வட மாகாணத்திற்கு தேர்தல் ஒன்று அறிவிக்கப்பட்டால் தேர்தல் அறிவிக்கப்படும் தினத்தில் வடக்கில் இருந்து இராணுவம் முழுதும் வாபஸ் பெறப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. அவ்வாறு இல்லாவிட்டால் வடக்கில் ஜனநாயகமான தேர்தல் இடம்பெறாது, ஜனநாயத் தேர்தலை எதிர்பார்க்கவும் முடியாது என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் இன்று (06) சமர்பிக்கப்பட்ட வாக்காளர் பதிவு விசேட ஏற்பாடுகள் சட்டமூல விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
சர்வதேசத்தின் அழுத்தங்கள் காரணமாகவே வட மாகாண சபைக்கு தேர்தல் நடாத்த அரசு உத்தேசித்துள்ளதாக அரசு தரப்பினரே ஒப்புக் கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் வாக்காளர் பதிவு சட்டமூலம் கொண்டுவர காரணம் என்ன என கேள்வி எழுப்பிய சுரேஸ் பிரேமச்சந்திரன், வடக்கில் அதிகாரத்தை கைப்பற்ற அல்லது அதிக ஆசனங்களை கைப்பற்றவே இவ்வாறான முயற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டார்.
இந்திய – இலங்கை ஒப்பந்தம் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணவே அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் அதில் உள்ள 13ம் திருத்தம், மாகாண சபை முறைகளை இல்லாதொழிக்க அரசு முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.