Search

பாமரன் எழுதுகிறார்! பாமரன் என்ற பெயர் தமிழில் பத்திரிகை,சஞ்சிகை வாசிக்கும்

பாமரன் என்ற பெயர் தமிழில் பத்திரிகை,சஞ்சிகை வாசிக்கும் அனைவருக்கும்
கட்டாயம் தெரிந்தே இருந்தாகவேண்டிய பெயர்.அதிலும் ஈழவிடுதலை என்ற
ஆதரவுத்தளத்தில் தமிழ்நாட்டில் எழுதிக்கொண்டிருக்கும் முக்கியமான ஒரு தோழமை இவர்.
வர்க்கப்புரட்சி,மார்க்சீயம் என்று வாய்கிழிய கத்திவிட்டு இனப்படுகொலை நடக்கும்போது
சோனியாவுக்கும்,மகிந்தவுக்கும் சாமரம்வீசிக்கொண்டிருந்த இந்த பொய்முகங்களை கிழித்தெறியும்
பாமரனின் எழுத்து இதோ..

மார்க்சீய முதலாளிகளுக்கு….!


செவ்வணக்கங்க.
பொதுவாவே உங்க கூட பேசறதுன்னாலே பயந்தாங்க.
நான் நம்மூரைப் பத்தி பேசறப்ப
நீங்க இந்த நாட்டப் பத்திபேசுவீங்க.
நான் இந்த நாட்டப்பத்தி பேசறப்ப
நீங்க வேற நாட்டப்பத்திப் பேசுவீங்க.
நானும் உங்கள மாதிரி பேசணும்னு தத்துப்பித்துன்னு நாலு நாட்டு சமாச்சாரங்களத் தெரிஞ்சிட்டு வந்தா
அப்பப் பாத்து நம்மூரு மாரியாத்தா கோயிலப்பத்திப் பேசுவீங்க.
எப்பப்பாரு இதே கூத்துதாங்க. சாகறதுக்குள்ள என்னைக்காவது ஒருநாள் ஒத்துமையா நாம ஒரே விசயத்தைப்பத்தி பேசணும்னு எனக்கு ரொம்ப ஆசைங்க.
உங்ககிட்டே நெருங்கறதுன்னாலே ஒரு கிலி. சும்மா இருக்காம ஒரு சந்தேகம் கேட்டா அதுக்கு பதிலா பத்து கேள்விய குடுத்து வாயடச்சிருவீங்க.
நீங்களுந்தான் இந்த ’நாட்டுல’ (மன்னிச்சுக்குங்க நீங்க ”சர்வதேச” கருத்துக்காரரு) புரட்சியக் கொண்டு வரணும்னு எவ்வள பெரிய்ய்ய்ய பெரிய்ய்ய்ய போர்த்தந்தரமெல்லாம் செய்யறீங்க. ‘உகாண்டாவில் உப்புமா’ பாக்கிஸ்தானில் பச்சடி’ன்னு பல நாட்டு சமாச்சாரங்கள கரைச்சு குடிச்சிருக்கீங்க.
இருந்தாலும்  பாருங்க….
இது  இந்த  சனங்களுக்குப்  புரியவே  மாட்டேங்குது….
’இவுங்குளுக்கு இப்பிடிப் பேசறதுதான் ஒரே வேல…. எந்த நாட்டுலயாவது ஏதாவது பண்ணீருக்காங்களா?  கியுபாவுல சனங்க சண்டைபோட்டப்ப இவுங்க அந்த ஊர் டீக்கடைல உக்காந்து ஈ ஓட்டீட்டு இருந்தாங்க’ன்னு பேசறாங்க. அதென்னவோ நெக்கரகுவாவோ இல்ல நிக்கரகுவான்னோ ஏதோ ஒரு நாடு இருக்காமா….? அங்கியும் வேற கட்சிக்காரங்கதான் சண்டபோட்டு சதிகாரனுங்கள தொறத்துனாங்க….. அங்கியும் இவுங்க ஏதும் பண்ணல…. அப்பிடி இப்பிடின்னு ஒரே ரப்ச்சருங்க… எனக்கே ஒரு மாதிரி ஆயிடுச்சுங்க. சரி… அத உடுங்க….
நம்ம கூடங்குளத்துல அணு உலையக் கொண்டு வர்றத ஆதரிச்சே தீருவதுன்னு நீங்க முடிவு பண்ணீட்டதா கேள்விப்பட்டேன். உண்மையிலேயே  நல்ல முடிவுங்க. ஏன்னா….
ஏழை ….. பணக்காரன்
தி.க….. தி.மு.க
ஜனதா….. காங்கிரஸ்
நல்லவன்….. கெட்டவன் இப்படிப் பாகுபாடு இல்லாம அணு உலைக்காத்து ஊரையே காலியாக்கிடுமாம்.
இப்படிப்பட்ட “சோசலிசமான சாவு” கெடைக்கறதுக்கு நம்ம ஊர் சனங்களுக்கு குடுத்து வெச்சிருக்கனுங்க. இதே அமெரிக்காக்காரன் கொண்டாந்திருந்தான்னா நம்ம சனத்துக்கெல்லாம் இப்படி ”நல்ல சாவு” வரும்களா…..? என்ன இருந்தாலும் அதென்னவோ நீங்க அடிக்கடி சொல்லுவீங்களே ’தேக பத்தியமோ’…..? ’ஏகாதி பத்தியமோ’….? அப்படிப்பட்ட சாவு நம்ம சனங்களுக்குத் தேவைங்களா? என்ன இருந்தாலும் நம்ம ரசியா கைல சாகறதுன்னா சோசலிசமாச் சாகலாம்.
நீங்குளுந்தான் எப்பிடியாவது இந்த அணு உலைகளக் கொண்டாந்து இந்த நாடு பூரா ஒளிமயமாகனும்னு கஷ்டப்படுறீங்க…..
 
