Search

வடக்கு -கிழக்கு இணைந்த தீர்வுக்கு, யாருடனும் பேச்சு நடத்த நாங்கள் தயார்!- இரா.சம்பந்தன்

தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கை இணைத்து சர்வதேச மத்தியஸ்துடனான நிரந்தர தீர்வையே எதிர்பார்த்து நாம் பயணிக்கின்றோம். இதற்காக யாருடனும் பேச்சு நடத்த தயாரகவுள்ளோம். ஆனால் உப்புச்சப்பற்ற தீர்வை நாம் ஒரு போது ஏற்கமாட்டோம். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கிளிநொச்சியில் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான இலங்கை தமிழரசுக் கட்சி செயற்குழு கூட்டம் கிளிநொச்சியில் இடம்பெற்ற போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கிளிநொச்சி கரைச்சிப் பிரதேச சபை மண்டபத்தில் ஆரம்பமான இக்கூட்டத்தில் தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் உயர் மட்டக்குழு உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தின் ஆரம்பத்தில் தலைமை உரையாற்றும் போதே சம்பந்தன் எம்.பி மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன் போது அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு,

இந்நாட்டில் சுமார் 60 வருடங்களுக்கு மேலாக தமிழர் உரிமைக்காக நாம் போராடிக் கொண்டிருக்கிறோம். இலங்கை அரசு மீது எமக்கு நம்பிக்கை இல்லாதபடியால் தான் சர்வதேச மத்தியஸ்தத்துடனான நிரந்தர தீர்வை எதிர்பார்த்து நாம் பயணிக்கின்றோம்.இந்த நிரந்தர தீர்வு தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கு இணைந்து இருக்கவேண்டும்.

இதற்காக நாம் யாருடனும் பேச்சு நடத்த தயராகவுள்ளோம். ஆனால் உப்புச்சப்பற்ற தீர்வை நாம் ஒரு போதும் நாம் ஏற்கமாட்டோம். இந்த உப்புச்சப்பற்ற தீர்வுகள் எம்மை மீண்டும் அடிமைகளாக்கும்.

மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசுகள் மாவட்டத்திற்குள்ளயே தமிழருக்கான தீர்வை முன்வைக்க முயன்றன. இதனால் தான் நாம் தற்போது மிக அவதானத்துடன் செயற்படுகின்றோம்.

தமிழ் மக்களை நாம் ஒரு போதும் நடுத்தெருவில் கைவிடமாட்டோம் நாம் அனைவரும் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும். இந்த ஒற்றுமையானது தமிழ் மக்களுக்கிடையிலும் தமிழ்க் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையிலும் இடம்பெறவேண்டும். என்றுமில்லாதவாறு இலங்கை அரசு மீது சர்வதேசத்தின் அழுத்தம் அதிகரித்துள்ளது.

அதேவேளை வடக்கு, கிழக்கில் இராணுவத்தின் ஆக்கிரமிப்பினால் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை சர்வதேச சமூகமும் நன்றாக அறிந்து கொண்டுள்ளது. எனவே சர்வதேச சமூகத்தின் பிடியிலிருந்து இலங்கை அரசு ஒரு போதும் தப்பமுடியாது.

தமிழருக்கான நிரந்தரத் தீர்வை சர்வதேச மத்தியஸ்தத்துடன் என்றோ ஒரு நாள் இலங்கை அரசு வழங்கியே தீரவேண்டும். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை.

நாடாளுமன்ற தெரிவிக்குழுவில் எமக்கு நம்பிக்கையில்லை.

இதேவேளை இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக தான் நியமித்த நாடாளுமன்ற தெரிவிக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்க வேண்டும் என்றும் இலங்கை அரசு தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றது. ஆனால் அதில் எமக்கு நம்பிக்கையில்லை.

ஏனெனில் வன்னியில் இறுதி யுத்தம் முடிவடைந்த பின்னர் அரசு எம்முடன் பல சுற்றுப் பேச்சுக்களை நடத்தி இறுதியில் தீர்வு எதனையும் முன்வைக்காமல் குழப்பியடித்தது.

இதனையடுத்துத் தான் நாடாளுமன்ற தெரிவுக்குழுவை அரசு அமைத்தது. ஆனால் இந்தக்குழுவில் அரசதரப்பில் 19 பேருக்கும், எதிர்த்தரப்பில் 12 பேருக்கும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அரச தரப்பில் உள்ள எவரும் தமிழருக்கான தீர்வை முன்வைப்பதில் இதயசுத்தியுடன் செயற்படுவார்கள் என்ற நம்பிக்கை எமக்கு இல்லை.

எனவே தான் அரசு நியமித்த நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் நாம் பங்கேற்கவில்லை என்றும் தெரிவித்தார். சம்பந்தன் எம்.பி.

2ம் இணைப்பு

கூட்டமைப்புக்குள் ஏனைய கட்சிகளையும் உள்வாங்க திட்டம்

தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் 5 கட்சிகளுக்கு மேலதிகமாக, மேலும் பல அரசியல் கட்சிகளை உள்வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.   அண்மையில் கிளிநொச்சியில் இடம்பெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் கூட்டத்தின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.   தற்போதைய அரசியல் சூழ்நிலையில், தமிழ் கட்சிகளுக்கு இடையிலான ஒற்றுமையைப் பேண வேண்டியது மிகவும் அவசியமானதாகும்.   இதன்படி, தமிழ் தேசியத்துக்கு ஆதரவான ஏனைய அரசியல் கட்சிகளையும், தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைத்துக் கொண்டு ஒரே கட்சியாக செயற்படுவதென்று முடிவு செய்யப்பட்டுள்ளது.   ஏற்கனவே தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையில் பொது இனக்கப்பாடு ஒன்றை ஏற்படுத்துவதற்கான வழிமுறைகள் தொடர்பில் ஆராய்வதற்கான குழு ஒன்றும் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *