‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு’ என்ற பெயரில் கட்சி ஒன்றினைப் பதிவு செய்து தேர்தல் களத்தில் இறக்குவதற்கான நடவடிக்கையினை அரசாங்கம் மேற்கொண்டிருப்பதாக தகவல் ஒன்று வெளியாகியிருக்கின்றது.
நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பில் தீவிரமாக ஆலோசித்துவருகின்ற ஆளுந்தரப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரிலான கட்சி ஒன்றினைப் பதிவு செய்து அதில் முன்னாள் போராளிகளை வேட்பாளர்களாக களம் இறக்குவது என தீர்மானித்திருப்பதாக அந்தத் தகவல் மேலும் தெரிவித்துள்ளது.
தற்போது அரசியல் களத்தில் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் பெறுகின்ற கூட்டுக்கட்சிகளுக்குள் ஏற்பட்டுவருகின்ற முரண் நிலைகள் காரணமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைப் பதிவு செய்வதில் இழுபறி நிலை தொடர்ந்து வருகின்றது.
இந் நிலையில் நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலில் ‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு’ என்ற பெயரில் முன்னாள் போராளிகளை களம் இறக்குவதன் மூலம் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளமுடியும் அல்லது வாக்குகளைச் சிதறிக்க முடியும் என்று அரசு கருதுவதாக அறிய முடிகின்றது.
அதேவேளை ‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு’ என்ற பெயரில் கட்சி ஒன்று பதிவு செய்யப்பட்டு தேர்தலில் முன்நிறுத்தப்படுகின்ற போது இயல்பாகவே தமிழரசுக்கட்சி ஏனைய கட்சிகளில் உள்ளவர்களை தமது கட்சியில் இணையுமாறோ அல்லது அவர்களை வெளியேற்றவோ முற்படலாம் என்பதால் தமிழ் மக்களின் பலத்தினை சிதறடிப்பதில் அரசு தனது கூடுதல் இலக்கை அடையப்போவதில் மாற்றமில்லை என்கின்றனர் நோக்கர்கள்.