இருந்தாலும்  பாருங்க….
இது  இந்த  சனங்களுக்குப்  புரியவே  மாட்டேங்குது….
 
”அது” வந்தா நெறைய பேருக்கு வேலை கிடைக்கும்ன்னு நீங்க சொல்றத நானும் கேட்டேன். நெசமாலுமே ரொம்ப கரீக்ட்டுங்க இது. நம்ம ரசியாக்காரன் ஊர்ல சொர்னோபிலோ ….இல்ல செர்னோபிலோ…ன்னு ஒரு ஊர் இருக்காமா…. அந்த ஊர்ல உள்ள அணு உலை வெடிச்சப்ப பெரிய்ய்ய பெரிய்ய்ய எலிக்காப்டருல வந்து 40 டன்னு உலோகத்தூளு…. 800 டன்னு சுண்ணாம்புக்கல்லு….. 2400 டன்னு ஈயம்….. ஆயிரக்கணக்கான டன்னுள்ள காங்கிரீட்டு…. மணலுன்னு எல்லாம் மேலே இருந்து கொட்டுனாங்களாமா….?
நாம அதயவே தலைகீழா மாத்தி பெரிய பெரிய கட்டடத்துல இந்த சித்தாளுங்க வேலை செய்யறமாதிரி ஆளுக்கொரு சட்டியக் குடுத்து ‘மூடுங்கடா உலைய’ன்னா….. எத்தன லட்சம் பேருக்கு வேல குடுக்கலாம்…. அப்படியே ஊர் ஊருக்கு ஒரு உலையத் திறந்தா எத்தன கோடிப்பேருக்கு வேல கிடைக்கும்…. அதுவும் மூடற வேலை…  இதப்போயி புரிஞ்சுக்காம இங்க அவனவன் எகத்தாளம் பேசீட்டுத் திரியறானுங்க.
ஆனா… நீங்க இந்த எகத்தாளத்துக்கெல்லாம் பயந்துக்கற ஆளா? அப்படியே எவனாவது பேசினாலும் அவனப்பாத்து….
‘நீ நவீன இடதுசாரி…….
ஏகாதிபத்தியதாசன்..…
நவீன வலதுசாரி…..
ஓரங்கட்டிய வலதுசாரி….
வேட்டி கட்டாத ராகவாச்சாரி…… ன்னு எடுத்து உட்டா….
அவனவன் ஆளுக்கு ஒரு மூலைக்குப் பறந்துருவான்.
அதுக்கப்புறம், தேர்தல் வந்துச்சுன்னா… சாரி சாரியா ‘கலைஞரை’யோ…’ ‘புரட்சித்தலைவி’யையோ பாத்து…’கொஞ்சம் போட்டுக்குடுங்கன்னு’ கேட்டாப் போகுது…. இதுல நம்முளுக்கு வார்த்தைக்கா பஞ்சம்….?
காங்கிரஸ் எதிர்ப்பு……
எதிர்ப்புக்கு எதிர்ப்பு……
எதிர்ப்பில்லாததற்கு எதிர்ப்பு……
அப்படி இப்படின்னு ஜமாய்ச்சாப் போகுது.
தேர்தல் முடிஞ்சதுக்கப்புறம் வேண்ணா……
இனவாதி….
முதலாளித்துவ அரசியல்வாதி.…
தொழிலாளர் வர்க்க விரோதி…..
’சிம்சனில் மண்டை உடைத்தவரே..
அரவங்காட்டில் சுட்டவரே…..’ன்னு ஆரம்பிச்சா போகுது..
 
