Search

நானும் சிதம்பராவும் (அனுபவபகிர்வுகள்)- இ.குகதாஸ் (கணக்காளர்)

நானும் சிதம்பராவும் (அனுபவபகிர்வுகள்)- இ.குகதாஸ் (கணக்காளர்)

இந்த தொடரில் பாடசாலை,கல்லூரி நாட்களையும் அந்த கல்லூரிதந்த பாடங்களையும்
அனுபவங்களையும் அனைவரும் பகிர்ந்துகொள்ளலாம் என்று குறிப்பிட்டிருந்தோம்.அந்தவகையில்
முதலாவதாக எமக்கு எழுதி அனுப்பப்பட்டிருக்கும் ஆக்கத்தை இங்கு வெளியிடுகின்றோம்.
திரு.இ.குகதாஸ் லண்டனில் இருந்து எழுதி அனுப்பியது இந்தஆக்கம்.இதனை தொடர்ந்து
நீங்கள் அனைவரும் எழுதிஅனுப்புங்கள்.நானும் சிதம்பராவும்இ.குகதாஸ் (கணக்காளர்)

கல்வியே கண் என்கின்ற ஒரு அற்புதமான அறிவுச்சுடரை தனது நுழைவாயிலில்தாங்கி நிற்கின்ற எங்கள் சிதம்பராக்கல்லூரி பற்றி எழுதுவதில் மிகவும் சந்தோசமடைகின்றேன்.தாயின் மேன்மை பற்றி எழுதும்ஒரு மகன்போல.
வல்வெட்டித்துறையில் ஒரு ஆங்கிலப்பள்ளிக்கூடம் என்று இலங்கையிலுள்ள எல்லோராலும்
பெருமையாக அழைக்கப்பட்ட எங்கள் கல்லூரியில் எனது வாழ்நாளில் 1972 லிருந்து 1980வரை
அக்கல்லூரியில் கல்விகற்றேன் என்று சொல்வதைவிட அங்கு வாழ்ந்தேன் என்று சொல்வதே
பொருத்தமானது என்று நினைக்கிறேன்.என் வாழ்வின் ஒரு அங்கமாக அதுவும் ஆகிப்போனது.

ஐந்தாம்வகுப்பு வரைக்கும் ஆரம்ப பாடசாலையில் படித்துவிட்டு 6வது வகுப்புக்காக சிதம்பராவுக்கு சென்ற அந்த முதல்நாள் இன்றுவரை மறக்கமுடியாதநாளாகும்.1972ம்ஆண்டு எனது அயலில் இருக்கும் ரேவடிநண்பர்களுடன் நடந்து சிதம்பராவுக்கு போன முதல்நாள் என்னால் மறக்கமுடியாதது.

ஆரம்பபாடசாலையில் இருந்து சென்ற எனக்கு சிதம்பாராவும் அதன் ஆயிரத்துக்கும் அதிகமான
மாணவர்களும் முதல்நாள் உடன் கல்லூரிஆரம்பமானபோதே பிரமிப்பாக இருந்தது.எல்லோரும்
ஒருமித்து பாடிய சிவபுராணத்துடன் கல்லூரிநாள் ஆரம்பமானது.

ஓவ்வொரு வகுப்பிலும் குறைந்தது மூன்றுபிரிவுகளாக வகுப்புகள்(6A,6B,6C) இருந்தன.இப்படியாக 10ம்வகுப்பில்(10A,10B,10C,10D,10E,10F) .இதனைவிட உயர்வகுப்பில் (A/L)கணிதப்பிரிவு,உயிரியல்பிரிவு,வர்த்தகப்பிரிவு என்று
மூன்றுவிதமான கற்கைநெறிப்பிரிவுகள் இருந்தன.இப்போது லண்டனில் இருக்கும் ஒரு சிறந்த Grammer school
பாடசாலையின் தரத்துக்கும் கட்டமைப்புக்கும் சிறிதும் குறையாமல் சிதம்பரா அப்போது இருந்தது.

அப்போது இருந்த அதிநவீன வசதிகளுடன்கூடிய இரசாணயவிஞ்ஞானகூடம்(Chem Lab), உயிரியல்விஞ்ஞான
கூடம்(Bio Lab),பௌதிகவிஞ்ஞானகூடம்(Physics Lab) என்று மூன்று தனித்தனியான விஞ்ஞானகூடங்களும் அதற்கான
பொறுப்பாளர்களுடனும் இருந்தது இப்போதும் பெருமையாக இருக்கின்றது.

கல்லூரிநூலகம் மிகவும் பெரியதாகவும் அதிகமான புத்தகங்கள்கொண்டதாகவும இருந்தது.
அதன் பொறுப்பாளராக நூலகராக திரு.அப்பாத்துரை மாஸ்ரர்,சிற்றுண்டிச்சாiலையின் பிரதம
சமையல்பொறுப்பாக திரு.சிங்கராஜா சேவையாற்றினார்கள்.சிற்றுண்டிச்சாலை என்றவுடன் அதன்
சிறப்புஉணவான பாணுடன் ஒரு ருசியான சம்பல்தான் நினைவில் வருகின்றது.

அத்துடன் பாடசாலை புத்தகவிற்பனை நிலையம்,ஆசிரியர்களுக்கான ஓய்வுஅறை,சாரணர்களுக்கு
ஒரு அறை,கல்லூரி இந்து அமைப்புக்கு ஒரு அறை என்று எத்தனை எத்தனைவிதமான
வாய்ப்புகளையும் கட்டடைப்புகளையும் கொண்டிருந்தது எங்கள் சிதம்பரா.

அதனாலேயே அந்தநேரத்தில் வல்வெட்டித்துறை மாணவர்கள் மட்டும் அல்லாமல் அயல் கிராமங்களில் இருந்தும் உடுப்பிட்டி,தொண்டைமானாறு,பருத்தித்துறை போன்ற இடங்களில்
இருந்தும் மாணவர்கள் வந்தார்கள்.

கல்வியே கண் என்ற தாரகமந்திரத்துடன் மிளிரும் அந்த கல்லூரி எத்தனையோ அறிவாளிகளையும்,கல்வியாளர்களையும்,சமூகத்தின் முக்கியமானவர்களையும் உருவாக்கிவிட்டு நிற்கிறது.
இனி மற்றவர்களின் நினைவுகளை சொல்வதற்கு இடம்விட்டு நிற்கிறேன்.இப்போது எங்கள் சிதம்பரா என்ன நிலையில் நிற்கின்றது என்பதை சந்தர்ப்பம் கிடைக்கும்போது தொடர்வேன்.

                   அன்புடன்
                  இ.குகதாஸ்

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *