பாகிஸ்தானில் ராணுவத்தினருக்கும் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே திங்கள்கிழமை நிகழ்ந்த மோதலில் 30 படை வீரர்களும் 100 பயங்கரவாதிகளும் உயிரிழந்தனர்.
கைபர் மலைவாழ் மக்கள் வசிக்கும் திரா பள்ளத்தாக்குப் பகுதியில் தடை செய்யப்பட்டுள்ள பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-தலிபான் மற்றும் இதர பயங்கரவாத அமைப்புகள் முகாமிட்டுள்ளன. கடந்த வாரம் முதல் இந்தப் பகுதியில் பாகிஸ்தானின் சிறப்பு சேவைகள் குழு படைப் பிரிவினர் (எஸ்.எஸ்.ஜி.) தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் திரா பள்ளத்தாக்குப் பகுதியில் முகாமிட்டிருந்த தலிபான் பயங்கரவாதிகள் மீது போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் பாகிஸ்தான் ராணுவம் திங்கள்கிழமை குண்டு வீசியது. தலிபான்களும் ராணுவத்தினருடன் கடுமையாக சண்டையிட்டனர்.
ஒரக்சாய் நகரின் வெவ்வேறு பகுதிகளில் நடைபெற்ற இத்தாக்குதலின்போது, பயங்கரவாதிகள் அமைத்திருந்த பதுங்கு குழிகளைக் குறி வைத்து ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். இதில் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் நடத்திய எதிர்த்தாக்குதலில் 30 படை வீரர்கள் உயிரிழந்தனர் என ராணுவ உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால் இந்தப் பகுதியில் ஊடகங்களை அனுமதிக்காததால் உயிரிழந்தோரின் சரியான எண்ணிக்கை தெரியவரவில்லை. பயங்கரவாதிகளின் பிடியில் இருந்த திரா பள்ளத்தாக்கின் பெரும்பாலான பகுதிகளை பாகிஸ்தான் ராணுவம் கைப்பற்றியுள்ளது. இது ராணுவத்துக்குக் கிடைத்த பெரும் வெற்றி என உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாகிஸ்தானின் வடமேற்கிலுள்ள பழங்குடியினப் பகுதியில் அமைந்துள்ள பயங்கரவாதிகளின் மறைவிடங்களில் ராணுவத்தினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
திரா பள்ளத்தாக்குக்கு அருகே முக்கிய நகரான பெஷாவர் அமைந்துள்ளதால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ராணுவத்தினருடனான மோதலில் ஒரு படைத்தலைவர் உள்பட ஐந்து தலிபான்கள் மட்டுமே உயிரிழந்ததாக தடை செய்யப்பட்ட தெஹ்ரிக்-இ-தலிபான் செய்தித் தொடர்பாளர் இசானுல்லா இசான் கூறியி
ருக்கிறார்.