இருந்தாலும்  பாருங்க தோழரே!
இது  இந்த  சனங்களுக்குப்  புரியவே  மாட்டேங்குது….
நம்மளோட ‘போர்தந்திரம்’ பற்றி இந்த சூன்யங்களுக்கு எதுவும் வெளங்காம…. இவுங்களுக்கு ஓட்டு போடறதவிட… இவங்க மாத்தி மாத்தி ஆதரிக்கிற இவங்க எஜமானர்களே தேவலைன்னு….முடிவுபண்ணி அவுங்களுக்கு ஓட்டைப் போட்டுட்டு நடையக் கட்டறாங்க…. அத நெனச்சாத்தான் மனசு நொந்து போயிருது.
‘விஞ்ஞானிக எல்லாம் வெறும் சம்பளம் வாங்குற அதிகாரிக இல்ல. அவங்கதான் இந்த நாட்டோட தூண்கள்னு..’ நீங்க பேசறதா பொட்டிக்கடை பளனிச்சாமி சொன்னான். அதையும் இந்த வெட்டிப் பசங்க உடமாட்டேங்குறானுங்க….
அப்படீன்னா….. சமீபகாலம் வரைக்கும் அதென்னவோ விவசாய ஆராய்ச்சி நிலையம்ன்னு ஒண்ணு தில்லிப்பட்டணத்துல இருக்காமா…. அங்க இதுவரைக்கும் 17 விஞ்ஞானிகளாவது தூக்குப்போட்டு….. தூக்க மாத்திரை தின்னு…… உசுர விட்டுருக்காங்களாமா? அவங்க சாவுக்கே காரணம்…. பெரிய பெரிய விஞ்ஞானிங்கதானாம்… அப்படிப் பதினேழு பேர் தற்கொலை பண்ணீருக்காங்களே…. அதுக்கு உங்க தோழருக இது வரைக்கும் ’பிட்டு நோட்டீசாவது’ அடிச்சிருப்பாங்களா……? இப்ப மட்டும் உங்காளுகளுக்கு விஞ்ஞானிக மேல ‘திடீர்ப்பாசம்’ எப்பிடி வந்துச்சு…? என்னாவது ‘போர்த்தந்தரமா’…?ன்னு நக்கலாப் பேசறானுகங்க….
இருந்தாலும் பாருங்க கொஞ்சநாளா எனக்கே உங்க மேல சில சந்தேகம் வர ஆரம்பிச்சுருச்சு. அப்புறம் மத்தவங்களுக்கு வராம இருக்கும்களா? ஆனாலும் ஏதோ நான் ‘லூஸ்’ கணக்கா இருக்கிறதுனால நம்பறேன். மத்தவங்களும் இப்பிடியே இருப்பாங்கன்னு நெனைக்க முடியும்களா….. சரி அது கிடக்கட்டும்.
புரியாமக் கெடந்த எனக்கே நெறையப் புரிய வச்சீங்க. நீங்ககூட அடிக்கடி சொல்லுவீங்களே…. அதென்ன…… ”அமைதிக்கான… அணு உலை..’ ‘ஆக்கத்திற்கான…..அணு சக்தி…..’ அப்படீன்னு… அதையும் இவனுக உடமாட்டேங்கறானுகங்க… கேட்டா….
”ஆமா…. ’அமைதிக்கான அணு உலை’தான்….
ஏன்னா…. பீரங்கிகளையும், ஏரோப்பிளேன்களையும், விதவிதமான துப்பாக்கிகளையும் வெச்சு ஈழ மக்களைக் கொல்றதையே….. ‘அமைதிப்படை’ன்னு ஏத்துக்கிட்ட இவுங்க…. இத மட்டும் ‘அமைதிக்கான அணு உலைன்னு’ ஏன் சொல்ல மாட்டாங்க?ன்னு என்னயவே திருப்பிக் கேக்கறானுகங்க…..
