உதயன் நாளிதழது பிரதான அலுவலகம் தாக்குதல் – அச்சு இயந்திரப் பகுதி பெற்றோல் ஊற்றி எரிக்கப்பட்டுள்ளது
தமிழ் தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற அங்கத்தவர் சரவணபவனுக்கு சொந்தமான உதயன் நாளிதழது பிரதான அலுவலகம் இனந்தெரியாத நபர்களால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதுடன் அச்சு இயந்திரப் பகுதியும் பெற்றோல் ஊற்றி எரிக்கப்பட்டுள்ளது.
யாழ்.நகரின் கஸ்தூரியார் வீதியில் உள்ள உதயன் பிரதான அலுவலகத்தில் வழமை போல் இன்றும் பத்திரிகை விநியோகப் பணிகளுக்காக தயாராகிக் கொண்டிருந்த வேளை அதிகாலை 4.45மணியளவில் நுழைந்த இனந்தெரியாத நபர்கள் பாதுகாப்பு உத்தியோகத்தர்களையும் பணியாளர்களையும் ஆயுத முனையில் அச்சுறுத்தி அச்சுக் கூடப்பகுதிக்குள் நுழைந்தனர்.
அங்குள்ள அச்சு இயந்திரங்கள் மீது சரமாரியாக துப்பாக்கிப் பிரயாகத்தினை மேற்கொண்டவர்கள் தாங்கள் கொண்டு வந்த பெற்றோலை ஊற்றி அச்சு இயந்திரங்களையும் , அச்சுத்தாள்களையும் கொளுத்திவிட்டு சென்றுள்ளனர்.
முன்னதாக அவர்கள் துப்பாக்கி வேட்டுக்களை தீர்த்து அங்கிருந்த பணியாளர்களை விரட்டிவிட்டே அனைத்தையும் தீக்கிரையாக்கியுள்ளனர்.அத்துடன் நாளைய தினம் வெளிவரவுள்ள வார இதழுக்காக அச்சிடப்பட்ட நிலையிலிருந்த கட்டுரைகளும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.சம்பவம் இடம்பெற்ற வேளை பத்திரிகையின் ஆசிரிய பீடத்தை சேர்ந்தவர்கள் ஏற்கனவே வெளியேறியிருந்தனர்.அதனால் சொல்லிக்கொள்ளத்தக்க உயிர் சேதங்கள் ஏற்பட்டிருக்கவில்லை.
தாக்குதலாளிகளது பிரதான நோக்கம் பத்திரிகையினை நிறுத்துவதேயாகுமென நம்பப்படுகின்றது.தொடர்ச்சியாக விநியோகப்பணியாளர்களை தாக்குவது பத்திரிகை பிரதிகளை தீக்கிரையாக்குவதன் தொடர்ச்சியாக அலுவலகத்தினுள் புகுந்து அச்சியந்திரங்களை தீக்கிரையாக்கும் கட்டத்pனை எய்தியுள்ளது.
முன்னதாக குறித்த அலுவலகத்தினுள் உட்புகுந்து நடத்தப்பட்ட தாக்குதலொன்றினில் இரு பணியாளாகள் பலியானதுடன் மேலும் பலர் படுகாயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.இவ்வருட ஆரம்பம் முதல் தற்போது வரை பத்திரிகை மீது நான்கு தாக்குதல்கள் நடந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது