தமிழகத்தில் 7 கோடி தமிழர்கள் இருந்தும் ராஜபக்சே பயமில்லாமல் இருப்பதற்குக் காரணம் மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசும், அதற்கு வால் பிடிக்கும் திமுகவும் தான் என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவரான பழ. நெடுமாறன் கூறினார்.
சசிகலாவின் கணவர் ம.நடராஜன் நடத்தும் நடராஜன் மருதப்பா அறக்கட்டளை சார்பில் தஞ்சாவூரில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடந்த தமிழர் கலை இலக்கிய விழாவில் பங்கேற்று நெடுமாறன் பேசுகையில்,
இலங்கையில் ஒரு கோடி சிங்களர்கள் வாழ்கின்றனர். ஈழப் போருக்கு முன்னதாக அங்கு 45 லட்சம் தமிழர்கள் வாழ்ந்தனர். அவர்களில் 3 லட்சம் பேர் போரில் கொல்லப்பட்டுவிட்டனர். 5 லட்சம் தமிழர்கள் வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்துள்ளனர்.
இன்னும் 5 லட்சம் தமிழர்கள் இலங்கையின் வட கிழக்குப் பகுதிகளிலேயே அகதிகளாக, சிங்களர்களின் கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர்.
இப்போது ஈழத்தில் தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளில் சிங்களர்கள் குடிபெயர்ந்து, அங்கிருந்த தமிழ் அடையாளங்களை அழித்து வருகின்றனர்.
ஈழத்திலிருந்து 20 மைல் தொலைவில் உள்ள தமிழகத்தில் 7 கோடி தமிழர்கள் உள்ளனர். இருந்தும், ஈழப் போருக்கு எதிராகத் தமிழகத்தில் எழுந்த எதிர்ப்புகள், போராட்டங்கள் குறித்து ராஜபக்சேவுக்கு பயம் வரவில்லை.
இதற்குக் காரணம் இந்திய அரசும், அதற்கு வால்பிடித்து வந்த முந்தைய திமுக அரசும்தான். மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு தமிழர்களுக்கு எதிரானது.
தமிழர்களின் குரல்களை இந்திய அரசு மதிக்காததற்கும், அன்றைய திமுக அரசுதான் காரணம். தமிழர்கள் வரலாற்றில் மாறாத அவமானக் கறையாக இந்த நிகழ்வுகள் அமைந்துவிட்டன.
இந்தக் கறையைத் துடைத்தெறிய, தமிழர்களுக்கு எதிரான அரசுகளையும், கட்சிகளையும் அடையாளம் கண்டு ஒதுக்க வேண்டும். மீண்டும் ஈழத்தில் தமிழ் விடுதலைப் போர் வெடிக்கும் என்றார் நெடுமாறன்.