அதுமட்டுமில்ல…. ’இவுங்க எப்பத்தான் மக்களுக்கு ஆதரவாப் பேசியிருக்காங்க? இந்திப் பிரச்சனைல இருந்து ஈழப்பிரச்சனை வரைக்கும் மக்களுக்கு எதிராவே பேசிப் பழக்கமாயிருச்சு….. இது வரைக்கும் அவுங்களுக்கு அவங்களே குழிதோண்டற வேலயச் செஞ்சுக்கிட்டு இருந்தாங்க…… இப்ப கூடங்குள விஷயத்துல நடக்குறது மண்ணத்தள்ளுர வேலைதான்னு……’ வாய்க் கொழுப்பெடுத்துப் பேசறானுகங்க…. சரி…. அத உடுங்க…. நாம நம்ம விஷயத்துக்கு வருவோம்.
நம்மாளுங்க எல்லாம் சேந்து சனாதிபதியாக்கோணும்னு பாடுபட்டாங்களே….. பழைய நீதிபதி….. அதான்….. கிருஷ்ணய்யரு..…  அவுருகூட இவுங்கமாதிரித்தான் பேசறாருங்க. நல்லவேளை…..  அவரு சனாதிபதியாகுல. ஆகியிருந்தா….  இந்த நாடே இருட்டுலதான் இருந்திருக்கும்… அப்பறம் நாமெல்லாம்…. ’வீட்டுக்கு ஒரு தீப்பந்தம்னு’ ஒரு போராட்டம் ஆரம்பிக்க வேண்டி வந்துருக்கும்.
பஸ்சுல லாரில அடிபட்டா பொட்டுன்னு உயிர் போறதில்லையா? அந்த மாதிரித்தான் இதுவும்….. அதுக்காக காரு பஸ்சே வேண்டான்னு சொல்லுவமான்னு….? போட்டாலும் போட்டீங்க ஒரு போடு. எல்லாரும் அசந்தே போயிட்டாங்க. இருந்தாலும் பாருங்க….. இந்தப் பசங்க மட்டும் ஒரேடியா குதிக்கறானுகங்க.
பஸ்சுல அடிபட்டா நான் சாவேன்…. ஆனாக்கா…… என் பேரன் சாவானா?ன்னு கேக்கறாங்க. அதென்னவோ கதிரியக்கமாமா…? அது பரவுச்சுன்னா சந்ததி சந்ததியா.. புத்து நோவு வந்து சாக வேண்டி வரும்னு சொல்றாங்களே…. நெசமுங்களா…?
‘ஆனால் போர் இல்லாமலேயே அணுகுண்டு பரிசோதனைகளை நிலத்துக்கடியிலும், காற்று வெளியிலும் அணு வல்லரசுகள் இதுவரை நடத்தியவை – நடத்தி வருபவை மனித வாழ்சூழலை நாசகரமான அளவுக்கு மாசு படுத்திவிட்டது.’ அப்படீன்னு எவ்வளவு தீர்க்க தரிசனத்தோட நீங்க எழுதியிருக்கீங்க. இதப் பார்த்தாவது இவுங்களுக்குப் புத்தி வரவேண்டாம்? உங்குளுக்கு இருக்குற அக்கறைல கால் பங்காவது இதுகளுக்கு இருக்குமா?
இருந்தாலும்  பாருங்க….
இது  இந்த  சனங்களுக்குப்  புரியவே  மாட்டேங்குது….
அப்படீன்னா…. நம்ம நாட்டுல பெக்கரானோ……  பொக்கரானோ……  ஏதோ ஒரு எடம் இருக்காமா? அங்க மொதல் மொதல்ல ‘அகிம்சைக்காக’ ஒரு குண்டை பூமிக்கடில வெடிச்சப்ப….. இவுங்களும்….. இவுங்க கட்சியும்….. கைல ராட்டையையும் காதுல பஞ்சையும் வெச்சுட்டு இருந்தாங்களா….? அல்லது இவுங்களோட ‘பொலிட்பீரோ’வுல அனுமதி வாங்கீட்டு வந்து வெடிச்சாங்களா?ன்னு கேக்குறாங்க. நானும் உங்க கூட பழகினதோசத்துல…. ‘அது அவங்களோட தந்தரோபாயம்’ன்னு சொல்லீட்டு நடையக் கட்டீட்டங்க….
