காரைக்கால் மாவட்ட மீனவர்கள் 7 பேர் மீது கடும் தாக்குதல்

காரைக்கால் மாவட்ட மீனவர்கள் 7 பேர் மீது கடும் தாக்குதல்

காரைக்கால் மாவட்ட மீனவர்கள் 7 பேர் நேற்று இரவு நடுக்கடலில் கொலைவெறித் தாக்குதலுக்குள்ளாகி காயமடைந்து, இன்று காலை காரைக்கால் திரும்பினர்.

காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல்மேடு கிராமத்தை சேர்ந்த ராஜ் என்பவரது பைபர் படகில் அவரும், அதே கிராமத்தை சேர்ந்த வீரபாகு, வேதாசலம், சத்யநாதன், செல்வம், காசியப்பன், ரமேஷ் ஆகிய 7 பேர், காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 12-ம் தேதி காலை கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

இவர்கள் கோடிக்கரைக்கு தென்கிழக்கே வழக்கம்போல் மீன்பிடிக்கும் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 12 மணியளவில், மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அப்பகுதிக்கு வந்த குழுவினர், காரைக்கால் மீனவர்களது படகில் ஏறி தாக்கியுள்ளனர். இதில் வீரபாகு, வேதாசலம் ஆகியோருக்கு தலை, கை உள்ளிட்ட பகுதிகளில் கடுமையாக காயம் ஏற்பட்டது.

மற்ற ஐவரையும் ஆயுதங்களால் தாக்கிவிட்டு, வலையை கிழித்தும், மீன்களை எடுத்துக்கொண்டும் விரட்டியுள்ளனர். படகில் சென்ற 7 பேரும் மயங்கிய நிலையில் படகினுள் விழுந்துள்ளனர். பல மணி நேரம் நடுக்கடலில் படகை இயக்கமுடியாமல் தத்தளித்துக்கொண்டிந்த இவர்கள், சுதாகரித்துக்கொண்டு படகை இயக்கிக்கொண்டு சனிக்கிழமை காலை 7 மணியளவில் காரைக்கால் மீன்பிடித் துறைமுகம் வந்தடைந்தனர். இவர்கள் வரும் வழியிலேயே செல்பேசி மூலம் காரைக்கால் மீனவர்களுக்கு தகவல் தந்ததையொட்டி, மீன்பிடித் துறைமுகத்தில் மீனவர்களின் குடும்பத்தாரும், பஞ்சாயத்தார்களும் துறைமுகத்திற்கு வந்து சேர்ந்தனர்.

துறைமுகத்தினுள் நுழைந்த இந்த படகை மற்ற மீனவர்கள் இழுத்து கரை சேர்த்தனர். அதிலிருந்த மீனவர்களை, மீன் ஏற்றும் வண்டியில் ஏற்றி காரைக்கால் அரசு பொதுமருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர். வீரபாகு, வேதாசலம் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டனர். மற்றவர்களுக்கும் மருத்துவக் குழுவினர் உரிய சிகிச்சையை அவசரமாக மேற்கொண்டனர்.

தாக்குதலுக்குள்ளான மீனவர்கள் இதுகுறித்து கூறியது:

பொதுவாக மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள் வழக்கமாக மீன்பிடிக்கும் பகுதியிலேயே நாங்களும் மீன்பிடித்துக் கொண்டிருந்தோம். இருட்டாக இருந்த நிலையில், திடீரென படகு அருகே கடற்படையினர் மற்றும் எங்களைப்போன்ற தொழிலாளர்கள் வந்து, எங்களை கடுமையாக தாக்கி, மீன்களை எடுத்துக்கொண்டு, வலைகளை சேதப்படுத்திவிட்டு சென்றனர்.

2-க்கும் மேற்பட் படகுகளில் இவர்கள் வந்தனர். இலங்கை கடற்படையினரும், இலங்கை மீனவர்களும் தாக்கியதாகவே உணர்கிறோம். செய்வதறியாது படகிலேயே மயங்கி விழுந்துவிட்டோம். பிறகு படகை இயக்கிக்கொண்டு வந்தோம். கொலைவெறித் தாக்குதலாகவே இது நடத்தப்பட்டது. சுமார் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள மீன்களை எடுத்துக்கொண்டுவிட்டனர் என்றனர்.

காரைக்கால் மருத்துவமனையில் சிகிச்சைபெறும் மீனவர்களை காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.எம்.எச்.நாஜிம், வடக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பி.ஆர்.என்.திருமுருகன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். இச்சம்பவம் குறித்து காரைக்கால் கடலோரக் காவல்நிலைய பொலிஸார், மீன்வளத் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

குழப்பத்தை ஏற்படுத்தும் மீனவர்கள் கருத்து : நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது வந்து தாக்கியவர்கள் குறித்து, காரைக்கால் வந்தடைந்த மீனவர்கள் கூறும்போது, இருட்டாக இருந்தது, 2 பேர் கடற்படை சீருடையில் இருந்தனர் மற்றவர்கள் எங்களைப் போன்ற தொழிலாளர்களாக காணப்பட்டனர்.

இலங்கை கடற்படையினரும், இலங்கை மீனவர்களும் இருவருமே சேர்ந்தே தாக்கினர் என்றனர். சிலர் கடற்படைதான் தாக்கியது என கருத்து கூறினர். இச்சம்பவத்தில் தாக்கிய தரப்பினர் யார் என்பது உறுதியாக தெரியவில்லை. கடந்த ஒரு மாதமாகவே காரைக்கால் மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு காயமடைந்து வருவதும், மீன்களை இழந்தும், படகுகள் சேதமாக்கப்பட்டும், வலைகளை இழந்தும் இழப்புக்குள்ளாகி வருகின்றனர்.

1602118946fis (1)

Leave a Reply

Your email address will not be published.