சென்னை: சுற்றுலா விசாவில் சவுதிக்கு வேலைக்குச் சென்று கைது செய்யப்பட்ட இந்தியர்களில் 95 பேர் இன்று தாயகம் திரும்பியுள்ளனர். சுற்றுலா விசா முடிந்தும், நாடு திரும்பாமல் அங்கு தங்கி பணியில் ஈடுபட்டதாக கூறி, 5 ஆயிரம் இந்தியர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 2 மாதங்களாக அவர்களில் பலரும் மத்திய அரசின் முயற்சியில் நாடு திரும்பி வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய தூதரகத்தின்முயற்சியில் விடுதலையான 95 இந்தியர்கள் இன்று சென்னை விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தனர். சிறையில் சவுதி அரேபிய போலீசாரால் அடித்து துன்புறுத்தப்பட்டதாகவும் தங்கள் பணத்தை அவர்கள் பிடுங்கிக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு, ஆந்திரா, ராஜஸ்தான், பீகார் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த அவர்கள் ஏஜென்டுகள் உதவியுடன் சவுதி அரேபியாவிற்கு பணிக்கு சென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.