள் தொடர்பாக நான் ஒருபோதும் எனது விமர்சனங்களை முன்வைக்க முயலவில்லை. மாறாக எனது கவனத்தை அதிகம் ஈர்த்த இவ்விரு எண்ணக்கருக்கள் தொடர்பாக எனது மனதில் எவ்விதமான சிந்தனைகளும் ஆராய்ச்சிகளும் ஏற்பட்டுள்ளதோ அவற்றை வெளிப்படுத்துவதற்கான முயற்சியிலேயே நான் ஈடுபடுகிறேன்.
அடிப்படையில், மக்கள் தனித்தனியாக கொல்லப்படாது ஒட்டுமொத்த ஒரு குழுவாக கொல்லப்படுவதே இனப்படுகொலை என லெம்கின் கண்டறிந்தார். இந்த மக்கள் குறித்த ஒரு குழுவின் உறுப்பினர் என்ற வகையிலேயே அவர்கள் கொல்லப்படுகின்றனர் அல்லது தீங்கிழைக்கப்படுகின்றனர் என்பது லெம்கின்சியின் கருத்தாக காணப்பட்டது. அதாவது இந்த மக்கள் ஒரே தேசிய இனத்தைச் சேர்ந்த அல்லது ஒரே இனக்குழுமத்தைச் சேர்ந்த அல்லது ஒரே மதத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கமுடியும்.
இது ஒரு உண்மையான நிலை என்பதால் இந்த யதார்த்த நிலையை சட்டம் பிரதிபலித்துக் காட்ட வேண்டும் என லெம்கின் வலியுறுத்தியிருந்தார். ஆனால் இந்த மக்கள் தனி மனித உயிரினங்களாக இருப்பதால் இவர்கள் தனித்தனியாகப் பாதுகாக்கப்பட வேண்டுமே ஒழிய ஒட்டுமொத்த ஒரு குழுவின் உறுப்பினர்கள் என்ற வகையில் இவர்கள் பாதிக்கப்படக் கூடாது என Lauterpacht வலியுறுத்துகிறார். இந்நிலையில் இவ்விரு சட்ட வல்லுனர்களுக்கும் இடையில் மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றம் மற்றும் இனப்படுகொலை இருவேறுபட்ட எண்ணக்கருக்கள் தொடர்பில் வாக்குவாதம் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் மக்கள் படுகொலை செய்யப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்கின்ற பொதுவான நோக்கத்தை ஏற்றுக் கொள்ளாது விடவில்லை. ஆனால் இவர்கள் இருவரும் மக்கள் படுகொலை செய்யப்படுவதைத் தடுப்பதற்கான சிறந்த வழியாக இது தான் இருக்கும் என தமது எண்ணக்கருவை மட்டும் வலியுறுத்திக் கூற முயற்சித்தனர்.
இவ்வாறானதொரு முரண்பாட்டின் மத்தியில் இவ்விரு சட்ட வல்லுனர்களின் இரு வேறுபட்ட எண்ணக்கருக்களையும் நான் ஏற்றுக்கொள்ள வைப்பதற்கான முயற்சியில் நான் ஈடுபடுகிறேன். இவ்விரு எண்ணக்கருக்களும் 1945,1946 காலப்பகுதியில் வெளிப்படுத்தப்பட்டது. ஆனால் 1998ல் உலக அரசாங்கங்கள் அனைத்தும் ஒன்றுசேர்ந்து மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றம் மற்றும் இனப்படுகொலை ஆகிய இரு எண்ணக்கருக்களையும் ‘அனைத்துலக குற்றவியல் நீதிமன்றின்’ [International Criminal Court – ICC] சட்டத்தில் இணைத்தன. இவ்விரு எண்ணக்கருக்களும் சட்டத்திற்கு மிக முக்கியமானவை என இந்த உலகம் ஏற்றுக்கொண்டுள்ளது.
கேள்வி: மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றம் என்கின்ற சட்ட எண்ணக்கருவானது குற்றமிழைத்த தனியொருவருக்கு தண்டனை அளிப்பதையும், இனப்படுகொலை என்பது அதனைப் புரிந்த முழுக் குழுவிற்கும் தண்டனை அளிப்பது எனவும் கருதமுடியுமா?
பதில்: இது உண்மையில் சரியானது என நான் கருதுகிறேன். இனப்படுகொலை ஒன்றைப் புரிகின்ற ஒருவர் ஒரு குழுவை அழிப்பதை நோக்காகக் கொண்டே இதனைச் செய்கிறார். ஆகவே இவ்வாறான இனப்படுகொலையைப் புரிகின்ற ஒருவரின் குழுவானது பாதிக்கப்பட்ட குழுவை அழிக்க முயல்கிறது. இதனால் இனப்படுகொலையைப் புரிய நினைப்போர் தண்டிக்கப்பட வேண்டும். இதுவே தொடர்ந்தும் இது இடம்பெறாதிருக்க வழிவகுக்கும்.
மக்கள் தனியொரு மனிதர்களாக இருப்பதால் கொல்லப்படவில்லை. இவர்கள் அவர்களின் குழுவின் அடிப்படையிலேயே கொன்றொழிக்கப்படுகின்றனர். இதனால் லெம்கின் கூறிய இனப்படுகொலைக் கருத்து சரியானதாக தென்படுகிறது.
