மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் பற்று பிரதே சபைக்கு உட்பட்ட பெரியபுல்லுமலை பிரதேசத்தில் தண்ணீர் தொழிற்சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பு மாவட்டம் முழுவதிலும் இன்று பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது. தண்ணீர் பற்றாக்குறையினால் அவதியுறும் புல்லுமலை பிரதேசத்தில் நிலத்தடி நீரை உறிஞ்சி பாலைவனமாக்கும் நோக்குடன் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் மேற்படி தண்ணீர் தொழிற்சாலையின் கட்டுமாணப் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டியும் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அரசாங்கம் செயற்பட வேண்டியும் மட்டக்களப்பு மாவட்டம் பூராக பூரண ஹர்த்தாலுக்கு பொது அமைப்புக்கள் அழைப்பு விடுத்தன. பொது அமைப்புக்களின் கோரிக்கைகளுக்கு இணங்கி மாவட்டம் பூராக இன்று கடைகள் மற்றும் அரச நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளன. பொது மக்களும் தங்களது பூரண ஆதரவை வழங்கியுள்ளனர். வறட்சியினால் பாதிக்கப்பட்டு குடிப்பதற்கு கூட தண்ணீருக்கு பல மைல்கள் நடந்து சென்று அவதிப்படும் புல்லுமலை பிரதேச மக்களை மேலும் அவதிக்கு உள்ளாக்காது மேற்படி தண்ணீர் தொழிற்சாலையை அரசாங்கம் உடனடியாக தடை செய்ய வேண்டும் என்பதே ஒட்டு மொத்த மக்களின் எண்ணமாக உள்ளது.
