Search

பாசத்திற்குரிய பிரித்தானிய உறவுகளுக்கு……… யாழ்.மாவட்ட மக்கள் பேரவை.

தமிழ் மக்களின் 65 ஆண்டுகாலப் போராட்டத்தின் இலட்சியமான தமிழீழத்திற்கு பொது வாக்கெடுப்பு நடத்தக் கோரியும் சிறிலங்கா படைகளால் இழைக்கப்பட்ட யுத்தக் குற்றங்களை சர்வதேசப் பொறிமுறையின் ஊடாக விசாரிக்கக் கோரியும் தமிழக உறவுகளுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாகவும் பிரித்தானியாவில் எதிர்வரும் 5 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள எழுச்சி நிகழ்விற்கு புலம்பெயர் தேசத்திலுள்ள தமிழ் மக்கள் அனைவரும் எழுச்சிடன் பங்குபற்ற வேண்டுமென்று யாழ். மாவட்ட மக்கள் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.

பிரித்தானியாவில் நடைபெறுகின்ற போராட்டங்களுக்கும் ஏனைய நாடுகளில் நடைபெறுகின்ற போராட்டங்களுக்குமிடையே நிறைய வித்தியாசம் இருக்கின்றது. தமிழ் மக்களின் இன்றைய நெருக்கடிகளுக்கு ஏனைய நாடுகளை விட பிரித்தானியாவே அதிகூடிய காரணகர்த்தாவாக உள்ளது. இதனால் இங்கு நடைபெறுகின்ற போராட்டங்கள் எழுச்சியுடையதாக அமைவதன் மூலம் நாம் பிரித்தானியாவிற்கு எமது இலட்சிய வேட்கையை வெளிப்படுத்த முடியுமென்றும் யாழ். மாவட்ட மக்கள் பேரவை தெரிவித்துள்ளது.

நேற்று (02-04-2013) திங்கட்கிழமை இரவு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழர் தாயகம் இன்று சிங்களப் படைகளாலும் சிங்கள கைக்கூலிகளாலும் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றது. இங்கு வாழ்கின் தமிழ் மக்கள் மீது தொடர்ந்தும் இன வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டு வருகின்றன. தமிழ் மக்களை சிறிலங்காத் தீவிலிருந்து இல்லாதொழிப்பதன் மூலம் சிறிலங்காவைத் தனிச் சிங்கள நாடாக மாற்றுவதற்கு மகிந்த குடும்பம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. பார்க்கும் இடமெங்கும் படை முகாம்கள். திரும்பும் திசையெங்கும் காவலரண்கள். இந்த ஆக்கிரமிப்பு நிலை நீடிக்குமாயின் இன்னும் குறுகிய காலத்தில் எமது தமிழினம் இந்து சமுத்திரத்தில் வீழ்ந்து மடிய வேண்டிய நிலையே ஏற்படும்.

இவ்வாறான நிலையில் எமக்கு தேவை தமிழீழத் தனித் தாயகம் என்பதை வலியுறுத்தி தமிழக உறவுகள் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பல வழிகளிலும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். தாயகத்திலிருக்கின்ற நாங்கள் இங்கே சிறிலங்;கா அரசுக்கு எதிராக எந்தவொரு எதிர் நடவடிக்கையையும் முன்னெடுக்க முடியாத நிலையறிந்து தமிழக மாணவர்கள் தொடங்கிய போராட்டத்தில் ஒட்டுமொத்த தமிழகமே கொதித்தெழுந்து எழுச்சியுடன் பங்குபற்றிக்கொண்டிருக்கின்றமை எமக்கெல்லாம் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் தமிழரின் பிரச்சினைகளுக்கான தீர்வாக அமையவுள்ள தமிழீழத் தனிநாட்டுக்கு புலம் பெயர் தமிழ் மக்களிடையேயும் ஈழத் தமிழ் மக்களிடையேயும் பொது வாக்கெடுப்பு நடத்தக் கோரிக்கை விடுத்தும் தமிழக மாணவர்களுக்கு ஆதரவை வெளிப்படுத்தும் முகமாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் எழுச்சி நிகழ்வு எதிர்வரும் ஐந்தாம் திகதி பிரித்தானியாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்மையை அறிந்து நாங்கள் யாழ். மாவட்ட மக்களாகிய நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம்.

பிரித்தானியாவில் இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை பொருத்தமானது. ஏனெனில், தமிழ் மக்களின் இன்றைய நெருக்கடிகளைத் தீர்த்து வைக்கவேண்டிய பெரும் பொறுப்பு பிரித்தானியாவையே சாரும். ஈழத்தில் நடைபெற்ற 65 ஆண்டுகால யுத்தத்தில் கொல்லப்பட்ட லட்சக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்களின் உயிர்களுக்கு பிரித்தானியாவே பதில் கூற வேண்டும். கடந்த 1948 ஆம் ஆண்டு சிறிலங்காவிற்கு சுதந்திரம் வழங்கிய பிரித்தானியர் தமிழ் மக்களையும் உள்ளடக்கியதாக ஒரு அரசியல் யாப்பைத் தயாரித்து தமிழ்-சிங்கள இனங்களை ஒற்றுமைப்படுத்தி ஆட்சிக் கதிரையில் அமர்த்திவிட்டுச் சென்றிருந்தால் இன்று இந்த நாட்டில் தமிழர்களும் சம உரிமையுடன் வாழந்திருப்பார்கள். ஆனால், அவ்வாறு செயற்படாத பிரித்தானியா அன்று பெரும்பான்மையாக இருந்த சிங்களவர்களிடம் மாத்திரம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்தமை அவர்களின் தவறாகும். இதனாலேயே ஈழத்தில் இன்று தமிழர்கள் அடக்கியொடுக்கப்படுகின்றனர்.