நாமும் இந்த காங்கிரசு பேசற மாதிரியே பேசிப் பேசி வீணாக் கெட்ட பேருதான் மிச்சம்.
அவுங்க பாதுகாப்பு இருக்குன்னு சொன்னா…..
நாமும் பாதுகாப்பு இருக்குன்னு சொல்றோம்.
அவுங்க அமைதிக்குத்தான்னு சொன்னா……
நாமும் அமைதிக்குத்தான்னு சொல்றோம்.
அவுங்க விலை மலிவுன்னா…..
நாமும் அதையேதான் திருப்பிச் சொல்றோம்.
இப்பிடியே பேசறதால நம்மளையும் காங்கிரஸ் கட்சிக் கிளைதான்னு சனங்க நெனச்சுக்கிட்டு  “நாங்க உங்க கட்சிக்குத்தான் ஓட்டுப் போட்டோம்”னு ”கை”ய வேற காட்டறாங்க….. இந்தக் கர்ம்ம எல்லாம் தேவையான்னு தோணுது.
பத்தாததுக்கு….. இவுனுங்க வேற…… காங்கிரசுக்கும் உங்களுக்கும் வித்தியாசமே இல்ல. நாலும் ஒண்ணுதான்னு… நேராவே பேசறானுகங்க…
அணு உலைல இருந்து வர்ற மின்சாரம் வெல கம்மின்னு சொன்னா… அதுக்கும்….. ’கல்பாக்கம் பத்தின பொதுக் கணக்குக் குழுவப் போயி கேளு… அங்க அமல்தத்தான்னு உங்காளுதான் தலைவரு….. அவரையே கேட்டுத் தெரிஞ்சுக்கோ’ன்னு நெத்தியடி அடிக்கறானுகங்க.
இப்பிடிப் பல பக்கம் தலைவலிங்க……
நானும் உங்கள மாதிரிப் பேசி பேசியே….
இப்ப திமுக காரனும் சேத்த மாட்டேங்கறான்…..
ஜனதாக்காரனும் சேத்த மாட்டேங்கறான்…..
நெடுமாறன் கட்சிக்காரன் கூட…. ”வேண்டாப்பா….. நீ ஆளை உடு”ன்னு கையெடுத்துக் கும்படறான்….
இப்படித்தனியா பொலம்பற நெலைமைக்கு வந்துட்டேன்…..
கொஞ்சம் தப்பித்தவறி ஏதாவது சந்தேகம்ன்னு வந்து உங்காளுககிட்ட கேட்டா….. போதாததுக்கு…அவுங்க வேற என்னைய மேலயும்…. கீழயும்…  பாத்துட்டு…… ‘ஏகாதிபத்தியக் கைக்கூலின்னு’  பல்லை நறநறன்னு கடிக்கறாங்க.
உருப்படறதுக்கு ஏதாவது வழி இருந்தா கடுதாசி போடுங்க….
அப்புறம் அதையும் மறந்துட்டு…..
போர்த்தந்திரம்…..
தந்திரோபாயம்னு…… எல்லாம் சொல்ல வேண்டாம்.
ஏன்னா…
இப்பவே நான் கொளம்பிக் கெடக்கிறேன்.

பாமரன்.

 

(1990 ஆம் ஆண்டு வெளிவந்த “புத்தர் சிரித்தார்” நூலில் இருந்து)
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *