Search

சிதம்பராக்கல்லூரி: தோற்றமும் வளர்ச்சியும்,பகுதி 1

ஈழத்தின் வரலாற்றுப்பெருமை மிக்கது வல்வை மாநகரமாகும். இம் மாநகரத்திலே பல பெருமைகள் கொண்ட வல்வையின்கண் தலைசிறந்த கல்விப்பீடமாக விளங்கி இற்றைக்கு ஒரு நூற்றாண்டு கடந்து வெற்றிநடைபோடுகின்றது எங்கள் சிதம்பரக்கல்லூரி.இக்கல்லூரியின் வளர்ச்சிக்கு பலர் பல்வேறுபட்ட பணிகளை ஆற்றி இருக்கின்றனர். அவர்களை இவ்விடத்தில் நினைவு கூர்வதோடு பாடசாலையின் தோற்றம்இ வளர்ச்சி பற்றி அழகாக நோக்குவோம். எமது கல்லூரியை இற்றைக்கு நூற்றிப்பதின்னான்கு வருடங்களுக்கு முன் ஸ்தாபித்த வள்ளல் பெருந்தகை கு.சிதம்பரப்பிள்ளை என்பவர் ஆவார். இவரைப்பற்றி இங்கு குறிப்பிடுவது சாலப் பொருந்தும்.

