ஐ.வி.எஃப் – சரோகசி (அறிவியல்)- IVF-SURROGACY

ஐ.வி.எஃப் – சரோகசி (அறிவியல்)- IVF-SURROGACY
ஐ.வி.எஃப் – சரோகசி
“டிசெம்பர் 1 ஆம் தேதி அன்று ஆமீர் கான் – கிரண் தம்பதிகள் ஐ.வி.எஃப் – சரோகசி முறையில் ஒரு ஆண் குழந்தை பெற்றனர்.” போன வாரம் இந்தச் செய்தி எல்லாப் பத்திரிகைகளிலும் முதல் பக்கத்திலேயே வந்திருந்தது.
‘பாலிவுட் நம்பர் 1 நடிகர் ஆமீர்; பணத்திற்குக் குறைவில்லை; எத்தனை குழந்தைகள் வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம்; இதென்ன பெரிய விஷயம்?’ என்கிறீர்களா? நிஜம் தான். அவருக்கு என்றில்லை,  ஜனத் தொகையைப் பார்த்தால் குழந்தை பிறப்பது என்பது சர்வ சாதாரணமான விஷயம். இந்த செய்தியில் விசேஷம் குழந்தை பிறந்த முறை – அதாவது ஐ.வி.எஃப் – சரோகசி

அதென்ன ஐ.வி.எஃப் – சரோகசி?

முதலில் ஐ.வி.எஃப் என்றால் என்ன என்று பார்ப்போம்.
இன் விட்ரோ ஃபெர்டிலைசேஷன் (தமிழில் சொல்ல வேண்டுமானால் ஆய்வுக்கூட சோதனை முறைக் கருவுறுதல்)
என்பதின் சுருக்கம் தான் ஐ.வி.எஃப். இன் விட்ரோ என்றால் இலத்தீன் மொழியில் (in glass) ‘கண்ணாடி’யில் என்று பொருள். உயிரியல் துறையில் செயற்கை முறையில் திசுக்களை வளர்ப்பதற்கு கண்ணாடியால் ஆன சோதனைக் குடுவை, சோதனை குழாய் ஆகிய கண்ணாடி உபகரணங்களையே பயன்படுத்துவதால் இந்தப் பெயர் வந்தது. ஃபெர்டிலைசேஷன் என்பது கருவுறுதலைக் குறிக்கும். ஒரு சோதனைச் சாலையில், ஒரு கண்ணாடி தட்டில் (இந்த தட்டை பெட்ரி டிஷ் (petri dish) என்கிறார்கள்.) உண்டாக்கப்படும் கருத்தரிப்பை In vitro fertilization என்கிறார்கள்.
இயற்கையில் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்படும் உடலுறவின் மூலம் உண்டாகும் கர்ப்பத்தை வெளியே ஆய்வுக் கூடத்தில் நிகழச் செய்கிறார்கள். இதன் காரணமாகவே இதனை ஆய்வுக்கூட சோதனை முறைக் கருவுறுதல் என்கிறார்கள். இந்த முறையில் பிறக்கும் குழந்தைகளை ‘டெஸ்ட் ட்யூப் பேபி’ (சோதனைக் குழாய்க் குழந்தை) என்று சொல்லுகிறார்கள். 1978 ஆம் ஆண்டு இந்தஐ.வி.எஃப் முறையில் பிறந்த லூயிஸ் பிரவுன் என்கிற பெண் குழந்தைதான் உலகின் முதல் டெஸ்ட் ட்யூப் பேபி. ராபர்ட் ஜி. எட்வர்ட்ஸ் என்கிற உயிரியல் வல்லுனரால் உருவாக்கப்பட்ட இந்த கருத்தரித்தல் முறை அவருக்கு நோபல் பரிசினையும் 2010 ஆம் ஆண்டு வாங்கித் தந்தது.

செயற்கை கருத்தரிப்பு ஏன்?

