பெண்ணியம் பெருமை பெறவைத்த
கண்ணியத்தைப் பெற்ற கடற்கரை மண்ணிற்கு,
இவளும் சொந்தக்காரி. (ராஜ்குமார் ஆறுமுகம் கனடா)
கண்டுகொண்ட திறமை ஒன்று,
வென்று வென்று
விரைகின்றது.
வல்லவரின் வம்சமதில் வந்துதித்து,
வெல்லுமிந்த தங்கையை,
எல்லோரும் எழுந்து,
கைதட்டி நின்றுவிட்டால்,
எட்டாத உயரத்தையும் எட்டித் தொட்டிடுவாள்
விட்டகலா விருப்புடைய, வீரத்தின்
விளைநிலத்தாள்.
படிப்புத்தான் பயனென்று பிடிப்பான எதையும்
பிள்ளைகளை செய்யவிடாமல்
துடிப்பான பிள்ளைகளையும் தூரத்தில் எறிந்துவிட்டோம்.
திறமை கொண்ட பலரை
வறுமை துரத்தி, வழியின்றி,
விட்டுவிட்டோம்.
சாதிக்க வந்த சிலரை
ஆதரிக்க ஆளின்றி
அரைவழியில்
நிறுத்திவிட்டோம்.
பெருங்கனவு சுமந்த பிள்ளைகளை,
கரும்பலகைக்கு முன்னால்
கதிரைபோட்டு இருத்திவிட்டு,
வருங்கால வல்லவரை சிறுவட்டம் வரைந்து,
சிறைப்படுத்தி
விட்டோம்.
வல்ல பல வல்வையின் இளசுகளை,
பொல்லாத போரினிலே,
எல்லையிலே
தொலைத்துவிட்டோம்
வசதி ஏதுமின்றி,
அகதி என்ற பெயரோடு
தகுதிமட்டும் தாங்கிட,
பெருங்கனவு சுமக்குமிந்த,
வருங்கால வல்லவளையும்
கண்டுகொள்ளாமல் கடப்பது கடந்தகால
தவறில்லையா
இல்லாத திறமைதேடி,
எங்கெங்கோ அலையாமல்
இருக்குமிந்த திறமையை,
கைதட்டி எழுப்பிவிட்டால் இவள்,
வான்முட்டி எழுந்திடுவாள்
வல்வை மகள் இவளென,
வாய் பலதைப்
பேசவைப்பாள்.
படகில் வந்ததினால்
கடவுச்சீட்டு இல்லையென்ற,
காந்தி தேசத்தையும்
கண் திறக்க வைத்திடுவாள்.
மற்றோர்போல் இல்லாமல்
மறத்தி இவள் திறமைகண்டு
தூரத்தில் ஒதுங்காமல், உடனிருந்து ஊக்குவிக்கும் இவள்
பெற்றோரை
வாழ்த்திடுவோம்.
வாய்ப்பில்லா வாசலிலே,
ஏய்ப்புக்கள் மத்தியிலும்
வீறாப்பாய் எழுந்து நின்று,
நீர் கிழித்து நீந்துகின்றாள்.
சோராமல் நீச்சலிலே இவள் கொண்ட,
தீராத தாகத்தை
வேறார் பிள்ளையென்று,
பாரா முகமின்றி
எம்பிள்ளை இவளென்று,
ஊரார் எல்லோரும் ஒன்றாக கைதட்டுவோம்.
நிகழ்கால இவள் திறமைகண்டு
வருங்கால வல்வையின் வாரிசுகளும் வரலாறு படைக்க வழியமைப்போம்.