திரு.கு.சிதம்பரப்பிள்ளை

இவர் 1861 ஆம் வருடம் பிறந்தார். இலக்கண, இலக்கியங்களை கற்றுத்தேறியதோடு, ஆங்கிலம் கற்று அரச சேவையில் சேர்ந்து பணியாற்றினார். இவர் மாணவராக இருந்த காலத்தில் வல்வெட்டித்துறையில் ஆங்கிலக்கல்லூரி இல்லாத காரணத்தினால் ஐந்து மைல்களுக்கு அப்பால் பருத்தித்துறையிலுள்ள ‘உவெஸ்ஸியன் மிஷன்’ மத்திய பாடசாலை என்ற பெயரைக் கொண்டிருந்த ஹாட்லிக் கல்லூரியில் கற்று வந்தார். அக்கால கட்டத்தில் வசதி வாய்ப்புக்கள் இல்லாத காரணத்தினால் மிகுந்த கஷ்டப்பட்டு கல்வி கற்றுத் தேறினார். அக்காலத்தில் தான் ஆங்கிலக் கல்வியை கற்றது போல எம்மவரும் கற்க வேண்டும் எனப் பலவாறு சிந்தித்தார். இவை யாவற்றையும் கருத்திற் கொண்டு வல்வையிலுள்ள பெற்றோர்கள் யாவரையும் பொதுக்கூட்டம் ஒன்றுக்கு அழைத்து அக்கூட்டத்திலே ஆங்கிலக்கல்வியின் முக்கியத்துவத்தினையும், சிறப்பையும் எடுத்துக்கூறி எமது சிறார்களும் உலகுடன் உறவாட உதவும் மொழியான ஆங்கிலக்கல்வியை எமது மாநகரிலே கற்பிக்க கல்லூரி ஒன்றை ஸ்தாபிக்க உள்ளதாகவும் அதற்கு நீங்கள் ஆதரவு தரவேண்டும் என்றும் கோர, மக்களின் ஏகோபித்த ஆதரவு கிடைக்கவே கல்லூரி அமைப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.இதன் காரணமாக சிறந்த நந்நாள் ஆகிய 1896 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 11ஆம் திகதி வல்வை முத்துமாரி அம்மன் கோவிலுக்கு அருகாமையிலுள்ள ‘ஆலடியில்’ சிதம்பர வித்தியாலயம் என்னும் பெயருடன் இயங்க ஆரம்பித்தது. இவ்வேளை ஆரம்பப் பணிகளை செவ்வனே நிறைவேற்றி சிறிது காலத்திற்குப் பின்னர் 1903 ஆம் வருடம் இறைவனடி சேர்ந்தார்.
ஆரம்பத்தில் சிதம்பர வித்தியாலயம் என்னும் பெயரோடு முதன்நிலைக் கல்லூரியாக இருந்த சிதம்பரா ஒரு வருடத்தின் பின்னர் கல்வித் திணைக்களத்தினால் நன்கொடை வழங்கும் பாடசாலையாகப் பதிவு செய்யப்பட்டது. ஆலடியில் இயங்கி வந்த பாடசாலைக்கு மாணவர் தொகை அதிகரிப்பினால் இடவசதிப் பற்றாக்குறை ஏற்பட்டது. இதன் காரணமாக ஆலடியில் இயங்கி வந்த இப்பாடசாலை 1912 ஆம் வருடம் ஊரிக்காட்டில் தற்போதைய நிலையத்திற்கு மாற்றப்பட்டது. ஆரம்பத்தில் ஐந்தாம் வகுப்பு வரையிலேயே நடைபெற்று வந்த இப்பாடசாலை 1923 ஆம் ஆண்டு இரண்டாம் தரக்கனிஷ்ட பாடசாலையாகத் தரமுயர்த்தப்பட்டதுடன் 1928 ஆம் வருடம் கேம்பிரிஜ் சீனியர் பரீட்சைக்கு மாணவர்கள் தோற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. 1935 ஆம் ஆண்டு லண்டன் ‘மற்றிக்குலேஷன்’ பரீட்சைக்கு மாணவர்கள் தோற்றுவதற்கு ஏதுவாக வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டன. இவ்வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்ட காலங்களில் ஹாட்லிக் கல்லூரிக்கு அடுத்தபடியாக எமது பாடசாலை தரம் D யைப் பெற்றமையும் இங்கு குறிப்பிட வேண்டும். லண்டன் மற்றிக்குலேஷன் பரீட்சை வகுப்புக்களைத் தொடர்ந்து சிரேஷ்ட பாடசாலைத் தராதர வகுப்புக்கள் 1942 ஆம் வருடம் ஆரம்பிக்கப்பட்டன.
சர்வகலாசாலைப் புகுமுக வகுப்புக்கள் ஆரம்பிப்பதற்கு போதுமான வசதிகள் 1935 ஆம் வருடமே இருந்தபோதிலும் கூட 1958 ஆம் வருடத்தில் தான் இந்த வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டன. எமது பாடசாலையின் வேலைத்திட்டங்களையும், சாதனைகளையும், நடவடிக்கைகளையும் உன்னிப்பாக அவதானித்த கல்வித் திணைக்களம் எமது கல்லூரியை தரம் II என 1958 ஆம் ஆண்டு தை மாதம் தரமுயர்த்தியது. அத்தோடு மறுவருடமே தரம்ஐ பாடசாலையாக தரமுயர்த்தி மதிப்பளித்து பாராட்டியது மட்டுமன்றி சிதம்பரக்கல்லூரி என்ற பெயரைப் பெற்று இன்று வரையும் அப்பெயரோடும் பெருமையோடும் வாழுகின்றது.
1896 ஆம் வருடம் இக்கல்லூரி ஸ்தாபிக்கப்பட்ட சமயம் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் பருத்தித்துறையைச் சேர்ந்த திரு.விநாயகம் முதலியாரும்அவரைத் தொடர்ந்து திரு.ஏ.நாகமுத்து, திரு.வீ.அருணாசலம் அவர்கள் முகாமையாளர்களாக இருந்து கல்லூரியை வழிநடத்தி வந்துள்ளனர். 1901 ஆம் ஆண்டு தொடக்கம் 1960 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து 60 ஆண்டுகளாக பாடசாலையின் முகாமையாளராக திரு.ஞா. தையல்பாகர் அவர்கள் பணியாற்றி இருந்தார். அவரின் பணி என்றால் மிகையாகாது.
                                                                                                                  திரு.ஞா. தையல்பாகர்
இவரின் காலத்தில் பாடசாலையில் பல்வேறு வேலைகள் இடம்பெற்றதுடன் தேசிய ரீதியிலும், மாவட்டரீதியிலும் மாணவர்கள் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். அத்தோடு 1959 ஆம் ஆண்டு பாடசாலை அபிவிருத்தி நிதிக்காக களியாட்ட விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு மாணவர்களும் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி அதனால் கிடைத்த நிதியைக் கொண்டு கல்லூரிக்குத் தென்புறமாகவுள்ள ஐந்தரைப் பரப்பு காணி ஒன்று கொள்வனவு செய்யப்பட்டது. 1960 ற்குப் பின்னால் இவரின் காலத்திலேயே பாடசாலை அரசுடமை ஆக்கப்பட்டது.எமது கல்லூரியானது ஒரு குறிப்பிட்ட காலத்தில் நாட்டில் ஏற்பட்ட யுத்தசூழ்நிலைகளால் 1985 ஆம் ஆண்டு வேறொரு பாடசாலையிலும் 1987 ஆம் ஆண்டு இன்னொரு பாடசாலையிலும் தனியார் கல்வி மன்றத்திலும் அப்போதைய அதிபர்களும், ஆசிரியர்களும், மாணவர்களும், பெற்றோர்களும், பழைய மாணவர்களும் கல்லூரியை இயங்க வைப்பதற்கு எடுத்த முயற்சி மிகையாகாது.
1975 ஆம்ஆண்டு தொடக்கம் 1994 ஆம் ஆண்டு வரை அதிபராக இருந்த திரு.கோ.செல்வவிநாயகம் அவர்களின் முயற்சியினாலும், ப.மா.ச, பா.அ.சங்கம் இவர்களது துணையினாலும் பாடசாலையில் முறைசாராக்கல்வி ஆரம்பிக்கப்பட்டு மாணவர்களுக்கு தொழிற்துறை சார்பாக பயிற்சிகள் வழங்கப்பட்டன. எமது கல்லூரி நூற்றாண்டு விழா தாண்டி வீரநடை போடும் இந்தச் சந்தர்ப்பத்தில் எமது பாடசாலையில் கல்வி பயின்ற வைத்தியகலாநிதிகள், நிபுணர்கள், பொறியியலாளர்கள், நீதிபதிகள், பேராசிரியர்கள், வழக்கறிஞர்கள், அதிபர்கள், உத்தியோகத்தர்கள் எனப் பலவாறாகப் பல்வேறு துறைகளில் பிரகாசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எமது கல்லூரியிலிருந்து வெளியேறிய மாணவர்கள் அகில இலங்கை ரீதியில் மட்டுமல்லாமல் சர்வதேச ரீதியிலும் பிரபல்யம் அடைந்து தாய் நாட்டிற்கும், வல்வை நகருக்கும் பெருமை தேடித் தந்துள்ளனர். எமது பாடசாலை வளங்கள் பெரும்பாலானவை வல்வையர்களால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
எமது கல்லூரி மாணவர்கள் கல்வியில் மாத்திரமன்றி விளையாட்டுத்துறை, சாரணீயம், நாடகம், சங்கீதம், பொருட்காட்சி, சாகசங்கள் போன்ற பல துறைகளிலும் தமது திறமைகளை வெளிக்கொணர்ந்து எமது கல்லூரிக்குப் பெருமை சேர்த்தனர்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *