இந்தியாவைக் கொன்றாவது பிரதமர் மன்மோகன் சிங் பழிவாங்க பார்க்கிறார் என்று கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டக் குழுத்தலைவர் உதயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
அணுஉலை திறப்பதற்கு எதிராக ராமநாதபுரத்தில் இன்று வாகன யாத்திரையை தொடங்கி வைத்த உதயக் குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:
அணு உலை வாழ்வாதார உரிமைகளுக்கு எதிரானது.மத்தியக் குழுத் தலைவர் முத்துநாயகம் உண்மைக்கு புறம்பான தகவல்களை தந்துகொண்டிருக்கிறார்.
அணுஉலை திறக்கப்பட்டால் கடல் உணவு விஷமாகி விடும், ஏற்கனவே மக்கள் சத்துக்குறைபாட்டோடு உள்ளனர். இந்த நிலையில் அணுமின் நிலையம் தேவையற்றது.அணுமின் நிலையத்தில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு அதன் வீரியத்தை இழப்பதற்கு 48 ஆயிரம் வருடங்கள் ஆகும்.
இந்தியாவை கொன்றாவது அமெரிக்கா மூலம் இந்தியாவை மன்மோகன் சிங் பழிவாங்கப் பார்க்கிறார்.காங்கிரஸ் கட்சியும்,இந்து முன்னணியும் அதற்கு ஆதரவாக உள்ளன.
வெளிநாடுகளில் இருந்து கமிஷன் பெறுபவர்கள்தான் எங்கள் போராட்டத்துக்கு எதிராக உள்ளனர்.
அணுஉலை தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா தெளிவான முடிவு எடுத்துள்ளார். அணுஉலை குறித்த அச்சத்தை போக்கும்வரை அணுமின் நிலையத்தை திறக்கக் கூடாது என்று அவர் கூறியுள்ளார்.
அணுஉலையைத் திறக்கலாம் என்று கூறும் அப்துல் கலாம்,மத்திய அரசுக்கு ஆதரவாகவே எப்போதும் செயல்பட்டு வந்துள்ளார்.
குஜராத் கலவரத்தின்போது பலர் உயிரிழந்தனர்.அதுகுறித்து அப்துல் கலாம் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டபோதும் கலாம் மவுனமாகவே இருந்தார்.
தமிழக மீனவர்கள் 570 பேர் இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இதுகுறித்தும் கலாம் எதுவும் கூறவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.