Search

4-வது முறையாக அணு ஆயுத சோதனை நடத்த வடகொரியா திட்டம்? தென்கொரிய உளவுத்துறை

வடகொரியா 4-வது முறையாக அணு ஆயுத சோதனை நடத்த தயாராகி வருவதாக தென்கொரிய உளவுத்துறை தெரிவித்துள்ளது. எனினும் பின்னர் இத்தகவலை தென்கொரிய அமைச்சர் யூ கீல் ஜே மறுத்து விட்டார்.

இதுதொடர்பாக தென்கொரிய நாடாளுமன்றக் குழுவிடம் ஐக்கிய நடவடிக்கைக்கான அமைச்சர் யூ கீல் ஜே கூறியதாவது:

வடகொரியாவின் முக்கிய அணுச் சோதனை மையத்தில் 4-வது முறையாக அணு ஆயுத சோதனை மேற்கொள்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என தென்கொரிய உளவுத்துறையினர் தெரிவித்துள்ளனர் என்றார். இதற்கிடையே அத்தகவலை அவர் மறுத்து விட்டார்.

ஐ.நா. பொதுச் செயலர் அறிவுரை: இந்நிலையில் அணு ஆயுதச் சோதனை நடத்தி பதற்றத்தை மேலும் அதிகரிக்க வேண்டாம் என வடகொரியாவுக்கு ஐ.நா. பொதுச் செயலர் பான்-கி-மூன் அறிவுறுத்தி உள்ளார்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அதிகாரத்தையே கேள்விக்குறியாக்கும் வகையில் வடகொரியா

செயல்படுகிறது. தனது நடவடிக்கைகளால் சர்வதேச சமூகத்தில் இருந்து வடகொரியா மேலும் தனிமைப்படுத்தப்படும் என்றார் மூன்.

ஏற்கெனவே கடந்த பிப்ரவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட 3-வது அணு ஆயுதச் சோதனையால் தான் வடகொரியா மீது ஐ.நா சபை கடும் பொருளாதாரத் தடைகளை விதித்தது.

இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழல் உருவானது.

அந்நாட்டின் முக்கிய அணு ஆயுத சோதனை மையமான புங்கி ரியில் ஏராளமான பணியாளர்கள் மற்றும் வாகனங்கள் நடமாட்டம் காணப்படுகிறது. அங்கு அணு ஆயுத சோதனை நடத்த ஆயுத்தப் பணிகள் நடக்கிறதா அல்லது தென்கொரியா, அமெரிக்கா மீது தொடர்ந்து அழுத்தம் தருவதற்காக வடகொரியா நாடகமாடுகிறதா என தென்கொரிய உளவுத்துறை கண்காணித்து வருகிறது.

மேலும் முன்னாள் அதிபர் கிம் சங்கின் பிறந்த நாளை முன்னிட்டு வடகொரியா தனது கிழக்கு பகுதியில் நிறுத்தியுள்ள மத்திய தூர ரக ஏவுகணையை வரும் 15-ம் தேதி ஏவி பரிசோதிக்க தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.

ஏவுகணை சோதனை மேற்கொண்டால் மேலும் பதற்றம் அதிகரிக்கும். வடகொரியாவின் நெருங்கிய நட்பு நாடான சீனாவும் அதை கடுமையாக எச்சரித்துள்ளது. இதற்கிடையே அமெரிக்காவும் தனது ஏவுகணை சோதனையை ஒத்தி வைத்துள்ளது.

தனது எல்லை நோக்கி வரும் வடகொரிய ஏவுகணையை சுட்டு வீழ்த்த ராணுவத்துக்கு ஜப்பான் உத்தரவிட்டுள்ளது. மேலும் வடகொரியாவின் நடவடிக்கைக்கு பதிலடி தரும் வகையில் அமெரிக்காவும், தென் கொரியாவும் தேவையான தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.

கேசாங் கூட்டு தொழில் மண்டலம்: இதற்கிடையே இரு கொரிய நாடுகள் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கேசாங் கூட்டுத் தொழில் மண்டலத்தில் பணியாளர் செல்ல விதிக்கப்பட்ட தடையை வடகொரியா நீக்க வேண்டும் என தென்கொரியா வலியுறுத்தி உள்ளது.

வடகொரிய எல்லையில் அமைந்துள்ள கேசாங் தொழில் மண்டலத்தில் 814 தென்கொரியர்களும், 53000 வடகொரியர்களும் பணிபுரிகின்றனர். 123 தென் கொரிய நிறுவனங்கள் அங்கு இயங்கி வருகின்றன. தற்போது நிலவும் பதற்றமான சூழலால் தென்கொரியர்கள் கேசாங் பகுதியில் நுழைய வடகொரியா தடை விதித்துள்ளது.

இத்தடையால் தொழில் நிறுவனங்களுக்கு தேவையான மூலப்பொருள்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே அங்கு விதிக்கப்பட்ட தடையை அகற்ற வேண்டும் என தென்கொரியா வலியுறுத்தி உள்ளது.

ரஷியா கோரிக்கை: கொரிய தீபகற்பத்தில் நிலவும் பதற்றமான சூழ்நிலையை குறைக்க அனைத்து தரப்பினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏவுகணை சோதனையை ஒத்திவைத்து அமெரிக்கா மேற்கொண்ட சரியான நடவடிக்கை. வடகொரியாவும் தனது செயல்பாடுகளை நிறுத்திக் கொள்ள வேண்டும் என ரஷிய அதிபர் புதின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *