சிரியா இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியமைக்கான ஆதாரங்கள் காணப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா தெரிவித்துள்ளார். இந்த இரசாயனத் தாக்குதல் தொடர்பில் மேலும் முக்கியமான தகவல்கள் திரட்டப்பட வேண்டியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சிரியாவில் இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டமை தொடர்பான சாட்சியங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாவும், இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இராஜதந்திர மற்றும் இராணுவ அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஹெலிகொப்டர் மூலம் சிரிய படையினர் இரசாயன ஆயுதங்களைக் கொண்டு மக்களை தாக்கியதாக பி.பி.சீ ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. எவ்வாறெனினும், இந்தக் குற்றச்சாட்டுக்களை சிரியா முழுமையாக நிராகரித்துள்ளது.
சிரியாவில் இடம்பெற்று வரும் உள்நாட்டு வன்முறைகளினால் இதுவரையில் சுமார் 80000 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.