ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் கடந்த (31-03-2013)ஞாயிறு தினக்குரலுக்கு அளித்த நேர்காணலில் தமிழக மாணவர்களின் போராட்டம் தொடர்பாக தெரிவித்துள்ள கருத்துக்களினால் அதிர்ப்தியும் ஏமாற்றமும் அடைந்துள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மனோகணேசன் முக்கியமாக பின்வரும் கருத்துக்களை முன்வைத்துள்ளார். • தமிழக மாணவர்கள் அரசியல் கோரிக்கைகளை முன்வைப்பதனை தவிர்த்து மனித உரிமைகள் தொடர்பான கோரிக்கைகளையே முதன்மைப்படுத்த வேண்டும்’. • மனித உரிமை மீறல் என்பதுதான் இன்றைய உலகை உலுக்கும் ஒரே மகா மருந்து’. • மாணவர்கள் அரசியல் கோரிக்கைகளை முன்வைத்தால் இந்திய மத்திய அரசுக்கும் அதே அரசியல் அடிப்படையில் மாணவர் போராட்டங்களை நிராகரிக்க வாய்ப்பு ஏற்படும்’. • அரசியல் கோரிக்கைகளை முன்வைக்கும் பொறுப்பினை தமிழ் மக்களினால் தெரிவு செய்யப்பட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிடமே விட்டுவிடவேண்டும்’. • தமிழக மாணவர்கள் அரசியல் கோரிக்கைகளை வைப்பதாக இருந்தால் 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துங்கள் என்பதனையே முன்வைத்தல் வேண்டும்’. • தமிழக மாணவர்கள் முன்வைத்த பொது வாக்கெடுப்பு கோரிக்கையினை சர்வதேச மனித உரிமை நிறுவனங்கள் கூட ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. அவை தமிழ் மக்களின் மனிதாபிமான நெருக்கடிகளைப்பற்றி பேசுவதையே நிறுத்திவிடலாம்’. • இலங்கை பற்றி முழுமையான அரசியல், புவியியல், சமூகவியல் தெளிவுகளில்லாமல் தமிழக மாணவர்கள் போராட்டங்களை முன்னெடுக்கின்றனர். சரியான திசைநோக்கி வழிநடாத்தப்படாதது ஒருபுறமிருக்க அவர்களுக்கு சிலர் பிழையான பாதையைக் காட்டி வருகின்றனர்’.
மேற்குறிப்பிட்ட கருத்துக்கள் தமிழ் மக்களின் இதுவரை கால தியாகம் நிறைந்த அரசியலை கொச்சைப்படுத்துவதாக உள்ளதுடன், தமிழர் தாயகத்திற்கு வெளியே வாழ்ந்தபோதும் கடந்த காலங்கலங்களில் தமிழ் மக்களிற்காக பல போராட்டங்களை முன்னின்று நடாத்திய மனோகணேசன் தமிழக மாணவர்கள் முன்வைத்துள்ள அரசியற் கோரிக்கைகள் தொடர்பில் அதிருப்தியான கருத்துக்களை தெரிவித்திருப்பது கவலையளிக்கின்றது.
தமிழ் மக்கள் இன்று எதிர்நோக்கும் மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமானப் பிரச்சனைகளானவை அவர்களது நீண்டகால அரசியல் பிரச்சனையின் விளைவுகள் மட்டுமேயாகும். எனவே எமது மக்களது பிரதான கோரிக்கைகள் அரசியல் பிரச்சினையை அடிப்படையாக கொண்டதாக இருக்க வேண்டும் என்றே எமது கட்சி கருதுகின்றது. மனித உரிமை
கோரிக்கைகளை முன்வைத்தால் கூட அரசியல் இலக்கு நோக்கியே மக்களை நாம் கொண்டு செல்லவேண்டும். இந்த வகையில் தமிழக மாணவர்களின் அரசியல் கோரிக்கைகளை எமது கட்சி வரவேற்கின்றது. அவர்களது கோரிக்கைகளுக்கு காரணம் சிறிலங்கா அரசின் மிகமோசமான தமிழின அழிப்புச் செயற்பாடுகளேயாகும்.
