அமெரிக்கத் தீர்மானமும் ஈழத்தமிழர்களும்! பார்த்தீபன்-

அமெரிக்கத் தீர்மானமும் ஈழத்தமிழர்களும்! பார்த்தீபன்-

ஈழத் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலைப்போர் முடிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் முடிவுரும் நிலையில் ஐய்க்கிய நாடுகள் சபையின் ஜெனீவா மனித உரிமைக் கூட்டத் தொடரில், இந்த ஆண்டும் அமெரிக்கா ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்திருக்கிறது. இலங்கை அரசு முள்ளிவாய்க்கால் போரில் மிகவும் கொடுமையான முறையில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டுள்ளது. ஈழத் தமிழர்கள்மீது திட்டமிட்டு இனப்படுகொலை நடத்தியது என்பதற்கு பல்வேறு ஆதாரங்கள் சர்வதேச ஊடகங்கள் பலவாற்றாலும் வெளியிடப்பட்டுள்ளன. இந்த நிலையில்தான் அமெரிக்கத் தீர்மானம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்கும் வகையில் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

மிகக்கொடிய போரினால் ஈழத் தமிழர்களை அழித்துவிட்டு எஞ்சியவர்களை அடக்கி ஒடுக்கி வைத்துக் கொண்டு எந்தத் தீர்வையம் வழங்காமல் எஞ்சிய மக்களையும் அழித்துக் கொண்டு ஈழமண்ணை அபகரித்துக் கொண்டிருக்கும் நிலையில்தான் அமெரிக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஐய்க்கிய நாடுகள் சபையின் ஜெனீவா மனித உரிமைக் கூட்டத் தொடரை முன்னிட்டு பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் புகைப்படங்கள், சனல் 4 ஆவணப்படங்கள் முதலியனவும் வெளியாகியிருந்தன. ஜெனீவா மாநாட்டில் பாதிக்கப்பட்டவர்களும் தமிழ் மக்களின் பிரதிநதிகளும் கலந்து கொண்டிருக்கிறார்கள். இலங்கை அரசு இழைத்த போர்க்குற்றத்திற்கும் மனித உரிமை மீறலுக்கும் எந்த தீர்மானத்தைக் கொண்டு வந்தாலும் போதாது என்று சொல்லிய மனித உரிமை ஆர்வலான சிங்களப் பெண்மணி நிமல்கா பெர்ணான்டோகூட கலந்து கொண்டார்.

என்ன சொல்லுகிறது தீர்மானம்?

இதைப்போலவே அமெரிக்கா கடந்த 2012ஆம் ஆண்டிலும் இலங்கைக்கு எதிராக ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தது. கடந்த ஆண்டு கொண்டு வந்த தீர்மானத்திற்கும் இந்த ஆண்டு கொண்டு வந்த தீர்மானத்திற்கும் இடையில் பெரிய வித்தியாசங்கள் இல்லை. போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்யும் நோக்கத்தை கொண்ட இத் தீர்மானம் சில சிக்கலான விடயங்களை அடிப்படையாகக் கொண்டிருப்பதனால் மிகவும் பலவீனமாக மாறியிருக்கிறது. அறுபதாண்டு காலமாக இலங்கையில் நடக்கும் இனப்பிரச்;சினைக்கும் முப்பதாண்டு காலமாக நடந்த போருக்கும் பின்னாலுள்ள காரணிகளை ஏற்றுக்கொள்ளாமல் அய்க்கிய இலங்கைக்குள் பிரச்சினைகளை தீர்க்கும் திட்டத்தை அடிப்படையாக முன்வைக்கிறது.

இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது சகோதரர்கள் மற்றும் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா போன்றவர்கள் நேரடியாகச் செய்ய போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை அரசு உள்ளக விசாரணையை நடத்த வேண்டும் என்று அமெரிக்கத் தீர்மானம் குறிப்பிட்டுள்ளது. கொலையாளிகள் தங்களை தாங்களே எப்படி விசாரணை செய்து கொள்வார்கள்? சர்வதேச நடவடிக்கைகளை கண்டு அஞ்சிய இலங்கை ஜனாதிபதி ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையையின் பரிந்துரைகளைகளை நிறைவேற்றவும் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அடிப்படையில் இந்தத் தீர்மானம் இலங்கையில் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு நீதியை வழங்கும்படி சொல்லுகிறது. இராணுவ ஆதிக்கத்தை நீக்குதல், சட்ட ஆட்சியைக் கொண்டு வருதல் நிலப்பிரச்சினையைத் தீர்த்தல் முதலிவிடயங்களையும் குறிப்பிடுகின்றது.

நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள்!

இராணுவ ஆதிக்கத்தை குறைக்க வேண்டும், நிலப்பிரச்சினையைத் தீர்க்க வேண்டும், மாகாணங்களுக்கு அதிகாரத்தைக் கூட்ட வேண்டும், மீள்குடியேற்றத்தை பூர்த்தி செய்ய வேண்டும் போன்ற அடிப்படைப் பிரச்சினைகளை கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட அமெரிக்கத் தீர்மானமும் சுட்டிக் காட்டியிருந்தது. முக்கியமாக நில அபகரிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இராணுவ ஆதிக்கத்தை குறைத்தல் முதலிய அடிப்படைப் பிரச்சினைகளை தீர்க்க இலங்கை அரசு எந்த முயற்சியையையும் மேற்கொள்ளவில்லை. மாறாக இந்தப் பிரச்சினைகளை இன்னுமின்னும் அதிகமாக்கிக் கொண்டிருக்கிறது.

மெனிக்பாமில் இருந்த மக்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்புப் பிரதேசத்திலுள்ள கேப்பாபுலவு என்ற கிராமத்தில் காடுகள் அழிக்கப்பட்டு குடியேற்றப்பட்டுள்ளனர். வவுனியாவில் இருந்த மெனிக்பாமை முல்லைத்தீவுக்கு மாற்றிவிட்டு மெனிக்பாமுக்கு மூடுவிழா செய்திருப்பதாகச் அரசால் அறிவிக்கப்பட்டது. அமnரிக்கத் தீர்மானத்தின் பின்னர் இலங்கை அரச செய்த ஒரே ஒரு நடவடிக்கை இதுதான். இந்தக் காலத்தில்தான் கொக்கிளாய், முறிகண்டி முதலிய இடங்களில் நிலங்களை அபகரிக்கும் நடவடிக்கையில் இலங்கை அரசு ஈடுபட்டது. யாழ்ப்பாணத்தில் வலிகாமம் வடக்கு, பலலாலி, மாதகல் போன்ற பல இடங்களில் 25 வருடங்களுக்கு முன்னர் இடம்பெயர்ந்த மக்கள் இன்னமும் மீள்குடியேற்றப்படவில்லை. அவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள முகாங்கள் இருக்கிறார்கள்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிரான தாக்குதல்கள், பத்திரிகை எரிப்புக்கள், முன்னாள் போராளிகள்மீதான மீள்கைது நடவடிக்கைகள் போன்ற எல்லாவற்றையும் தாராளமாகச் செய்து கொண்டே நல்லிணக்க நடவடிக்கையில் ஈடுபடுவதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறது இலங்கை அரசு. இலங்கையில் நடைபெற்ற அநீதிகளுக்கு எந்தத் தீர்ப்பும் இல்லாத நிலையினால்தான் இப்பொழுதும் அந்த அநீதிகள் தொடரந்து கொண்டிருக்கின்றன.

இலங்கையின் சண்டித்தனம்!

பயத்தோடு வாழ்ந்த மக்களை அதிலிருந்து மீட்டெடுத்து அமைதியான வாழ்க்கையை பரிசளித்து தேசத்திற்கு மகுடம் சூட்டிய தனக்கு உலகம் முள்முடி சூட்ட முனைகிறது என்று இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சொல்லியுள்ளார். தான் இழைத்த போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலையால் தனக்கு எதிராக எப்பொழுது நடவடிக்கை எடுப்பார்;கள் என்று ராஜபக்ச அஞ்சிக் கொண்டிருக்கிறார். அவர் பேசும் மேடைகளிலெ;லலாம் சர்வதேச அழுத்தங்களை எதிர்த்தே பேசுகிறார்.

அதுமட்டுமன்றி தன்னுடைய கட்சியில் உள்ள விமல் வீரவன்ச, சம்பிக்க ரணவக்க போன்றவர்கள் சிங்கள இனவாத மொழியால் கடுமையாக சர்வதேசத்தை தாக்குபவர்கள். அவர்களை வைத்தும் சர்வதேசம் மீது தாக்குதல் நடத்தி வருகின்றார். தமிழக முதல்வர் ஜெயலலிதாவை கடுமையாகத் தாக்கிப் பேசிய விமல் வீரவன்ச தென்னிந்தியாவில் தமிழ்நாடு அமைக்கச் சொல்லியுள்ளார்.

ராஜபக்ச மற்றும் அவரது தம்பி கோத்தபாய ராஜபக்ச முதலியவர்கள் மீது போர்க்குற்றத்திற்காக நடவடிக்கை எடுப்பதாக இருந்தால் தங்கள் பிணத்தின்மீதான் அந்த நடவடிக்கை நடக்கும் என்று சொல்லியிருக்கிறார் பௌத்த பிக்குவும் இனவாதியுமான பெங்குமுவ நாலக தேரர். பௌத்த பிக்குகளையும் அப்பாவி சிங்கள மக்களையும் மகிந்த ராஜபக்ச சர்வதேசத்திற்கு எதிரான படையணியாக உருவாக்கியுள்ளார்.

