சிரியாவுக்கு எதிரான தீர்மானம் வாக்களிக்காமல் தவிர்த்தது இந்தியா

சிரியாவுக்கு எதிராக ஐ.நா. பொதுச் சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்ட போது இந்தியா வாக்களிக்காமல் தவிர்த்து விட்டது.

சிரியாவில் அதிபர் அஸாத் தரப்புக்கும் கிளர்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. இதில் சிரிய அரசு கனரக ஆயுதங்களை பயன்படுத்தி தாக்கி வருகிறது. பல்வேறு மனித உரிமை மீறல் சம்பவங்களிலும் ஈடுபடுகிறது. சிரியாவில் விரைவில் அமைதியான முறையில் அரசியல் மாற்றம் நிகழ வேண்டும் என வலியுறுத்தி அரபு மற்றும் அமெரிக்க ஆதரவு நாடுகள் சிரியாவுக்கு எதிராக ஐ.நா. பொதுச் சபையில் தீர்மானம் கொண்டு வந்தன.

தீர்மானத்துக்கு ஆதரவாக 107 நாடுகள் வாக்களித்தன. ரஷியா உள்பட 12 நாடுகள் எதிர்த்து வாக்களித்தன. இந்தியா உள்பட 58 நாடுகள் தீர்மானம் தொடர்பாக வாக்களிக்காமல் தவிர்த்து விட்டன.

இதுதொடர்பாக ஐ.நா.வுக்கான இந்திய தூதர் அசோக் குமார் முகர்ஜி கூறியதாவது:

தன்னிச்சையாக எடுக்கும் நடவடிக்கையால் சிரியாவில் தீர்வு ஏற்படாது. இதனால் பிரச்னை தான் அதிகரிக்கும். சிரியா மற்றும் சுற்றுப்புறங்களில் மேலும் பதற்றத்தை அதிகரிக்கும்.

சிரியாவில் அரசியல் மாற்றம் குறித்து அந்நாட்டு மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

சிரியாவின் ஒருமைப்பாடு, சுதந்திரம் பாதிக்காத வகையில் அனைத்து தரப்பினரும் பங்கேற்கும் அரசியல் நடைமுறையை பின்பற்ற வேண்டும்.

அனைத்து தரப்பினரும் வன்முறையைக் கைவிட்டு, அமைதியான பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும் என்றார் முகர்ஜி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *