லண்டனிலிருந்து ஜெனீவா வரைக்கும், நீதிக்கும் அமைதிக்குமான நடைப்பயணம்.

ண்டனிலிருந்து ஜெனீவா வரைக்கும்                                  நீதிக்கும் மைதிக்குமான டைப்பயணம்.             (சனிக்கிழமை 28-01-2012 இலிருந்து திங்கட்கிழமை 27-02-2012 வரைக்கும்)                           

                          

அன்பான தமிழ் உறவுகள் அனைவருக்கும்,

தமிழீழத்தில் மூன்று வருடங்களுக்கு முன்னர் போரின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மானுடத்திற்கு எதிரான குற்றங்கள் போன்றவற்றை விசாரித்து, இந்தப் பாரிய சர்வதேச குற்றங்களைப் புரிந்தவர்களையும், இவற்றிற்குப் பொறுப்பானவர்களையும் நீதியின் முன் கொண்டுவந்து நிறுத்தி அவர்களைத் தண்டிப்பதற்காக, சுயாதீனமான சர்வதேச விசாரணை ஒன்று அவசியம் என்பதனை கடந்த வருடம் ஐ.நா.நிபுணர்கள் குழுவின் அறிக்கை வலியுறுத்தியிருந்தது. ஐ.நா.வின் இந்த அறிக்கையானது ஐ.நா.பாதுகாப்புச் சபைக்கு விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கு ரஷியா, சீனா போன்ற நாடுகள் தடையாக இருப்பதன் காரணமாக, தற்போது இந்த அறிக்கையானது ஐ.நா.பொதுச்-செயலரினால் ஐ.நா.மனித உரிமைகள் சபையிடம் கையளிக்கப்பட்டிருக்கின்றது. இந்தப் பின்னனியில், ஐ.நா.பொதுச்செயலரின் பேச்சாளர் மார்ட்டின் நெஸ்ர்க்கி அவர்கள், சிறீ லங்காவின் மனித உரிமை மீறல்கள் விடயத்தில் மேற்கொண்டு என்ன செய்வதென்பது பற்றி ஐ.நா.மனித உரிமைகள் சபைதான் தீர்மானமான முடிவு ஒன்றினை எடுக்க வேண்டும் என்று சமீபத்தில் தெரிவித்திருக்கின்றார்.

ஐ.நா.மனித உரிமைகள் சபையானது ஜெனீவாவில் எதிர்வரும் 27ஆம் நாள் மாசி மாதம் மீண்டும் கூடவிருக்கின்றது. அடுத்த மாத இறுதியில் நடக்கவிருக்கின்ற ஐ.நா.மனித உரிமைகள் சபையின் 19வது கூட்டத்தொடரினை மையப்படுத்தி, நாடுகடந்த தமிழீழ அரசாங்கமானது பலதரப்பட்ட மக்கள் போராட்டங்களையும், இராஜதந்திர நகர்வுகளையும் முன்நகர்த்தியுள்ளது. இவற்றின் ஒரு அங்கமாக, எதிர்வரும் சனிக்கிழமை 28ஆம் நாள் இந்த மாத இறுதியில் ஆரம்பித்து, தொடர்ந்து முப்பது நாட்களாக, லண்டனிலிருந்து ஜெனீவாவை நோக்கிய “நீதிக்கும் அமைதிக்குமான நடைப்பயணம்” ஒன்று எங்களால் மேற்கொள்ளப்பட இருக்கின்றது. எதிர்வரும் 27ஆம் நாள் மாசி மாதம், ஐ.நா.மனித உரிமைகள் சபையின் 19வது கூட்டத்தொடரின்  முதலாவது நாளன்று நாங்கள் ஜெனீவாவை சென்றடையவிருக்கின்றோம். எங்கள் நடைப்பயணத்தின் இறுதிநாளன்று, ஐ.நா.மனித உரிமைகள் சபையின் செயலரிடமும், மனித உரிமைகள் சபையின் அங்கத்துவ நாடுகளின் பிரதிநிகளிடமும் நாங்கள் எங்களது மூன்று கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை கையளிக்க இருக்கின்றோம்:

1) ஈழத்தமிழர்களின் மீதான சிறீலங்காவின் பேரினவாத அரச பயங்கரவாதிகளின் இனப்படுகொலையையும், போர்க்குற்றங்களையும், மானுடத்திற்கு எதிரான குற்றங்களையும் விசாரிப்பதற்காக ஒரு சுயாதீனமான, சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் ஒன்று உருவாக்கப்பட்டு, மனிதத்திற்கு எதிராக மாபெரும் குற்றங்களைப் புரிந்தவர்களையும், இவற்றுக்குக் காரணமானவர்களையும் சர்வதேச சமூகம் தண்டிக்க வேண்டும்.

