புலிகள் மேற்குலக நாடுகளில் ஆதிக்கம் செலுத்தினர் – கோதபாய ராஜபக்ஷ

தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்குலக நாடுகளில் ஆதிக்கத்தை செலுத்தியதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.யுத்தம் இடம்பெற்ற காலத்தில் மேற்குலக நாடுகளின் அரசியல் தலைமைகள் மீது புலிகள் பல்வேறு வழிகளில் தாக்கம் செலுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார். காலியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

யுத்தத்தை தடுத்து நிறுத்த பல்வேறு தரப்பினர் முயற்சி மேற்கொண்டதாகவும் அரசாங்கம் அந்தச் சாவல்களை வெற்றிகரமாக எதிர்நோக்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.பிரித்தானியா, பிரான்ஸ் போன்ற நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களும், ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் விசேட பிரதிநிதி ஒருவரும் இறுதி நேரத்தில் யுத்தத்தை நிறுத்தும் நோக்கில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் வலுவான பிரச்சாரப் பொறிமுறைமை ஒன்றின் மூலம் சர்வதேச நாடுகளின் மீது தாக்கத்தை செலுத்தியதாகத் தெரிவித்துள்ளார். சில நாடுகள் இலங்கைக்கு ஆயுதங்களை விற்பனை செய்யக் கூடாது என்ற கட்டுப்பாட்டையும் விதித்திருந்ததாக் குறிப்பிட்டுள்ளார். சீனா, ரஸ்யா போன்ற பலம்பொருந்திய நாடுகளுடன் சிறந்த ராஜதந்திர உறவுகளை பேண வேண்டிய நிர்ப்பந்தம் காணப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

தமிழக அழுத்தங்கள் காரணமாக இந்தியாவுடனான உறவுகளைப் பேணுவது மிகவும் நெருக்கடி மிக்கதாக அமைந்திருந்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.1987ம் ஆண்டில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் படையினர் வெற்றிகளை ஈட்டிய போது இந்தியா அதனை தடுத்து நிறுத்தியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.நாட்டில் நிரந்தர ஸ்திரத்தன்மையை பேணுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *