Search

மட்டக்களப்பு செல்லக் கதிர்காம ஆலயத்தின் 19 விக்கிரகங்கள் உடைத்து கொள்ளை- மேலும் இரு கோயில்களில் திருட்டு

மட்டக்களப்பு, கல்முனை, குருக்கல்மடம் பிரதான வீதியிலுள்ள களுவாஞ்சிக்குடி ஸ்ரீ செல்லக் கதிர்காமம் ஆலயத்தின் 19 விக்கிரகங்கள் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளன.

நேற்றிரவு 10 மணியளவில் கோயிலின் விக்கிரகங்கள் இனந்தெரியாதோரினால் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதாக ஆலய பூசகர் தெரிவித்தார்.

இதன்போது ஆலயத்திலிருந்து பெரும்பாலான விக்கிரகங்கள் சேதமாக்கப்பட்டுள்ளதுடன் 19 பவுண் நகைகளும் கொள்ளையிடப்பட்டுள்ளன.

இதேவேளை இச்சம்பவம் தொடர்பில் கேள்வியுற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான  பொன்செல்வராசா, பி.அரியநேத்திரன், சி.யோகேஷ்வரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விஜயம் செய்துள்ளனர்.

களுவாஞ்சிக்குடி பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த ரத்நாயக்க கோயிலுக்குச் சென்று இச்சம்பவம் குறித்த விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.

 

மட்டக்களப்பில் மேலும் உரு கோயில்களில் திருட்டுச் சம்பவம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மேலும் இரண்டு இந்துக் கோயில்களில் நேற்று இரவு திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதி, மாங்காடு கிராமத்தில் அமைந்துள்ள பிள்ளையார் ஆலயத்தில் மூல விக்கிரகம் மற்றும் நவக்கிரகங்கள் என்பன உடைக்கப்பட்டுள்ளன.

இவ்விடயம் தொடர்பாக களுவாஞ்சிகுடி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

இதேவேளை, கிரான்குளம் கிராமத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள ஐயனார் ஆலயத்திலும் உண்டியல் உடைக்கப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

 




Leave a Reply

Your email address will not be published.