பாஸ்டன் குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை, அமெரிக்கப் புலனாய்வுத்துறை தீவிரமாகத் தேடிவருகின்றது.
வியாழனன்று, சம்பவம் நடந்த இடத்தில் பொதுமக்களின் பின்புறத்தில் முதுகில் பைகளைச் சுமந்துகொண்டு இரண்டு நபர்கள் நடந்துகொண்டிருக்கும் புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளது.
அப்படத்தில் இருப்பவர்களை அடையாளம் காணமுடிந்தால் காவல் துறையினரிடம் விபரம் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
இவர்களை நண்பர்களாகவோ, உறவினர்களாகவோ அல்லது சக தொழிலளிகளாகவோ தெரிந்தவர்கள் எவரேனும் இருக்கக்கூடும் என்று குற்றப்புலனாய்வுத்துறை சிறப்பு நிபுணர் ரிச்சர்ட் டே லாரியர்ஸ் ஊடகத்தினரிடம் தெரிவித்துள்ளார்.
இது கடினமான விடயம் என்றபோதிலும் அவர்களைத் தெரிந்தவர்கள் தகவல் தெரிவிப்பார்கள் என்று காவல்துறை எதிர்பார்க்கின்றது என்ற அவர் இவர்கள் இருவரும் ஆபத்தானவர்கள் என்றும் குறிப்பிட்டார்.
சந்தேகத்திற்குரிய நபர்கள் இருவரும் இணைந்து இருக்கும் புகைப்படம், குண்டு வெடிப்பதற்கு 13 நிமிடங்களுக்கு முன்னால், சரியாக 2.37 மணிக்கு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகின்றது.