அன்று விட்ட தவறை பிரித்தானியா இன்று நிவிர்த்தி செய்ய முடியும். சிறிலங்காவை தட்டிக்கேட்க முடியும். ஆனால், அதனைச் செய்யாத பிரித்தானியா வாழாவிருக்கின்றது. தமிழ் மக்களின் அழிவைக் கண்டு ரசித்துக்கொண்டிருக்கிறது. எனவே, பிரித்தானியாவின் காதுகளில் நாங்கள் இடித்துரைப்பதன் மூலம் எமது கோரிக்கைகளை நாம் எடுத்துக்கூற முடியும். இதற்காக இந்த நிகழ்வில் அனைத்து மக்களும் எழுச்சியுடன் பங்குபற்ற வேண்டும். பிரித்தானியாவில் இருக்கின்ற மக்கள் மட்டுமன்றி அயல் நாடுகளில் இருக்கின்ற மக்கள் கூட இதில் பங்குபற்ற முடிந்தால் அதனைச் செய்வது நன்மையாக இருக்கும்.

அன்புக்குரிய உறவுகளே!

கடந்த ஒரு மாத காலமாக தமிழக உறவுகள் எமக்காக எவ்வளவோ தியாகங்களைச் செய்கின்றார்கள். இவர்களின் போராட்டத்தைப் பார்க்கும்போது உண்மையிலேயே எங்களுக்கு மெய் சிலிர்க்கின்றது. அந்தளவிற்கு அவர்கள் உணர்ச்சியுடன் போராடுகின்றனர். இதேபோன்று புலம்பெயர் நாடுகளிலும் போராட்டங்கள் வெடிக்க வேண்டும். எழுச்சி கொண்ட எந்தவொரு இனமும் வீழ்ச்சி கண்டதாக வரலாறு இல்லை என்று தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் கூறியதைப் போல நாங்கள் எழுச்சியடைவதன் மூலமே எமது உரிமைகளை வென்றெடுக்க முடியும்.

தற்போது எமக்கு சரியான காலம் ஒன்று கிடைத்திருக்கின்றது. எமக்கு ஆதரவாக ஒட்டுமொத்த தமிழகமே எழுந்து நிற்கின்றது. இது சரியான தருணம். எமது தமிழக உறவுகளின் இந்த எழுச்சியுடன்தான் எமக்கு உரிமைகள் கிடைக்கும். ஈழத் தமிழரின் பிரச்சினைக்கு இந்தியாதான் தீர்வுகாண வேண்டும். இந்தியாவின் உதவியின்றி எந்தத் தீர்வும் கிடைக்காது என்று தந்தை செல்வநாயகம் போன்ற தமிழ்த் தலைவர்களின் வரிசையில் எமது தமிழீழ தேசியத் தலைவர் அவர்களும் இந்தியாவின் உதவியின்றி நாம் தமிழீழத்தை அடைய முடியாது என்று கூறியிருந்தார்.

அந்த இந்தியா இன்று எமக்கு பக்க பலமாக மாறியிருக்கின்றது. தமிழக உறவுகள் எமக்காக ஊண், உறக்கமின்றி போராடுகின்றனர். பாரதி கண்ட புதுமைப் பெண்கள் போல் தமிழக கல்லூரிகளிலுள்ள மாணவிகள் இன்று ஈழத் தமிழருக்காக வீதியில் இறங்கிப் போராடுகின்றனர். மாணவர்கள் அனைவரும் எமக்காக குரல்கொடுக்கின்றனர். இன்று திரைப்படச் சங்கத்தினரும் நடிகர்களும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக களத்தில் இறங்கியுள்ளனர். எல்லாவற்றுக்கும் மேலாக தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதா அவர்கள் தமிழீழத்திற்கான தீர்மானத்தை தமிழக சட்டசபையில் நிறைவேற்றியிருக்கின்றார்.

எனவே, காலம் எமக்காக கனிந்து வந்திருக்கின்றது. இந்தக் காலம் கனியக் காரணமானவர்கள் எமது தொப்புள்கொடி உறவுகளான தமிழக மாணவர்கள். அவர்களின் போராட்டங்களுக்கு வலுச்சேர்க்கும் வகையில் பிரித்தானியாவில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறுகின்ற போராட்டங்களில் பிரித்தானிய வாழ் தமிழ் மக்கள் அனைவரும் அலை அலையென எழுச்சியடைந்து பங்குபற்றுங்கள். பிரித்தானியாவில் மக்கள் புரட்சி வெடிக்கட்டும். தாயகத்தில் சுதந்திர தமிழீழம் மலரட்டும்.
அன்புரிமையுடன்,
தமிழ் மக்கள் பேரவை,
யாழ்.மாவட்டம்.
02.04.2013
Leave a Reply

Your email address will not be published.