தமிழ் மக்களால் ஆரம்பக்காலம் தொட்டே நிராகரிக்கப்பட்டுவந்த 13 வது திருத்தம் தமிழ் மக்களது அபிலாசைகளை பூர்த்தி செய்வதற்கு சிறிதளவு கூட பொருத்தப்பாடு உடையதல்ல. இது பற்றி நாம் முன்னரும்; பல தடவை கூறியிருக்கின்றோம். இது தமிழ் மக்களின் தேசம், இறைமை, சுயநிர்ணயம் என்கின்ற அடிப்படைக் கோட்பாடுகளை குழிதோண்டிப் புதைப்பதுடன், என்றென்றும் தமிழ்த் தேசத்தை சிங்கள தேசத்திற்கு அடிமையாக்குகின்றது.
இந்தியா அல்லது சர்வதேச சமூகம் விரும்புகின்ற கோரிக்கைகளைத்தான் வெறுமனே தமிழக மாணவர்கள் முன்வைக்க வேண்டும் என மனோகணேசன் கருதுவாராக இருந்தால் தமிழ் மக்களுக்கென தனியான அரசியலும் தேவையில்லை, தலைவர்களும் தேவையில்லை. தமிழ் மக்களின் அபிலாசைகளை ஒன்று திரட்டி முன்வைத்து வெற்றி ஆக்குவதற்குத்தான் தனியான அரசியலும் அதனை முன்னெடுப்பதற்கான தலைவர்களும் தேவை. அந்த வகையில் தமிழ் மக்களின் உரிமைக்காக பல்வேறு தளங்களில் நடைபெற்றுவரும் போராட்டங்களில் ஓர் அங்கமான தமிழக மாணவர்களின் போராட்டமானது ஈழத் தமிழ் மக்களின் அரசியலில் மிகக் காத்திரமான பங்கு வகிக்கின்றது.
சர்வதேச மனித உரிமை நிறுவனங்கள் அரசியல் கோரிக்கைகளை முன்னெடுப்பதற்காக உருவாக்கப்பட்டவை அல்ல. அவை மனித உரிமை விவகாரங்களை கையாள்வதற்காக மட்டுமே உருவாக்கப்பட்டவை. எவர், என்ன அரசியல் கோரிக்கைகளை முன்வைத்தாலும் அக் கோரிக்கைகளில் உடன்பாடுகள் இல்லா விட்டாலும் அவ்வமைப்புக்கள் மனித உரிமை விவகாரங்களை முன்னெடுத்;தே செல்லும். மனித உரிமை நிறுவனங்கள் மாணவர்களின் அரசியல் கோரிக்கைகளை விரும்பாவிட்டாலும் கூட எமது மக்களின் இருப்பை உறுதிப்படுத்தக்கூடிய அரசியல் கோரிக்கைகளை வலியுறுத்துவதனை நாம் ஒருபோதும் கைவிட முடியாது.
அரசியல் கோரிக்கைகள் முன்வைப்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் விட்டுவிட வேண்டும் எனவும் மனோகணேசன் கூறுகின்றார். இது எந்த வகை ஜனநாயகத்தை சேர்ந்தது என்பது எமக்குப் புரியவில்லை. ஜனநாயக சிந்தனையின் படி மாற்றுக் கருத்துக்களை முன்வைக்கும் உரிமை அந்த விவகாரத்துடன் அக்கறை உள்ள அனைத்துத் தரப்புகளுக்கும் உண்டு. தமிழக மாணவர்கள் மட்டும் இதற்கு விதி விலக்காக இருக்க முடியாது.
மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு தேர்தலில் மக்கள் 13 வது திருத்தத்தினை நடைமுறைப்படுத்த வேண்டுமெனக் கோருவதற்கான ஆணையை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வழங்கவில்லை. மாறாக தேசியம் சுயநிர்ணயம் என்பவற்றிற்கான ஆணையினையே வழங்கியுள்ளனர். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்கள் வழங்கிய ஆணைக்கு துரோமிழைக்கும் வகையில் 13வது திருத்தத்தினையே அமுல்படுத்துமாறு கோருகின்றது. இந்நிலையில் அரசியல் கோரிக்கைகளை தீர்மானிக்கும் தகுதியை கூட்டமைப்பு முழுமையாக இழந்துள்ளது.
தாயகத்தில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஜனநாயக உரிமைகள் இருப்பதால் இங்கு இருப்பவர்கள் முழுமையான கருத்துக்களை முன்வைக்க முடிவதில்லை. தமிழகத்தில் ஜனநாயக வெளி ஒப்பீட்டில் அதிகமாக இருப்பதால் அவர்கள் சற்று முன்கையெடுத்து செயற்படுகின்றனர். இந்த முன்கையெடுப்பு முயற்சிகளை நாம் எல்லோரும் வரவேற்க வேண்டுமேயன்றி குழப்புவதாக இருக்கக்கூடாது.
தமிழ் மக்கள் மத்தியில் பொது வாக்கெடுப்பினை சர்வதேசம் ஏற்காது என்று மனோகணேசன் கூறுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது. பொது வாக்கெடுப்பு ஒரு ஜனநாயக பொறிமுறையாகும். ஒரு இனத்தின் தலைவிதியினை தீர்மானிக்கும் செயல்முறையினை ஓர் அரசியற் கட்சியிடம் விட்டு விடுவதனைவிட அதனை அம்மக்களிடம் விட்டு விடுவதே ஐனநாயகத்தின் உச்சப்பண்பாகும்.
இந்த பொதுவாக்கெடுப்பு முறை கியூபெக்(கனடா), கிழக்குத்தீமோர், தென்சூடான், கொசேவா உட்பட பல இடங்களில் பின்பற்றப்பட்டுள்ளது. மேலும் ஸ்கொட்லாந்து (பிரித்தானியா), கற்ரலோனியா (ஸ்பெயின்) உட்பட பல இடங்களில் பின்பற்றப்பட உள்ளன. ஒரு பேச்சுக்காவது சர்வதேச சக்திகள் தமது நலன்களின் அடிப்படையில் இதனை விரும்பாதுவிட்டாலும், ஜனநாயக நிலை நின்று அதனை வலியுறுத்த வேண்டிய கடப்பாடு தமிழ் மக்களுக்கு உண்டு.
சர்வதேச சக்திகள் தமது பூகோள அரசியல் நலன்களை முன்னிலைப்படுத்தியே முடிவுகளை எடுக்கின்றன என்பதனையும், இவற்றிற்கெல்லாம் தமிழ் மக்களையே கருவியாகப் பயன்படுத்த முற்படுகின்றன என்பதனையும் நன்றாகப் புரிந்து கொண்ட அடிப்படையிலேயே தமிழக மாணவர்கள் தமது கோரிக்கைகளை முன்வைத்து போராடுகின்றனர்.
சர்வதேச சக்திகள் தமது நலன் சார்ந்த பூகோள அரசியலின்; அடிப்படையிலேயே செயற்படுகின்றன என்பதனை நீண்டகால அரசியல் அனுபவம் கொண்ட மனோகணேசன் அவர்கள் அறியாமல் இருப்பதும், இலங்கை பற்றி முழுமையான அரசியல், புவியியல், சமூகவியல் தெளிவுகளில்லாமல் தமிழக மாணவர்கள் போராட்டங்களை முன்னெடுக்கின்றனர் என விமர்சனங்களை முன்வைப்பதும் கவலையையும் ஏமாற்றத்தயும் அளிக்கின்றது.
தமிழர் தாயகத்திற்கு வெளியில் வாழ்ந்தவாறு அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்துவரும் மனோகணேசனுக்கு வடக்கு கிழக்கை தாயகமாகக் கொண்டு வாழும் தமிழ் மக்களது அரசியல் தலைவிதி தொடர்பாக கருத்துத் தெரிவிப்பதற்கு எந்தளவு உரிமை உள்ளதோ, அதேயளவு உரிமை தமிழக மாணவர்களுக்கும் உண்டு என்பதனை நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி