ஶ்ரீ வாலம்பிகா சமேத வைத்தீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் வல்வையூர் அப்பாண்ணா
ஶ்ரீ வாலம்பிகா சமேத வைத்தீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் -2019
-வல்வையூர் அப்பாண்ணா
விளம்பி வருடம் மாசி மாதம் 22ஆம் திகதி (06-03-2019) புதன்கிழமை காலை 11 மணிக்கு ஸ்ரீ வைத்தீஸ்வரப் பெருமானுக்கு கொடியேற்றம் நடைபெறவுள்ளது.
01-03-2019 இரவு- மாரி தேவி உற்சவம் :
வழமை போல் சிவன் கோவிலின் பிரதம குருக்களினால், அம்பாள் கோவிலின் மூல அம்பாள், உற்சவஅம்பாள் ஆகியவற்றிற்கு பூசை நடைபெறுமாயினும், அம்பாளுக்கான மண்டலாபிஷேகம் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் உற்சவம் மட்டும் நடைபெற மாட்டாது. எம்பெருமானின் மகோற்சவத்திற்கு முந்தி, கிராம தேவதைக்கான வழிபாடாக இந்த மாரிதேவி உற்சவம் கருதப்பட்டதும்- ஒரு காலத்தில் இரு கோவில்களையும் எசமான் பரம்பரையினரே நிர்வகித்து வந்தமையும் இந்த மாரிதேவி உற்சவத்தின் தோற்றப்பாடாக இருந்திருக்கலாம்.
02-03-2019 சனி மாலை – மாணிக்கவாசகர் ஊர்வலம்:
அந்நாளில் பிரதான வீதிகளில் மட்டுமல்லாது, ஊரில் உள்ள ஒவ்வொரு ஒழுங்கையின் மூலை முடுக்குகளெல்லாம் இவ்வூர்வலம் நடைபெற்று வந்தாயினும், பின்னாளில் ஏற்பட்ட போர்ச் சூழல் – கெடுபிடிகள் காரணமாக ஊர்வலம் பிரதான வீதிகளுக்கு மட்டுமே என வரையறுக்கப்பட்டு இன்றுவரை தொடர்கிறது. எம்பெருமானின் கொடியேற்ற நாளை ஊர் முழுவதும் அறிவிக்கும் நாளாக மாணிக்கவாசகர் ஊர்வலம் அமைகிறது.
03-03-2019 ஞாயிறு :
பிரம்மோற்சவத்திற்கான அனுஞ்ஞை(முன் கிரியைகள்) ஆரம்பமாகும். இன்று பிரதோச நாளாகும்.
04-03-2019 திங்கள்: வாஸ்துசாந்தி – அன்றைய தினம் மகா சிவராத்திரி நாளாகும்.
06-03-2019 புதன் : அதிகாலை முதல் பிரம்மோற்சவத்திற்கான சகல ஏற்பாடுகளும் பூரணப்படுத்தப்பட்டு சரியாக காலை 11 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்று வீதிப்பிரதசஷினம் நடைபெறும். அன்று இரவு விக்னேஸ்வரர் யாகாரம்பம் நடைபெற்று 09-03-2019 பகல் தீர்த்தக் கிணற்றில் நடைபெறும் தீர்த்த உற்சவத்துடன் விநாயகர் திருவிழா நிறைவுக்கு வருகிறது.
09-03-2019 சனி : இரவு சுப்பிரமணியர் யாகாரம்பத்துடன் சுப்பிரமணிருக்கான திருவிழா ஆரம்பமாகி, 12-03-2019 செவ்வாய் பகல் தீர்த்தக் கிணற்றில் நடைபெறும் தீர்த்த உற்சவத்துடன் சுப்பிரமணியர் திருவிழா முடிவுறும்.
12-03-2019 செவ்வாய் : இரவு நடைபெறும் மகாயாகத்துடன் எம்பெருமானுக்குரிய திருவிழாக் காட்சிகள் ஆரம்பமாகின்றன. இரவு பெருமானுக்கு “சந்திர சேகரப் பட்டம்” கட்டப்பட்டு, நந்தி வாகனத்தில் எம்பெருமான் ஆரோகணிக்க கணபதி – முருகனும் இணைந்தபடி வீதி உலா வருவர்.
17-03-2019 ஞாயிறு : பகல் அம்பாள் மேற்கு வீதியில் உள்ள வழுக்கல் மடத்தில் வீற்றிருக்க, இறைவன் அம்பாளுக்குக் காட்சி கொடுக்கும் உற்சவமும், இரவு திருக்கல்யாணத் திருவிழாவும் நடைபெறும். திருமணத் தம்பதிகளாக அம்மையும், அப்பனும் பூந்தண்டிகையில் ஆரோகணிக்கும் அற்புதக் காட்சியினைக்காண ஊர்மக்கள் – குறிப்பாக பெண்கள் திருமாண வீட்டிற்குச் செல்லும் ஆடை அலங்காரத்துடன் திரண்டு வருவர்.
18-03-2019 திங்கள்: பகல் திருமுழுக்கும் – அதனைத் தொடர்ந்து வரும் பகற் திருவிழாவில் அம்பாள் மடியில் எம்பெருமான் சயனித்தபடி எழுந்தருளும் அலங்காரத்துடன் வீதி உலா வருவார். இரவு கையாலய வாகனத்தில் எம்பெருமாட்டி – எம்பெருமானைக் கட்டி அணைத்தபடி வரும் அழகுமிகு காட்சியைக் காணும் பேறு நமக்குக் கிட்டும்.
19-03-2019 செவ்வாய்: கிருஷ்ணகந்தோற்சவம் நடைபெற்று பகல் திருவிழா முடிய, மாலையில் எம்பெருமான் பிச்சாடன மூர்த்தியாகி நெடியகாடு பிள்ளையார் கோவில் வரை சென்று பிச்சையேற்கும் திருக்காட்சி இடம்பெறும். திரும்பி வரும் போது பிச்சாடனர் சிவபுர வீதியினூடாக நேராகக் கோவிலின் வாசல் வந்து சேர்வது ஒரு வித்தியாச அம்சமாகும் .
பிச்சை ஏற்க உலா செல்லும்போது,
நல்ல மருந்திம் மருந்து – சுகம்
நல்கும் வைத்திய நாத மருந்து – நல்ல
என வள்ளலார் அருளிச் செய்த “ஆனந்தக் களிப்பு” திருவருட்பாக்களின் மூன்று தொகுதிகளை அடியார்கள் மனங்கசிய – சிந்தை மகிழ – உரத்த குரலில் பாடி அனைவரையும் மகிழ்விப்பர். பாடலின் சுருதிக்கேற்றபடி தவில் வாத்தியமும் சேர்த்து வாசிப்பது காதுக்கு சுகமான அனுபமாகும்.
20-03-2019 புதன்: காலையில் கந்தோற்சவம் நடைபெற்று பஞ்சரத பவனி இடம்பெறும். சிவன்- பிள்ளையார்- முருகன் ஆரோகணிக்கும் மூன்று தேர்களும் சித்திரத் தேர்களாகவும், அம்பாள் மற்றும் சண்டேஸ்வரர் எழுந்தருளும் இரு தேர்களும் கட்டுத் தேர்களாகவும், வரும் பஞ்சரத பவனி காணக் கண் கோடி வேண்டும். இரவு சர்ப்ப வாகனத்தில் பெருமான் வீதி உலா வருவார்.
21-03-2019 வியாழன்: அதிகாலையில் நடைபெறும் நடேசர் உற்சவத்தைத் தொடர்ந்து, ஊறணித் தீர்த்தக் கடற்கரையில் தீர்த்தமாடுவதற்காக வெள்ளி ரிஷபத்தில் எம்பெருமான் ஆரோகணிப்பார். அவ்வேளைய எம்பெருமானின் அழகுமிகு அலங்காரமும் – வெள்ளி ரிஷ்பமும் காலையில் சூரிய ஒளிக்கதிர் பட்டுப் பிரகாசிக்கும் அழகே தனி.
நெடியகாடு பிள்ளையார் கோவிலில் தங்கியிருந்து, இரவு 7 மணிக்கு விசேட மின் அலங்காரத்துடன் சுவாமி கோவில் வந்தடைந்து நள்ளிரவில் கொடியிறக்கம் நடைபெறும்.
22-03-2019 வெள்ளி : பகல் ஊடற் திருவிழாவும் – இரவு அம்பாள் உற்சவமும் நடைபெறும்.
23-03-2019 சனி : பகலும் –இரவும் சண்டேஸ்வரர் உற்சவம்
26-03-2019 செவ்வாய்: பகல் பிராயசித்த அபிஷேகமும், அர்த்தயாமப் பூசையில் வைரவ சுவாமிக்கு விசேட பூசையும் இடம்பெறுவதுடன், பிரம்மோற்சவ நிகழ்வுகள் நிறைவுக்கு வருகின்றது.
அடியார்கள் அனைவருக்கும் எம்பெருமானின் திருவருள் கிட்டுவதாக.