31 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி

31 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி

31 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி

சிட்னி : இந்திய அணியுடனான முதலாவது டி20 போட்டியில், ஆஸ்திரேலியா 31 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. அதிரடியாக 72 ரன் விளாசிய ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் மேத்யூ வேட் ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்தியா , ஆஸ்திரேலிய அணிகளிடையே 2 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடக்கிறது. சிட்னி, ஸ்டேடியம் ஆஸ்திரேலியா மைதானத்தில் நேற்று நடந்த முதலாவது டி20 போட்டியில், டாசில் வென்ற இந்தியா முதலில் பந்து வீசியது. ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் பெய்லி, டோஹர்டி, பாக்னர் ஆகியோரும், இந்திய அணியில் ராகுல் ஷர்மாவும் அறிமுக வீரர்களாக இடம் பெற்றனர்.

ஆஸ்திரேலிய தொடக்க வீரர்களாக வார்னர், வேட் களமிறங்கினர். வார்னர் 14 பந்தில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி உட்பட 25 ரன் விளாசி வினய் வேகத்தில் ரெய்னா வசம் பிடிபட்டார். அடுத்து வந்த டிராவிஸ் பர்ட் 17 ரன் எடுத்து அஷ்வின் சுழலில் ரெய்னாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். வேட் , டேவிட் ஹஸி ஜோடி 3வது விக்கெட்டுக்கு அதிரடியாக விளையாடி ரன் குவித்தது. அபாரமாக விளையாடிய வேட் அரைசதம் அடித்து அசத்தினார். இருவரும் இணைந்து 56 ரன் சேர்த்தனர். வேட் 72 ரன் (43 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்), டேவிட் ஹஸி 42 ரன் (30 பந்து, 1 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்து ஆட்டமிழந்தனர்.

ஆஸ்திரேலியா 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 171 ரன் குவித்தது. பெய்லி 12, மிட்செல் மார்ஷ் (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய பந்துவீச்சில் அஷ்வின், வினய், ரெய்னா, ராகுல் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். அடுத்து இந்திய அணி 20 ஓவரில் 172 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது.

கம்பீர், சேவக் இருவரும் துரத்தலை தொடங்கினர். சேவக் 4 ரன் மட்டுமே எடுத்து பிரெட் லீ வேகத்தில் பெவிலியன் திரும்பினார். கம்பீர் , கோஹ்லி ஜோடி 2வது விக்கெட்டுக்கு 41 ரன் சேர்த்து நம்பிக்கை அளித்தது. இந்த நிலையில் கம்பீர் 20, கோஹ்லி 22, ரோகித் ஷர்மா (0) அடுத்தடுத்து ஆட்டமிழந்து அணிக்கு நெருக்கடியை கொடுத்தனர். ரெய்னா 14, ஜடேஜா 7 ரன்னில் வெளியேற இந்திய அணி 13.3 ஓவரில் 81 ரன்னுக்கு 6 விக்கெட் இழந்து தடுமாறியது.

கேப்டன் டோனி , அஷ்வின் ஜோடி 7வது விக்கெட்டை தக்கவைத்துக் கொண்டாலும், அதிரடியாக ரன் குவிக்க முடியாமல் திணறினர். இந்தியா 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 140 ரன் மட்டுமே எடுத்து பரிதாபமாக தோற்றது. டோனி 48 ரன் (43 பந்து, 1 பவுண்டரி, 3 சிக்சர்), அஷ்வின் 15 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆஸி. பந்துவீச்சில் கிறிஸ்டியன், டி.ஹஸி தலா 2, ஹாக், பிரெட் லீ தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

அதிரடியாக 72 ரன் விளாசிய மேத்யூ வேட் ஆட்டநாயகன் விருது பெற்றார். ஆஸ்திரேலியா 31 ரன் வித்தியாசத்தில் வென்று 1,0 என முன்னிலை வகிக்க, கடைசி டி20 போட்டி மெல்போர்னில் நாளை நடக்கிறது. டெஸ்ட் தொடரில் படுதோல்வி அடைந்த இந்திய அணி, டி20யிலாவது வெற்றிப் பாதைக்குத் திரும்புமா என எதிர்பார்த்த ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். ஆல் ரவுண்டர் இர்பான் பதான், இளம் வேகம் உமேஷ் யாதவை அணியில் சேர்க்காததும் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

Leave a Reply

Your email address will not be published.