கேள்வி: உங்களது அபிப்பிராயத்தின் படி, இது தொடர்பில் ஏதாவது செய்யப்பட வேண்டியுள்ளதா? இனப்படுகொலை என்பது சட்ட எண்ணக்கருவிலிருந்து நீக்கப்பட வேண்டுமா?
பதில்: இது மிகப் பெரிய கேள்வி என நான் கருதுகிறேன். இவ்வாறான ஒரு கடினமான சூழலை சமன்செய்வதற்கு சட்டம் எவ்வாறான சிறந்த உதவியை வழங்க முடியும் என்பதைக் கண்டறிவதற்கான பணியில் நான் ஈடுபட்டுள்ளேன். பயங்கரமான சம்பவங்கள் இடம்பெறுவதை சட்டத்தால் முற்றாக தடுக்க முடியாது. ஆனால் கடந்த காலத்தில் என்ன நிகழ்ந்தன என்பதை சட்டம் விபரிக்கும். இது பயன்மிக்கது. இவ்வாறான பயங்கரச் சம்பவங்கள் எதிர்காலத்தில் ஏற்படுவதை சட்டத்தால் தடுக்க முடியும்.
இவற்றை அடையாளங் காண்பதென்பது மிகவும் சிக்கலான வினாவாகும். இவற்றை ஆராயும் போது, 1940களின் நடுப்பகுதியில் அமெரிக்காவில் இனப்படுகொலை என்கின்ற எண்ணக்கரு மிகப் பலமாக எதிர்க்கப்பட்டது என்ற உண்மையை கண்டறிய முடிகிறது. குறிப்பாக அமெரிக்காவின் தென்பகுதி செனற்றர்கள் இந்த எண்ணக்கருவை மிக வலுவாக எதிர்த்திருந்தனர். இவர்கள் லெம்கினின் கருத்தோடு ஒத்துப்போகவில்லை. ஏனெனில் அந்தக் காலப் பகுதியில், அமெரிக்காவின் தென் பகுதியில் பாரபட்சப்படுத்துதல் மிகப் பெரிய பிரச்சினையாக உருவெடுத்திருந்ததால் இதனைக் கையாள்வதற்கு லெம்கினின் புதிய சட்ட எண்ணக்கரு பயன்படுத்தப்படலாம் என தென்பகுதி அமெரிக்க செனற்றர்கள் கருதினர்.
குறிப்பாக அமெரிக்காவைச் சேர்ந்த வெள்ளையினத்தவர்களுக்கும் கறுப்பினத்தவர்களுக்கும் இடையில் அப்போது ஏற்பட்டிருந்த குழப்பநிலையை இந்த எண்ணக்கருவானது மேலும் அதிகரிக்கும் என அமெரிக்கர்கள் அச்சப்பட்டனர். நீக்ரோக்கள் என அழைக்கப்பட்ட கறுப்பினத்து அமெரிக்கர்கள் தம் மீதான பாரபட்ச சட்டங்களை எதிர்ப்பதற்கு இந்த எண்ணக்கருவைப் பயன்படுத்தலாம் என வெள்ளையினத்தவர்கள் அச்சமுற்றனர். இவ்வாறான விவாதங்களை மேற்கொள்ளும் போது உலகிலுள்ள எந்தவொரு சமூகமும் இவ்விரு சட்ட எண்ணக்கருக்களிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க முடியாது என நான் கருதுகிறேன். இது உண்மையில் எங்கள் எல்லோரது உணர்வுகளையும் தொட்டுள்ளதுடன், மனித உயிரினத்தின் நிலைப்பாட்டை கண்டறிவதற்கும் உதவுகின்றது.
கேள்வி: இந்த ஆராய்ச்சி தொடர்பாக நீங்கள் தற்போது புதிய நூலொன்றை எழுதிவருகிறீர்கள். இது தொடர்பாக ஏதாவது கூறமுடியுமா?
பதில்: இந்த நூல் அடுத்த ஆண்டு வெளியிடப்படும். அமெரிக்காவிலுள்ள Knopf பதிப்பகத்தால் இது வெளியிடப்பட்டு பின்னர் உலகெங்கும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கிறேன். இது Lemberg/Lwow/ வாழ்ந்த Lviv நகரத்தை முதன்மைப்படுத்துவதால் இது எனது தனிப்பட்ட புத்தகமாக நான் கருதுகிறேன். இந்த நகரத்தில் லெம்கின் மற்றும் லோற்றர்பாச் ஆகிய இரு சட்ட வல்லுனர்களும் வாழ்ந்த காலத்தில் எனது பாட்டனாரும் இந்த நகரத்தில் பிறந்தார் என்பது எனக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
எனது சொந்த உறவுகளுடன் தொடர்புபட்ட இந்த நகரத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்வதை நினைக்கும் போது நான் வியப்படைகிறேன். இந்த நூல் அடுத்த ஆண்டு வெளிவரவுள்ள நிலையில் இது தொடர்பாக குறிப்பாக இதில் விவாதிக்கப்படும் மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றம் மற்றும் இனப்படுகொலை தொடர்பான இரு வேறு சட்ட எண்ணக்கருக்கள் தொடர்பாக மேலும் விவாதங்களும் கருத்துக்களும் மேற்கொள்ளப்படும் போது நான் மிகவும் மகிழ்வடைவேன்.