தென் அமெரிக்க நாடான பிரேசிலின், பரானா மாகாணத்தில் உள்ள, கியூரிட்டிபா நகரின் எவான்ஜிலிகோ மருத்துவமனையில், தீவிர சிகிச்சை பிரிவின் தலைமை மருத்துராக பணிபுரிந்தவர், விர்ஜீனியா ஹெலெனா டிசோசா, இவருக்கு வயது 56.மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட, ஏராளமான ஏழை நோயாளிகளை கொன்றார் என, இவர் மீது, குற்றம் சாட்டப்பட்டுள்ளது.தசைகளை வலுவிழக்கச் செய்யும் மருந்துகளை, அதிக அளவில் கொடுத்தும், பிராண வாயு அளிப்பதை நிறுத்தியும், நோயாளிகளை கொன்றது, விசாரணையில் தெரியவந்துள்ளது.
தீவிர சிகிச்சைப் பிரிவில், இவர் பணியில் சேர்ந்ததில் இருந்து, கடந்த, ஏழு ஆண்டுகளில் இறந்த, 1,700 நோயாளிகளின் மருத்துவ குறிப்புகளை ஆராய்ந்ததில், 300 பேரை, இவர் கொன்றது தெரியவந்துள்ளது.பிரேசில் அரசின் சுகாதாரத் திட்டத்தின்படி, ஏழைகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. பணவசதியுள்ள அல்லது தனியார் மருத்துவ காப்பீடு செய்த, நோயாளிளை அந்த படுக்கைகளில் அனுமதிக்க திட்டமிட்டே, ஏழை நோயாளிகளை இவர் கொன்றார் என, சந்தேகிக்கப்படுகிறது.
இக்குற்றத்தில் அவருக்கு உதவிய, அவரது மருத்துவ குழுவினர் மீதும், கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. விடுப்பில் இருந்த நாட்களில், போன் மூலம் மற்ற மருத்துவர்களை தொடர்பு கொண்டு, நோயாளிகளை, “முடிப்பது’ குறித்து, இவர் உத்தரவிடுவாராம்.