இயற்கையாக ஒரு பெண்ணால் கருத்தரிக்க முடியாமல் போகும்போது செயற்கைக் கருத்தரிப்பை மருத்துவர் சிபாரிசு செய்யக் கூடும்.
செயற்கை கருத்தரிப்பில் பல வகைகள் உள்ளன. அதில் ஒரு வழி தான் இந்த ஐ.வி.எஃப். ஒரு பெண்ணிற்கு செயற்கை முறையில் கருத்தரிப்பு செய்வதற்குப் பல காராணங்கள் உண்டு:
பெண்ணின் கருமுட்டைக் குழாயில் (ஃ பாலோப்பியன் ட்யூப் ) அடைப்பு ஏற்பட்டு அதனால் கருத்தரிப்பு உண்டாகாமல் போவது.
ஆணின் சக்தி குறைவான விந்துக்கள். இதனால் கருப்பைக்குள் விந்து நுழைவது முடியாமல் போகிறது. மற்ற முறைகளால் விந்துவை கருப்பைக்குள் செலுத்துவது இயலாமல் போகும்போது ஐ.வி.எஃப் முறையில் கருமுட்டையுடன் சேர்க்கிறார்கள்.
இந்த ஆய்வுக்கூட சோதனை முறை கருவுறுதல் வெற்றிகரமாக நடை பெற 3 முக்கியத் தேவைகள்:

  1. ஆரோக்கியமான கரு முட்டை;
  2. அந்த முட்டையை கருவுறச் செய்யும் வலிமை வாய்ந்த விந்தணுக்கள்.
  3. கருவைத் தாங்கக் கூடிய ஆரோக்கியமான கர்ப்பப்பை.

அதிகப் பணம் தேவைப்படும் என்பதால் மற்ற முறைகளால் ஒரு பெண் கர்ப்பந்தரிக்க முடியாமல் போகும்போது மட்டுமே மருத்துவர்கள் இதனை சிபாரிசு செய்கிறார்கள்.

ஐ.வி.எஃப் செயல் முறை:

ஒவ்வொரு மாத விடாய் சுழற்சியின் போதும் ஒரு கரு முட்டை பெண்ணின் கருவகத்தில் உருவாகிறது. கர்ப்பம் உருவாகாமல் போகும் போது முட்டை உடைந்து மாத விடாயாக வெளியே வருகிறது. ஆனால் ஐ.வி.எஃப் முறையில் கர்ப்பத்தை உண்டு பண்ண பல கரு முட்டைகள் தேவைப்படுகின்றன. அதனால், முதலில் பெண்ணின் கருவகம், பல கருமுட்டைகளை உற்பத்தி செய்ய ஹார்மோன் ஊசிகளின் மூலம் தூண்டப்படுகிறது. அப்படி உருவான கரு முட்டைகள் வெளியே எடுக்கப்பட்டு சோதனைச் சாலையில் ஆணின் விந்துவுடன் சேர்க்கப்படுகிறது. இந்த சேர்க்கையில் எல்லா முட்டைகளும் கருவுறுவுதில்லை. சில கரு முட்டைகள் மட்டுமே கரு உறுகின்றன. கரு உருவான முட்டைகளை முளைக் கருக்கள் (embryos) என்கிறார்கள். பல நாட்கள் சோதனைச் சாலையிலேயே இருக்கும் இந்த முளைக் கருக்களில் சிறந்தவைகள் மட்டும் தேர்ந்தெடுக்கப் பட்டு மீண்டும் பெண்ணின் கர்ப்பப்பைக்குள் செலுத்தபடுகிறது.
இதுவே இன் விட்ரோ ஃபெர்டிலைசேஷன் எனப்படுகிறது. இயற்கையான கர்ப்பம் போலவே பெண்ணின் கர்ப்பப்பையில் குழந்தை உருவாகிறது.

Leave a Reply

Your email address will not be published.