2) சிறிலங்காவின் பேரினவாத அரசினால் தமிழீழத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற இனப்படுகொலை, சிங்களக் குடியேற்றங்கள், இராணுவ ஆக்கிரமிப்புக்கள், சட்டத்துக்குப் புறப்பான கடத்தல்கள், காணாமல் போதல்கள், கொலைகள், கற்பழிப்புக்கள், பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள், சித்திரவதைகள் போன்ற அனைத்தையும் உடனடியாக நிறுத்துவதற்காகவும், மேலும் தமிழீழத்தில் ஈழத்தமிழர்களின் பாதுகாப்பையும், இருப்பையும் உறுதிப்படுத்துவதற்காகவும், ஐ.நா.சபையானது தாமதியாது, தமிழீழத்தில் “மனித உரிமைகள் பாதுகாப்புக் கண்காணிப்பகம்” ஒன்றினை உடனடியாக நிறுவ வேண்டும்.

3) ஈழத்தமிழர்களை ஒரு முற்றான இனஅழிப்பிலிருந்து காப்பாற்றும் முகமாகவும், சிங்கள பேரினவாத அரச பயங்கரவாதத்தின் கொடுமைகளை ஆண்டாண்டு காலமாக அனுபவித்து வரும் ஈழத்தமிழர்களுக்கு நிவாரணம் அளிக்கும் முகமாகவும், தமிழீழத்தில் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை சர்வதேச சமூகம் அங்கீகரிப்பதோடு, ஐ.நா.சபையின் மத்தியஸ்தத்துடன் கூடிய சர்வசன வாக்கெடுப்பு ஒன்றும் தமிழீழத்தில் நடாத்தப்படல் வேண்டும்.

எதிர்வரும் 27ஆம் நாள் மாசி மாதம், எங்கள் நடைப்பயணத்தின் இறுதிநாளன்று, ஐ.நா.முன்றலில் ஈழத்தமிழர்களுக்கு நீதி கேட்டு ஒரு மாபெரும் “நீதிக்கான ஒன்றுகூடல்” ஒன்றும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ஏனைய தமிழ்த் தேசிய அமைப்புக்களின் ஆதரவுடன் ஒன்றிணைந்து ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. ஈழத்தமிழர்களுக்காக சர்வதேச சமூகத்திடம் நீதி கேட்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “நீதிக்கும் அமைதிக்குமான நடைப்பயணத்திலும்”, “நீதிக்கான ஒன்றுகூடலிலும்” கலந்து கொண்டு, “ஈழத்தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் வரையில் புலம்பெயர் தமிழர்கள் ஓய மாட்டார்கள்” என்பதனை நாங்கள் சிறீ லங்காவின் பேரினவாத அரசிற்கும், உலகத் தலைவர்களுக்கும் மற்றும் சர்வதேச சமூகத்திற்கும் இடித்துரைப்போம். ஆகவே, இந்த நீதிக்கான மக்கள் போராட்டங்களில் தவறாது கலந்து கொள்ளுமாறு எங்கள் உறவுகள் அனைவரையும் நாங்கள் அன்புடனும், உரிமையுடனும் வேண்டிக்கொள்கின்றோம் – நன்றி.

– தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் –

அன்புடன்,

சிவச்சந்திரன், தேவன், குமார், பவுல், ஜெயசங்கர், அமரநாத், ஷான், யோகி, நிமலன், மணிவண்ணன்.

www.forjusticeandpeace.org                      info@forjusticeandpeace.org@gmail.com

Leave a Reply

Your email address will not be published.