போர்க்குற்றங்களுக்கு தண்டனை வழங்குவதன்மூலம் தமிழ் மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியாது என்று சொல்லியுள்ளார் ராஜபக்சவின் தம்பி கோத்தபாய. இதன்மூலம் தாம் இழைத்த போர்க்குற்றங்களை அவர் ஒப்புக்கொண்டிருக்கிறார். இலங்கை அரசு தான் இழைத்த குற்றங்களை நேரடியாக ஒப்புக்கொள்வது கிடையாது. பாலச்சந்திரனை கொலை செய்ததை ராஜபக்ச மறுத்துவிட்டு ஏன் சனல் 4 இவ்வளவு நாளும் இந்தப் படங்களை ஒளித்து வைத்திருந்தது என்று கேட்டார். அமெரிக்கா போன்ற நாடுகள் விடுக்கும் சவால்களை எதிர்நோக்கத் தயார் என்று சொல்லும் இலங்கை அமெரிக்காமீதான போர்க்குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்ய அந்த நாட்டுக்கு நீண்ட காலமெடுப்பதுபோலவே தங்களுக்கும் கால அவகாசம் தேவை என்றும் சண்டித்தனமாகச் சொல்லுகிறது.

இந்தியாவின் நேசம்!

ஈழத் தமிழர்களுக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு உள்ள பங்கு அதிகமானது. இந்தியாவுக்காகவே இந்தப் போரை நடத்தினோம் என்று இலங்கை அரசு சொல்லியிருக்கிறது. அதனால்தான் நட்பு நாடுமீது நடவடிக்கை எடுக்க முடியாது என்கிறது. இலங்கை எங்கள் நட்புநாடு என்று சொல்லிக்கொண்டிருக்கிறமுது.

இலங்கை தமிழர்களின் நலனில் இந்தியா அக்கறை காட்டுகிறது, இலங்கைத் தமிழர்களுக்கு சுயாட்சி பெற்றுக்கொடுப்போம் போன்ற வாக்குறுதிகளை விட்டு தமிழகத்தை சமாளிக்க முனையும் இந்தியாவுக்கு இலங்கைமீதா நேசம் மிகவும் அதிகமே. அமெரிக்கா, சீனா போன்ற வல்லாதிக்கங்களிடம் சென்றுவிடக்கூடாது என்பதற்காகவும் அது தன்னுடைய நலன்களுக்கு பாதிப்பை தரும் என்பதற்காதகவும் இந்தியா ஈழத் தமிழர்களைப் பலியிட்டுக்கொண்டிருக்கிறது.

கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் அமெரிக்கத் தீர்மானம்மீது கருத்துச் சொல்ல நீண்ட கால அவகாசம் எடுத்த இந்தியா இறுதி நேரத்தில் அமெரிக்கத் தீர்மானத்தில் இருந்த சில சொற்களை மாற்றி தீர்மானத்தை வலுவிலக்கசச் செய்திருந்தது. இந்த ஆண்டும் தீர்மானத்திலுள்ள சர்வதேச விசாரணையை உள்ளக விசாரணையாக மாற்றியுள்ளது. அமெரிக்காவின் பொறியிலிருந்து இலங்கையை காப்பாற்றியுள்ளது இந்தியா. அதனால்தான் இந்தியாவுக்கு இலங்கை தன்னுடைய நன்றியைத் தெரிவித்திருக்கிறது.

ஆனால் கோத்தபாய ராஜபக்சவோ இந்தியாவின் நவடிக்கை தனக்கு ஏமாற்றம் அளிப்பதாகத் தெரிவித்துள்ளார். தாங்கள் இழைத்த போர்க்குற்றங்களுக்கும் இனப்படுகொலைக்கும் இந்தியா ஐ.நா அரங்கில் ஒரு பாராட்டு விழாவை நடத்தியிருக்கலாம் என்று கோத்தபாய எதிர்பார்த்திருக்ககூடும். அதேவேளை இந்தியாவும் அதை நடத்தக்கூடியே மனநிலையிலேயே இருக்கிறது.

தமிழகத்தில் வரலாறு காணாத மாணவர் எழுச்சி ஏற்பட்டது. மாணவர்கள் அமெரிக்கத் தீர்மானம் ஈழத் தமிழர்களுக்கு விடுதலையைத் தராது இந்தியாவே ஒரு தீர்மானத்தை இலங்கைக்கு எதிராக நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டார்கள். தமிழக முதல்வர் முதல் அனைத்துக் கட்சிகளும் அமெரிக்கத் தீர்மானத்தில் போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலை குறித்து இடம்பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இலங்கை இந்தக் குற்றச் செயல்களுக்காக தன்னை எப்படித் தண்டித்துக்கொள்ளாதோ அதைப்போலவே இந்தியா தன்னையே போர்க்குற்றவாளி என்று எப்படி தீர்மானம் போடும்?

அமெரிக்காவின் மிரட்டல்!

அமெரிக்காவின் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று சொல்லுகிறது இலங்கை. அமெரிக்காவுக்கு அப்படி என்னதான் அக்கறை? மனித உரிமைமீதும் இனப்படுகொலை மீதும் போர்க்குற்றம்மீதும் அமெரிக்க காட்டும் கரிசனை எதற்கானது? எப்படியானது என்பதைக் குறித்து நம்முடைய மக்கள் அறிவார்கள். மனித உரிமைகள் கேள்விக்குள்ளாக்கப்படும் பொழுது அதைத் தடடிக் கேட்கும் பொறிமுறையாக ஐ.நா  உருவாக்கப்பட்டது. அதில் உலக நாடுகளும் இணைந்துள்ளன. ஆனால் அமெரிக்காவின் நலனை அடிப்படையாகக் கொண்டே ஐ.நா செயற்படுகிறது. முள்ளிவாய்க்கால் போர் நடந்து கொண்டிருந்த பொழுது மக்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்படும்பொழுது ஐ.நா முதற்கொண்டு எல்லா மனித உரிமை அமைப்புக்களும் பார்த்துக் கொண்டேயிருந்தன. அந்தக் கொலைகளை தடுத்து நிறுத்தாமல் அதன் கணக்கை வைத்து தம்முடைய காரியத்தைச் சாதிக்க முற்படுகின்றது உலகம்.

அமெரிக்கா இலங்கைக்கு மீண்டும் காலக்கெடு வித்தித்திருக்கிறது. போர்க் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டியது அவசியமானது என்று அமெரிக்காவின் உதவி ராஜாங்கச் செயலாளார் ரொபார்ட் ஒ பிளக் தெரிவித்துள்ளார். இவர் இலங்கையின் அமெரிக்காத் தூதுவராகவும் செயற்பட்டவர். இலங்கை சுகந்திர விசாரணையைச் செய்யத் தவறினால் சர்வதேசம் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் ஈடுபடும், சர்வதேசத்தின் பொறிமுறை கொண்டுவரப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கை எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப் போவதில்லை என்பது அமரிக்காவுக்குத் தெரியும். எல்லாக் குற்றங்களையும் இழைத்த பின்னரும், அதை இன்னமும் செய்து கொண்டே அமெரிக்காவின் மிட்டலுக்கு சண்டித்தனமாகப் பதில் சொல்லுகிறது இலங்கை.

ஈழத் தமிழர்களின் எதிர்பார்ப்பு!

ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரையில் ஐ.நா எப்பொழுது நியாயமாகச் செயற்படும் என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள். கடந்த வருடம் தீர்மானம் கொண்டு  வரப்பட்ட பொழுது எங்கள் இனப்பிரச்சினை சர்வதேச தளத்திற்கு சென்றுவிட்டது என்று ஒரு ஆறுதலை மக்கள் அடைந்தார்கள். ஆனால் இந்த ஆண்டும் அதே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, இந்தியா மீண்டும் தீர்மானத்தை நீர்த்துப்போகச் செய்தது போன்றவை மக்களின் எதிர்பார்ப்பை ஏமாற்றியுள்ளன. காலம் காலமாக ஈழத் தமிழர்களுக்கு எதிராக பல்வேறு அழிப்பு நடவடிக்கைகளை செய்து வரும் இலங்கையிடமே நீதியை பெறுங்கள் என்றே இந்த ஆண்டு ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

இலங்கை அரசாங்கம் நடத்திய போரில் ஈழத் தமிழர்கள் இழந்தவை ஏராளம். பாலச்சந்திரன்களும் இசைப்பிரியாக்களுக்கும் இந்த உலகம் இந்த பதிலைத்தான் வழங்கியிருக்கிறது. புலித்தேவன்களுக்கும் ரமேசுகளுக்கும் புதுவை இரத்தினதுரைகளுக்கும் இன்னுமின்னும் இலட்சம் சனங்களுக்கும் இலங்கையிடம் நீதியைப் பெறச் சொல்லியிருக்கிறது ஐ.நாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்.

அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தில் உள்ள விடயங்களை இலங்கை அசராங்கம் ஒரு பொழுதும் நிறைவேற்றாது. இந்த நிலையில் ஈழத் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட அநீதிகளுக்கு  நீதியாகவும் இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வாவும்  அமெரிக்காவும், மேற்குலகும், ஏன் உலக நாடுகளும் ஐக்கியநாடுகள் சபையும் அடுத்து என்னதான் செய்யப்  போகின்றன?

பார்த்தீபன்

Leave a Reply

Your email address will not be published.